Tuesday 3 December 2013

அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை

(சொல்வனம் இதழில் ஜெயமோகனின் புதிய நாவலுக்கு எழுதிய அறிமுகம். நல்ல புகைப்படங்களை இணைத்திருக்கிறார்கள்)

யானை பிரம்மாண்டமானது. மூர்க்கமடைந்த யானை எதிர்ப்படும் எல்லாவற்றையும் முட்டிப் பெயர்க்கும். அத்தனை பிரம்மாண்டமான காட்டு விலங்கு ஒற்றை சிறிய சங்கிலியில் கட்டப்பட்டு நோஞ்சான் மனிதன் அதன் வாயில் ஊட்டும் கவளச் சோற்றுக்காக காத்திருப்பது அவிழ்க்க இயலாத பிரபஞ்சப் புதிர்களில் ஒன்றுதான்.

யானை தன் ஆற்றலை உணர்வதில்லை. அச்சம் அடிமைத்தனத்தைப் பேணி வளர்க்கிறது. பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் மட்டும்தான் அஞ்சவேண்டும் என்பதில்லை, காலைச் சுற்றிப்படர்ந்திருக்கும் இலகுவான சங்கிலியாகக் கூட இருக்கலாம். இந்த தேசமும் அதன் மக்களும் உண்மையில் அப்படிப் பழக்கப்பட்ட யானைகள்தான். கரிய பிரம்மாண்டமான கம்பீரமான யானை. நோஞ்சான் வெள்ளை எஜமானர்கள் ஊட்டும் அழுகிய வாழைப்பழங்களுக்காக காலமெல்லாம் காத்திருக்கும் யானை.


எழுத்து பிரசுர வெளியீடாக வந்திருக்கும் ஜெயமோகனின் புதிய நாவல் வெள்ளையானை மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின் பின்னணியை ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பார்வையில் விரித்து எடுக்கிறது.
George_Curzon_and_Mary_Curzon_on_the_elephant_Lakshman_Prasad_1902-12-29_in_Delhi

George_Curzon_and_Mary_Curzon_on_the_elephant_Lakshman_Prasad_1902-12-29_in_Delhi

சென்னையில் வெள்ளை நகரம் கருப்பு நகரம் எனும் பகுப்பு இருந்ததாகப் பதிப்புரையில் சொல்கிறார் பதிப்பாசிரியர் அலெக்ஸ். வெள்ளையர்கள் மட்டும் வாழ்ந்த பகுதிகள் வெள்ளை நகரம், அவர்களுக்கு பணிசெய்த உள்ளூர்வாசிகள் வாழ்ந்தது கருப்பு நகரம். இந்த நாவல் இதுவரை ஆவணப்படுத்தபடாத கருப்பு நகரத்தின் கதையைப் பேசுகிறது. கருப்பு நகரம் பஞ்சம் பிழைக்க வந்த அகதிகளால் நிரம்பி வழியும் இருண்ட பிரதேசம். கருப்பு நகரம் எல்லாவற்றையும் தன்னால் செரித்து வெறுமையையும் இருட்டையும் மட்டும் வெளியில் காட்டும் பாதாளம்.

ஐரிஷ்காரரான கேப்டன் ஏய்டன் பிரித்தானிய ராணுவத்தில் பணிபுரிய சென்னை வருகிறான். அங்கு அவன் இந்திய சமூகத்தின் மிக கோரமான முகத்தை காண்கிறான். ஏய்டன் கனவுகளில் உயிர்த்திருப்பவன். ஷெல்லியின் மீது தணியாக் காதல் கொண்டவன். நீதியுணர்ச்சி துளிர்த்திருக்கும் வெகுசில ஆங்கிலேய அதிகாரிகளில் ஒருவன். நாவலின் மிக வலுவான பாத்திரப் படைப்புகளில் ஏய்டனும் ஒன்று. எங்கோ பிறந்து வளர்ந்து சூரியன் அஸ்தமனம் ஆகாத பிரித்தானிய ராணுவத்துடன் தன்னைக் கரைத்துக் கொண்டவன். ஏய்டன் ஆங்கிலேய அரசால் ஒடுக்கப்பட்ட ஐரிஷ் சமூகக் குழுவினன் என்பது நாவலுக்கு மேலும் ஒரு பரிமாணத்தை. அளிக்கிறது. ஜெயமோகனின் நாவல்களை தொடர்ந்து வாசித்து வருபவருக்கு நாவலின் மையப் பாத்திரத்தின் குணாதிசயங்கள், மற்றும் அவனது அறச் சிக்கல்கள் பற்றிய புரிதல் இருக்கும். பிங்கலன், சங்கர்ஷணன், அருணாச்சலம், கிரியின் வரிசையில் ஏய்டனும் கச்சிதமாக பொருந்திப் போகிறான்.
சென்னையில் வெள்ளை நகரம் கருப்பு நகரம்

