Sunday 12 May 2013

நக்ர ரேதஸ் - சிறுகதை



நண்பர் நட்பாஸ் தளத்தில் வெளியான எனது முதல் சிறுகதை ..


ஜ்வாலையின் நாட்டியம் 
அழைக்கிறது என்னை 
எனக்கோ 
பேழைக்குள் நெளியும் பாம்பும் 
மரணத்தின் குறியீடு.
நெருப்பின் செயல் திறனும் 
பௌதீகப் பயன்பாடும் 
போதுமென்று விலகும்போதும் 
தானாய்ப் பிறந்து சுடர்கிறது 
உள்ளே ஒரு கணப்பு.
-

என்றோ வாசித்த யுவனின் இந்தக் கவிதை மின்சாரமற்ற இந்த நள்ளிரவில் ஏன் எனக்கு நினைவுக்கு வந்தது எனத் தெரியவில்லை. எழுந்து அந்த மெல்லிய பஞ்சு விரிப்பு விரித்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தேன். அதில் அமரும் போதெல்லாம் பாட்டியின் மடியில் தலை சாய்ந்து உறங்கிய நினைவுகள் எழும். சதைப்பற்றில்லாத உடல். எலும்புகள் மீது படரும் வெம்மையான மெல்லிய சதைத்துண்டு. மூங்கில் கழிகள் மீது போர்வை சுற்றி தலைக்கு வைத்துக்கொள்வது போலிருக்கும். டடக் டடக் என எலும்புகள் முடுக்கிக்கொள்ளும் ஒலிக்கூட கேட்கும். இறந்தவர்களையும் பிரிந்தவர்களையும் இருளிளிலும் தனிமையிலும் மனம் துழாவி கைக்கொள்வது வாடிக்கை தான்.


மணி ஒன்றோ இரண்டோ இருக்கலாம். தெரியவில்லை. இப்போதெல்லாம் இரவுகள் எனக்கு பிடிப்பதில்லை. நினைவுகள் அடர்ந்து ஆழத்து கசடுகள் மட்டும் மேல் எழுந்து பரவும் பொழுது நாளை முதல் மற்றுமொரு நிறுவனத்தில் வேலை. இரண்டாண்டுகளாகவே இப்படித்தான் போகிறது வாழ்க்கை. ஓயாமல் ட்ரெட்மில்ளில் ஓடிக்கொண்டிருப்பது போல் இருக்கிறது எனக்கு. நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருக்க வேண்டியது தான், ஓடுவதை நிறுத்தினால் கீழே விழுந்துவிடுவேன், இந்த ஓட்டமும் இதற்கு நான் செலவழிக்கும் ஆற்றலும் என்னை எங்கும் கொண்டு சேர்க்காது என நானறிவேன், அயர்ந்து சோர்ந்து விழுந்து வெறும் சலிப்பு மட்டுமே எஞ்சும் வரை இப்படி ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது தான். அலுப்பாக இருக்கிறது. வலிக்கு சொற்கள் அளிக்க முடிந்ததே வாசிப்பின் வழி கண்டடைந்தது என்று தோன்றியது. மெழுகு வர்த்தி ஒன்றை மெல்ல ஏற்றினேன். ஒளியைக் கண்ட பரவசத்தில் சுடரைச் சுற்றிச்சுற்றி எங்கிருந்தோ வந்த விட்டில் பூச்சிகள் வட்டமிட்டன. உயிர்களுக்கு சில விஷயங்கள் சலிப்பதே இல்லை போலும். மெழுகுவர்த்திச் சுடரில் உறங்கிக்கொண்டிருந்த ஜானுவின் முகம் சுடர்ந்துக் கொண்டிருந்தது. நேற்றுடன் முப்பத்தி நான்கு மாதங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு முறையும் காத்திருந்து ஏமாறி தலை முழுகும் போதும் அவளுடைய வலி எப்படி இருக்கும்? அவள் எதையும் என்னிடம் சொல்வதில்லை. யாரும் எதுவும் பேசிக்கொள்வதில்லை. ஏதேனும் ஒரு போதையை பழகி தொலைத்திருக்கலாம் நிம்மதியாக உறங்கியிருக்க முடிந்திருக்கும். வழக்கம் போல் இன்றும் ரங்காச்சாரியின் நினைவு வந்தது.

