Tuesday, 3 December 2013

அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை

(சொல்வனம் இதழில் ஜெயமோகனின் புதிய நாவலுக்கு எழுதிய அறிமுகம். நல்ல புகைப்படங்களை இணைத்திருக்கிறார்கள்)

யானை பிரம்மாண்டமானது. மூர்க்கமடைந்த யானை எதிர்ப்படும் எல்லாவற்றையும் முட்டிப் பெயர்க்கும். அத்தனை பிரம்மாண்டமான காட்டு விலங்கு ஒற்றை சிறிய சங்கிலியில் கட்டப்பட்டு நோஞ்சான் மனிதன் அதன் வாயில் ஊட்டும் கவளச் சோற்றுக்காக காத்திருப்பது அவிழ்க்க இயலாத பிரபஞ்சப் புதிர்களில் ஒன்றுதான்.

யானை தன் ஆற்றலை உணர்வதில்லை. அச்சம் அடிமைத்தனத்தைப் பேணி வளர்க்கிறது. பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் மட்டும்தான் அஞ்சவேண்டும் என்பதில்லை, காலைச் சுற்றிப்படர்ந்திருக்கும் இலகுவான சங்கிலியாகக் கூட இருக்கலாம். இந்த தேசமும் அதன் மக்களும் உண்மையில் அப்படிப் பழக்கப்பட்ட யானைகள்தான். கரிய பிரம்மாண்டமான கம்பீரமான யானை. நோஞ்சான் வெள்ளை எஜமானர்கள் ஊட்டும் அழுகிய வாழைப்பழங்களுக்காக காலமெல்லாம் காத்திருக்கும் யானை.

Sunday, 12 May 2013

நக்ர ரேதஸ் - சிறுகதைநண்பர் நட்பாஸ் தளத்தில் வெளியான எனது முதல் சிறுகதை ..


ஜ்வாலையின் நாட்டியம் 
அழைக்கிறது என்னை 
எனக்கோ 
பேழைக்குள் நெளியும் பாம்பும் 
மரணத்தின் குறியீடு.
நெருப்பின் செயல் திறனும் 
பௌதீகப் பயன்பாடும் 
போதுமென்று விலகும்போதும் 
தானாய்ப் பிறந்து சுடர்கிறது 
உள்ளே ஒரு கணப்பு.
-

என்றோ வாசித்த யுவனின் இந்தக் கவிதை மின்சாரமற்ற இந்த நள்ளிரவில் ஏன் எனக்கு நினைவுக்கு வந்தது எனத் தெரியவில்லை. எழுந்து அந்த மெல்லிய பஞ்சு விரிப்பு விரித்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தேன். அதில் அமரும் போதெல்லாம் பாட்டியின் மடியில் தலை சாய்ந்து உறங்கிய நினைவுகள் எழும். சதைப்பற்றில்லாத உடல். எலும்புகள் மீது படரும் வெம்மையான மெல்லிய சதைத்துண்டு. மூங்கில் கழிகள் மீது போர்வை சுற்றி தலைக்கு வைத்துக்கொள்வது போலிருக்கும். டடக் டடக் என எலும்புகள் முடுக்கிக்கொள்ளும் ஒலிக்கூட கேட்கும். இறந்தவர்களையும் பிரிந்தவர்களையும் இருளிளிலும் தனிமையிலும் மனம் துழாவி கைக்கொள்வது வாடிக்கை தான்.