சென்னையில் வெள்ளை நகரம் கருப்பு நகரம்

ஐஸ் ஃபேக்டரி தொழிலாளர்கள் இருவர் ஒரு கங்காணியால் கடுமையாக வதைக்கப்படுவதைக் காண்கிறான் ஏய்டன். அதைப் பற்றி விசாரிக்கும் போது அவன் காத்தவராயனைச் சந்திக்க நேர்கிறது. வாயு விளக்குகளால் ஒளிரும் நகரத்திற்கு அப்பால் உள்ள இருண்ட சேற்றுக் குழியில் பயணிக்கிறான். பஞ்சத்தின் மைய நிலப் பகுதிக்குள் பயணிக்கிறான். உடைந்து சுக்குநூறாகி மீண்டேழுகிறான். ஒரு பக்கம் ஊழல் மிகுந்த பிரித்தானிய நிர்வாகம் பஞ்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது; மறுபக்கம் இந்திய மேட்டுக்குடி அந்த ஊழலின் சுரண்டல்களில் தனக்கான பங்கைக் கோரி நிற்கிறது. இந்த விசித்திரமான உயிர் குடிக்கும் கூட்டணி பருகிச் சென்ற உயிர்களின் சாட்சியாகக் கையறு நிலையில் நிற்கிறான் ஏய்டன். பஞ்சம் பற்றிய அவனது உருக்கமான அறிக்கை பக்கிங்காம் பிரபுவால் அவருக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளப் படுகிறது. இறுதியில் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. வரலாற்றின் முதல் எதிர்குரல் பதிவாகிறது. திருப்பித் தாக்கிவிடவில்லைதான், ஆனால் தன்னைச் சுழற்றி வீசி எறியப் புறப்பட்ட அநீதி சாட்டையை மறிக்கத் துணிவு பிறந்தது. மாற்றத்திற்கான முதல் விதை கண் விழித்த வரலாற்றுத்தருணம். ஏய்டன் கனவுகண்டது நடந்தது ஆனால் அந்த வரலாற்றுத்தருணம் அவனை மீறிய கரங்களால் அவனைக்கொண்டே முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது. கொந்தளிப்பின் உச்சத்தில் அவன் தன்னை மாய்த்துகொள்ளத் துணிந்து பின்னர் உயிர்பிழைக்கிறான். மரிசா கைவிடுகிறாள். காத்தவராயன் புரிந்துகொள்கிறான். பதவி உயர்வு பெற்று எங்கோ ஒரு மூலையில் சென்று குடித்து அழிகிறான்.

அயோத்திதாச பண்டிதரின் வார்ப்பாக உருவாகி நிற்கும் நாவலின் மற்றொரு முக்கியமான பாத்திரம் காத்தவராயன். Bஏடனுக்கும் காத்தவராயனுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்கள், முரஹரி ஐயங்காரை அவன் எதிர்கொள்ளும் தருணம், முறையாகப் பயின்ற வைணவத்தைக் கைவிட்டு பௌத்தத்தைத் தழுவும் தருணம் ஆகியவை அபாரமான சித்திரத்தை அளிக்கின்றன. ஐஸ் ஃபேக்டரி தொழிலாளர் தலைவனாக வரும் கருப்பன், வண்டியோட்டியாக வரும் ஜோசெப், பஞ்சத்தை ஏடனுடன் பயணித்துக் காணும் ஆண்ட்ரூஸ், ஐஸ் ஃபேக்டரியின் அமெரிக்க மேலாளர் பார்மர், ஆஸ்திரிய பாதிரி ப்ராண்ணன்,  ஆங்கிலோ இந்திய பெண் மரிசா போன்ற துணைப் பாத்திரங்களும் மிக வலுவாகப் படைக்கப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வருந்தும் ஏடனும், பாதிரியும், பார்மரும், டாக்டர் சிம்சனும் ஒரு வகையான வெள்ளையர்கள் என்றால் பக்கிங்காம் டியூக்கும், ரஸ்ஸளும், மேக்கின்சியும் வேறுவகை வெள்ளையர்கள். நீலமேகமும், நாராயணனும், முரஹரி ஐயங்காரும், செட்டிகளும் ஜாதி இந்துக்களின் ஒடுக்கும் தரப்பு, பஞ்சத்தை சாதகமாக ஆக்கிக்கொள்ள துடிக்கிறார்கள். அதை ஒரு வணிக அபிவிருத்திக்கான வாய்ப்பாக பார்க்கும் டியூக்கின் தரப்பு. ஆனால் ஜாதி இந்துக்களிலிருந்து ஒடுக்கப்படும் மக்களின் தரப்பாக அன்று ஒரு குரல் கூட ஒலிக்கவில்லை (அல்லது பதிவாகவில்லை) என்பதை எண்ணும் போது மனம் நிலைகொள்ளாமல் வேதனையில் தவிக்கிறது. இத்தனை மரணங்கள், கொடூரங்கள் அன்று எவரின் ஆன்மாவையும் சீண்டவில்லையா? எவரையும் இம்மிகூட அசைக்கவில்லையா?