ரங்காச்சாரியை எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. நான்கு ஆண்டுகள் இருக்கலாம் அல்லது அதற்கு மேலும். நோயாளிகள் அற்ற தூசியடையும் மாலை வேளைகளில் அவர்களை கவனித்திருக்கிறேன். அறுபது, எழுபது வயதுக்காரர்கள், நான்கைந்து பேர் இருக்கலாம், கிளினிக் எதிர்ப்புறம் உள்ள வெங்கடாசலம் கடையில் அமர்ந்திருப்பார்கள். இரவு வரை கூட வம்பளப்புகளுக்கும் வெடிச்சிரிப்புகளுக்கும் குறைவிருக்காது. தபால் ஆபீசுக்கு செல்லும் சாக்கில் ஒன்றிரண்டு முறை அவர்களின் உரையாடலை ஒட்டுக்கேட்கக் கூட முயன்றதுண்டு. “நின்னான் பாரு….அவன் ஆம்பிள..தீர்த்தம் அடிச்சும் நேரா கிடக்கோனும்யா..நீரும் இருக்கிறே..குப்புற கிடந்து சுருண்டுக்கிட்டு..ச்சை..” ..”சாமி..எல்லாம் தெரியும்..தெரியும்..ஆமாம் இவரு பெரிய……” அதற்கு பின்னர் சொன்னவார்த்தை அப்போது எழுந்த சிரிப்பொலியில் முனகி மறைந்தது. அந்த சொல் ஒன்றும் அத்தனை முக்கியமல்ல. அன்றைக்கு அவர் என்ன சொல்லியிருந்தாலும் சிரித்திருப்பார்கள். நானும் கூட சிரித்துக்கொண்டே சாலையை கடக்க நின்றிருந்தேன். கடையருகே புன்முறுவலுடன் நின்றுக்கொண்டிருந்த என்னை கவனித்தவாரே “சார் தப்பா எடுத்துகாதீக, வயசாளிக ஏதோ பொழுது போகாம பேசிகிட்டு கிடக்கோம்..”. சுபாவமான உரத்த குரலில் கூவினார் வெங்கடாசலம். “புரியுது, இயற்கைதானே ” என்று சொல்லலாமா என்று யோசித்தேன், எனினும் பொத்தம் பொதுவாக ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு சாலையை கடந்தேன். “டே..அதெல்லாம் எடுத்துகிட மாட்டாரு டா….படிப்புலேயே எல்லா சங்கதியும் உண்டு…..அவரும் நம்மள மாதிரி யூத்து தானே..” ..”சாமீய்ய் .. கிடக்கட்டும்…அவரு யூத்துன்னா….நீர்…..”. மீண்டும் வெடிச்சிரிப்பில் வார்த்தைகள் வலுவிழந்து போயின. இந்த முறை அவர் என்ன சொல்லியிருப்பார் என்று எனக்கும் தெரிந்தே இருந்தது. கேபினுக்குள் வந்து அமர்ந்தேன். சற்று எரிச்சலாக இருந்தது. மனிதர்களுக்கு சில விஷயங்கள் சலிப்பதே இல்லை போலும்.