Wednesday, 8 May 2013

மருத்துவர் இல. மகாதேவன் - பிஷக் உத்தமன் (மருத்துவர்களில் தேர்ந்தவன்)சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை 

யோகமாசாம் து யோ வித்யாத் தேஷ கால உபபாதிதம்
புருஷம் புருஷம் வீக்ஷ்ய ச ஞேயோ பிஷகுத்தமஹ
- சரக சம்ஹிதை, சூத்திர ஸ்தானம்

(எவனொருவன் கால – தேச வர்த்தமானங்களை துல்லியமாக அறிந்து, அதற்கேற்ப ஒவ்வொரு நோயையும் பகுத்தறிந்து, ஒவ்வொரு மனிதனுக்குமான தனித்துவமான சிகிச்சை முறைகளை உணர்ந்து, மருத்துவம் செய்கிறானோ அவனே சிறந்த மருத்துவன் (பிஷக் உத்தமன்))

“எனக்கு …,” ஏதோ ஒரு கடும் துவர்ப்பான கஷாயத்தைக் குடித்து முகமும் மனமும் கசந்த முகபாவனையுடன் நிதானமாகச் சொன்னார், “ஆயுர்வேதமே ஒரு க்வாக்கரின்னுகூட அப்பப்ப தோணுறதுண்டு”. அவர் அப்படிச் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான். குழம்பித் திரிந்த அந்த நாட்களில் எனக்குத் தேவைப்பட்ட நம்பிக்கையை யாசித்துச் சென்றிருந்த நான் அவரிடம் அதை எதிர்பார்க்கவில்லை. அவருடைய கண்களை உற்று நோக்கினேன், அதில் குறும்பு மின்னுகிறதோ? அல்லது ஆழத்தை நோட்டம் விடும் கேள்வியா? என்னால் பிரித்தறிய முடியவில்லை. தயக்கமில்லாமல் சொன்னேன், “சார், எனக்கு மருத்துவமே அப்படித்தான்னுதான் கொஞ்ச காலமா தோணுது” அவருக்கே உரிய அதிர்வேட்டு சிரிப்பொன்று அங்கு வெடித்துக் கிளம்பியது.

ayur_dr_mahadevan

Thursday, 10 January 2013

குமிழ் ..


குமிழ் ..


அழுத்தத்தின் அச்சத்தை 
உடைவின் வலியை 
எழுதி எழுதி ஓய்ந்தன என் கரங்கள் .
காற்று கடலாகும் அந்த மாய சுழிப்பின்
களிப்பை எழுதும் 
எனக்கான மகாகவியை
காண காத்துக்கொண்டிருக்கிறேன்..

-நரோபா.

Tuesday, 11 December 2012

ஓர் கனவு

காவிக்கல் சிகப்பு மண் விரவிய மாபெரும் நிலவெளி. முஷ்டி மடக்கி நீண்டிருக்கும் ஒற்றை நடுவிரல் போல் அங்கு ஓர் ஒற்றை பனை மரம். மண் அதிர்கிறது , முள்ளம்பன்றி சிலிர்த்து முட்கள் எழுவது போல் மண்ணிலிருந்து எழுகிறது. மண் விழித்துக் கொண்டுவிட்டது. முட்கள் நிறமற்று இருந்தன, அவை அடர்ந்து பச்சையாகின. பச்சைப்பெருவெளி. பச்சை மா மலைப்போல் மேனி!  பவழவாய் கமல செங்கம். பவழ வாய் எங்கே!? வானில் உருண்ட முந்திரிப்பழம் ஒன்று தெரிந்தது, ஆ..அதோ இருக்கிறது பவழ வாய்..முந்திரிப்பழம் பழுத்து சிவந்து வெடித்தது ..விதை மழை பொழிந்தது. விதை வெடித்து ஒன்று எழுந்தது, அது புற்களை தின்றது, உருண்டு திரண்டு ம்மா வென்று அழைத்தது..ஒரு சேர ஆயிரம் குரல், ஒற்றை சுருதியில் ம்மா....அம்மா தாயே பிரகிருதி..இறங்கி வரமாட்டாயா?  ..உண்டு செரிக்காத இரண்டு கத்திப் புல் காதுக்கு மேலே முளைத்து வளைந்து கொம்பானது. ..பச்சை மறைந்தது..கொதிக்கும் கரிய திரவம் குதத்தின் வழியாக பீறிட்டது ..கரிய சேற்றுக்குழி, குமிழ்கள் தோன்றி மறைகின்றன அதில். மழி ஓய்ந்த பின்னர் பேரிடி ஓசை. குத்தி கிழிக்கப்படுகிறது மண். கொம்பிழுத்து செல்கிறது. செம்மையும் பச்சையும் கருப்பும். ..ஒரு தண்டு தெரிகிறது, அது வளர்கிறது ..நீள்கிறது ..போகிறது..உச்சியில் ஒற்றைப்பூ பூக்கிறது, அது பழுக்கிறது..சிவக்கிறது..ஒளிர்கிறது..மண் சிலிர்க்கிறது ..நனைகிறது..பச்சை துளிர்க்கிறது.