இந்தியாவில் ஏடன் எதிர்கொள்ளும் முதல் நிகழ்வே நமக்கு ஒரு வரலாறைச் சொல்லிவிடுகிறது. இரண்டு தொழிலாளர்களை அடித்து உதைக்கிறான் ஒரு கங்காணி. ஏடன் அதை தடுத்து நிறுத்துகிறான். அவர்கள் ஏடனிடம் நன்றி நவில முயல்கிறார்கள். எழுந்து நிற்கத் தடுமாறும் அவர்களுக்கு உதவுமாறு ஏடன் இடும் ஆணையைக் கங்காணி பணிவாகவும் உறுதியாகவும் மறுக்கிறான். இந்த நிகழ்வு சடாரென்று நமக்கு பல விஷயங்களை காட்டுகிறது. சமூகப் படிநிலையை, ஆங்கிலேய நிர்வாகத்தின் மீது ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்ட நம்பிக்கையை, ஜாதி இந்துக்கள் மீது அவர்கள் கொண்ட அவநம்பிக்கையை, ஜாதி இந்துக்களுக்கு இருக்கும் தீராத வன்மத்தை இப்படிப் பல விஷயங்கள் தெளிவாகின்றன. ஆங்கிலேய அரசின் ஆகச் சிறந்த கொடை என்பது அவர்கள் விட்டுச் சென்ற நீதி அமைப்புதான். அந்த நீதி அமைப்பிற்கும், அவர்கள் விட்டுச் சென்ற சாலைகள் போன்ற உட்கட்டமைப்புகளுக்கு ஆயிரம் உள்நோக்கங்கள் இருக்கலாம் ஆனால் ஏட்டளவிலாவது மகாராணியின் பிரஜைகளைச் சமமாக நடத்த அது அறிவுறுத்துகிறது. ஏழை எளிய மக்கள் ஆங்கிலேயர்களின் நீதியுணர்வை நம்பினர். ஃபைசல் தேவ்ஜி காந்தியைப் பற்றி எழுதிய Impossible Indian எனும் நூல் 1857 ஆம் ஆண்டு வெடித்த சிப்பாய் கலகத்தைப் பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கிறது. ஆங்கிலேய ராணுவத்தில் இடம் பெற்றிருந்த ஜாதி இந்துக்களும் இஸ்லாமியர்களும் அவர்களுடைய ஆதிக்கத்தை எண்ணி அஞ்சவில்லை. ஆங்கிலேய அரசு தங்கள் மத நம்பிக்கைகளை, வழக்கங்களை மாற்றி கலாசாரப் பன்மையை ஒழித்து அவர்கள்ப்போல் எல்லோரையும் ஒற்றை நிறமாக ஆக்கிவிடக்கூடும் என அஞ்சினர் என்கிறார். ஜாதி இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றிணைந்து தங்கள் அமைப்புகளைப் பேணும் உரிமையைக் கட்டிக்காக்க வேண்டியே போராடினர். இந்த பின்புலத்தில் பிற்கால விடுதலைப் போராட்டங்களில் அவர்களின் ஆங்கிலேய எதிர்ப்பையும் தலித் மக்களின் ஆங்கிலேயச் சார்பையும் நாம் புரிந்துகொள்ளக் கூடும்.