Friday, 23 November 2012

காந்தியும் போப்பும்


காந்தி இன்று தளத்தில் வெளியான மொழியாக்க கட்டுரையின் முழு வடிவம்,,

காந்தி சந்திக்க விரும்பி அவரை சந்திக்க மறுத்தவர்கள் வரலாற்றில் இருவர் மட்டுமே உண்டு. ஒருவர், அந்நாளைய ஆங்கிலேய பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், அவர் காந்தியை எப்படி அணுகினார் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மற்றொருவர் அன்றைய ரோமன் கத்தோலிக்க அமைப்பின் தலைவர், போப் பதினோராம் பயஸ். சுமார் எண்பது வருடங்களுக்கு முன்னர் போப்பை சந்திக்கும் எண்ணத்தில் காந்தி ரோமுக்கு பயணித்தார். துரதிருஷ்டவசமாக, போப் பதினோராம் பயஸ் காந்தியை சந்திக்க இயலவில்லை, மாறாக வாட்டிக்கன் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். ஊடகங்கள், வாட்டிக்கன் தரப்பு அதன் உடை நியதிகளைக் கடுமையாகப் பின்பற்றியதே காரணம் எனக் கடுமையாக விமரிசித்தன.

Sunday, 21 October 2012

சரக சம்ஹிதை(அண்மைய சொல்வனம் இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை )

ஆற்றங்கரையோரம் பிரம்மாண்டமாக கிளைபரப்பி நிற்கும் ஆலமரத்தடியில் நீள்சடையும் வெண்தாடியும் புரள அமர்ந்திருந்தார் வெள்ளுடை தரித்த அந்த ரிஷி, கூடியிருக்கும் ஆறு சீடர்களும் விடைபெறும் நாளன்று. யுகம் யுகமாக பெருமௌனத்தில் ஆழ்ந்திருந்த கரும்பாறை உயிர்பெற்று உதிர்க்கும் முதல் சொல்லைப்போல் தன் அகத்தின் ஆழத்திலிருந்து வார்த்தையை துழாவி மௌனத்தை துளைத்தார் குருநாதர் ‘ விதைகள், நீங்கள் அறுவரும் ஆறு ஆலம் விதைகள், முளைத்தெழுந்து வனமாகுங்கள், களைத்தோருக்கு நிழல் தாருங்கள், அலைவோருக்கு அடைக்கலம் ஆகுங்கள்,’ .. தலைகுனிந்து விசும்பும் சீடர்களை நோக்கிச் சலனமின்றி பேசினார், ‘இதுவே உங்கள் இறுதி வேள்வி, நீங்கள் அனைவரும் எனக்குச் சமமெனினும் - வான்மழை சமமாக பொழிந்தாலும் நாழியின் ஆழம் பொருத்தே நீர் தங்கும், இது உங்களுக்கான சோதனை, உங்கள் ஆழத்தைக் கண்டுகொள்ள, உங்களை நீங்களே அறிந்துகொள்ள, பிணி நீக்கும் மருந்துவத்திற்குப் பயன்படாத பொருளொன்றை ஒரு யாமத்திற்குள் கொண்டு வாருங்கள். காரியம் சித்தியடையட்டும்’, கண்மூடி மென்முறுவலுடன் காத்திருந்தார் குரு.

ida068