ஜெயமோகன் மிக முக்கியமான ஒன்றை இந்நாவலில் நிகழ்த்தியிருக்கிறார். பொதுவாகவே ஜாதி இந்துக்களின் கீழ்மைகளை உக்கிரமாக எதிர்க்க வேண்டிய அவசியத்தில் முன்வைக்கப்படும் தலித் தரப்பு வாதங்கள் ஆங்கிலேயர்களை விதந்தோதும் தொனியில் ஒலிப்பதே வழக்கம். ஆனால் வசதியாக இந்தப் பெரும் பஞ்சமும் அது கொண்டு சென்ற பெரும்பாலான அடித்தட்டு மக்களின் உயிர்களுக்கும் பொறுப்பற்ற ஆங்கிலேயச் சுரண்டல் நிர்வாகம் தான் காரணம் என்பதை மறந்துவிடுவார்கள். ஜெயமோகன் ஆங்கிலேய ஊழல் நிர்வாக அமைப்பை படம் பிடித்துக் காட்டுகிறார். அவருடைய பல கட்டுரைகளின் பேசுபொருளாக இருப்பவைதான். அவர்களின் நோக்கங்களையும், வழிமுறைகளையும், அதற்கு அவர்கள் உருவாக்கிக்கொண்ட அபத்த நியாயங்களைப் பற்றியும் நாவலில் மிக விரிவாக விவாதிக்கிறார். கடுமையான விமர்சனங்களை ஆங்கிலேய அரசின் மீதும் நிர்வாகத்தின் மீதும் வைத்த வண்ணம் இருக்கிறார். சக இந்தியர்கள் இந்த பெரும் பட்டினிச் சாவைப் பொருட்படுத்தாமல் இருந்ததையும் ஆழமாகக் கவனப்படுத்துகிறார். அவர்களும் தங்கள் பங்கிற்கு சுரண்டலுக்கு ஒத்துப் போனதையும் பதிவு செய்கிறார். இந்த இரண்டு புள்ளிகளையும் இயைந்து கொண்டு செல்கிறார். காத்தவராயன் ஏடனிடம் உரையாடுவதைக் கவனித்தால் இது தெளிவாகிறது.

“உண்மை சார், பஞ்சத்தை கொண்டுவந்தது நீங்கள் தான். இப்போதுள்ள இந்த பஞ்சம் மழை பொய்த்ததனால் மட்டும் வரவில்லை. மண் பொய்த்ததனால் மட்டும் வரவில்லை. வேறு இடங்களில் இருந்து வரவேண்டிய விளைச்சலை முழுக்க நீங்கள் அள்ளிக்கொண்டு செல்வதனால் வந்தது……

நீங்கள் எங்களுக்கு அளித்த இந்தப் பஞ்சங்களுக்காகவும் உங்களுக்கு நன்றி சொல்கிறோம். ஏனென்றால், அத்தனைக்கும் மேலாக நீங்கள் எங்களுக்கு உங்களுடைய கல்வியில் ஒரு துளியைக் கொடுத்தீர்கள். உங்களுடைய மொழியில் ஒரு வாசலைத் திறந்து வெளியுலகத்தைக் காட்டினீர்கள். எங்களுக்கும் மானுட நீதி கிடைக்க வாய்ப்புண்டு என்று எங்களிடம் முதன்முதலாகச் சொன்னீர்கள். நாங்களும் மனிதர்களே என்று உங்களில் சிலரேனும் நடந்து கொண்டீர்கள். ஆகவே, உங்களுடைய எல்லா சுயநல நோக்கங்களுடனும், அயோக்கியத்தனங்களுடனும், தந்திரங்களுடனும், கொடுமைகளுடனும் கூட நீங்கள் மானுட தெய்வங்கள்தான்.”

நாவலில் இடம்பெற்றுள்ள பஞ்ச காலத்து புகைப்படங்களும் ஓவியங்களும் நாவலின் ஆவணத்தன்மையை மேலும் வலுவாக்குகின்றன. ‘படம் பார்த்துக் கதை சொல்’ என்பது போல் துருத்தி நிற்கும் எலும்புகள் மீது தோலை எவரோ உருக்கி ஊற்றியது போல், உப்பிய வயிறுகளும், சூம்பிய கால்களும், அதற்கப்பால் ஒளிவிடும் அந்த கண்களும் நமக்கு எல்லா ரகசியங்களையும் சொல்லி விடுகின்றன. நாவலின் மிக உக்கிரமான பகுதி என்பது ஏடன் பஞ்சத்தைப்பற்றி தனது அறிக்கையை தயாரிக்க கோச்சு வண்டியில் வழித்துணையாக வந்த ஆண்ட்ரூசையும் ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டிற்கு செல்லும் பகுதிதான். சாலைகளில் கையேந்தி அரற்றும் மக்கள், வண்டியையும் வெள்ளைத் தோல் மனிதனையும் கண்டதும் ஒளிவிடும் கண்களுடன் ரொட்டித் துண்டுக்காக உயிரின் கடைசி துளி ஆற்றலையும் திரட்டிக்கொண்டு வரும் ஜீவன்கள், குடல்களை உருவி உணவாக்கி கொண்டிருக்கும் நாய் நரிகள், பிணங்களாலும், பிணமாகிக் கொண்டிருப்பவர்களாலும் நிறைத்திருக்கும் சாலைகள். இத்தகைய பயணம் என்பது எவரையும் உடைத்து நொறுக்கிவிடும். வாழ்க்கையின் அர்த்தமின்மை அப்பட்டமாகப் புலன்களுக்குத் துலங்கும். “சாவதற்கு நாங்கள் எப்போது வாழ்ந்தோம்” எனும் கேள்வி மீண்டும் மீண்டும் உள்ளத்தை குத்திக் கிழிக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் கடந்து, எங்கோ எப்பொழுதோ ஒரு புள்ளியில் மனிதர்கள் வெறும் புள்ளி விவரங்களாகவும், மரணங்கள் வெற்று எண்ணிக்கைகளாகவும் கணக்குகளாகவும் மற்றுமொரு சம்பவமாகவும் மாறி விடுகின்றன. ஆனால் மனிதனுக்கு வேறு மார்க்கமும் இல்லை. அவனும் சித்தத் தெளிவுடன் பிழைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு இருக்கிறதே!

பேரழிவை வெறும் தகவல்களாக மாற்றிய ஏடன் ஊர் திரும்பி அறிக்கை எழுதுகிறான். இன்னும் அவர்களை மனிதர்களாக கண்ட ஆண்ட்ரூ ரொட்டித் துண்டுகளை வீசி, இறங்கி அந்த ஜனத் திரளில் கரைத்துக்கொள்கிறான்.
Famine_in_India_Natives_Waiting_for_Relief_in_Bangalore

Famine_in_India_Natives_Waiting_for_Relief_in_Bangalore

நாவலின் இறுதியில் தென்காசிக்கு மாற்றலாகிப்போகும் ஏடன், தான் தேவாலயத்திற்குச் செல்லாததன் காரணத்தை சொல்கிறான். “தன்னுடைய இயேசுவை ஒரு வெள்ளையானை மிதித்துக் கொன்றுவிட்டது” என்கிறான். காத்தவராயனின் பள்ளிக்கொண்ட பெருமான் தம் மக்களை வெள்ளையானை மிதித்துக் கொல்வதை  சயனித்து ஓரக்கண்ணால் ரசிக்கிறான். நியு இங்கிலாந்து ஏரியிலிருந்து வெட்டி வரப்படும் பனிபாளங்கள்தான் அந்த வெள்ளையானை. மூர்க்கமான வெள்ளை யானை வழுக்கி சென்று மனிதர்களை மத்தகத்தால் தூக்கி உதிரம் தெறிக்க வீசும் வெள்ளையானை. ஆனால் ஏடனின் நீதியுணர்வு அதிகாரம் எனும் நுண் தளைகளால் கட்டப்பட்டிருந்தது. இந்திய மக்களை இந்த நிலப்பரப்பைச் சுரண்டிக் கொழுத்த மக்களின் மத்தியில் நீதியுணர்வு கொண்ட ஏடன்கள் எதற்கோ அஞ்சி, எதற்கோ கட்டுப்பட்டு காலம் தள்ளினார்கள். ஆம், நீதியுணர்வு கொண்ட அந்த வெள்ளை மக்களின்  மனச்சாட்சி தான் தன் தளைகளை அறுத்துக்கொள்ள இயலாத வெள்ளையானை. அதுமட்டுமல்ல, இன்றும் சக மனிதர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு வெறும் ஓரக்கண்ணால் சாட்சியாக அறவுணர்வு அற்றுத் தூங்கி வழியும் சமூகமும் கூட ஒரு வெள்ளையானை தான்.

ஜெயமோகன் தன்னுடைய முன்னுரையின் இறுதியில் எழுதுகிறார்

“உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். மறுபக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே.நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும். இந்த நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது. எங்கே நம் நீதியுணர்ச்சி என இன்றாவது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். வரலாற்றில் அணையாது கிடக்கும் அந்த அனல் மீது நம் சமாளிப்புகளையும் வெட்டி தர்க்கங்களையும் அள்ளிப் போட்டு மூடிவிடக் கூடாது.

மிகத் துல்லியமாக நாவல் இவ்வுணர்வை நம்முள் எழுப்பி நம்மை கூசி குறுக வைக்கிறது.


No comments:

Post a Comment