அன்று ஒரு வெள்ளிகிழமை. வழக்கம் போல் பத்துமணிக்கு வந்து ஷட்டரை தூக்கினேன், இரையை பிடித்து உள் விழுங்கும் பிரம்மாண்ட தவளை வாய் போல் சிவந்த ஷட்டர் சுருண்டு மேலே சென்று ஒடுங்கியது. சில நாட்கள் காலையில் ஷட்டர் திறப்பதற்கு முன்னரே நான்கைந்து பேர் வாயிலில் காத்து நிற்பார்கள். வேறு சில நாட்களில் தனியே அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு வீடு திரும்புவேன். நான்கைந்து ஆண்டுகளாக இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆரம்ப காலத்தில் சில நாட்கள் யாரும்வரவில்லை என்றால் அன்று முழுக்க வருத்தமாகத்தான் இருக்கும், எனினும் நாளடைவில் அது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை. கல்லூரி பிரிவுபசார விழாவில் சிறந்த மாணவன் என்று கௌரவிக்கப்பட்ட போது ஆசான் ஆசிர்வதித்து சொன்னதை நான் அவ்வப்போது நினைவுகூர்வதுண்டு. ஆசான் யாரையும் அத்தனை எளிதில் அங்கீகரித்திட மாட்டார். ‘வைத்தியன் எப்பவுமே இன்னிக்கி சீக்காளி வரலையேன்னு விசனப் படக்கூடாது, போயிட்டு வா, நல்லா வருவ’. நோயற்ற சமூகத்தை உருவாக்க கனவு காணும் மருத்துவன் நோயாளி வரவில்லையே என்று ஏங்குவது மிகப்பெரிய முரண் அல்லவா. நானொரு லட்சிய மருத்துவன் என்று கற்பிதம் செய்துக்கொண்டு திரிந்த நாட்கள் அவை.

அன்று ஒன்றிரண்டு பேர் வந்திருக்கலாம். சரியாக நினைவில்லை. வீடு திரும்பும் நேரம் நெருங்கிவிட்டிருந்தது. அப்போது அவர் தயங்கி தயங்கி வெளியே நிற்பதை என் கேபின் கண்ணாடி வழியாக பார்த்தேன். அம்மா வெயிட்டிங் அறையிலமர்ந்து அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தார். அவரும் அவரை கவனித்தார், என்னவோ ஒன்று அவருக்கு சட்டென்று பிடிப்பட்டிருக்க வேண்டும், எழுந்து வெளியே சென்று அவரை உள்ளே அமரச்சொல்லிவிட்டு அடுத்துள்ள மருந்து கடைக்குள் போனதை கவனித்தேன்.

கேபினுக்குள் மப்பு தட்டி வயிறு உப்பி அழும் குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தேன். குழந்தை அம்மாவின் மீது சரிந்து அமர்ந்து அழுது களைத்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. வயிற்றை தட்டி பார்த்தேன். வாய்வு சேர்ந்திருந்தது. “ஒண்ணுமில்ல, மப்பு தட்டி கெடக்கு, பயப்பட வேணாம், ருசியா இருக்குன்னு ரொட்டியையே திண்ணுகிட்டிருந்தா இப்படிதான் ஆகும், அஷ்ட சூரணம் தர சொல்றேன்- கொஞ்சம் காரமாத்தான் இருக்கும், ரெண்டு சிட்டிகை மட்டும் சுடு சாதத்துல நெய் கலந்து ஒரு வாய் ஊட்டுங்க சரியாயிடும். ரஜன்யாதி சூரணம் தர சொல்றேன், அத தினமும் ரெண்டு சிட்டிகை ஒரு சங்கு சுடு தன்னில கொடுங்க. செரிமானம் நல்லாருக்கும்.” கைகூப்பி வெளியேறினாள். “டாக்டர் மாமாவுக்கு டாட்டா காட்டு”, வாநீர் வடிய ஜீரக மிட்டாயை சப்பிக்கொண்டே டாட்டா காட்டினான்.

மேஜையின் மீது பரந்திருந்த ஐந்தாறு கவர்களையும் அதிலிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த வரன்களின் புகைப்படங்களையும் ஒழுங்கு படுத்தி ஓரத்தில் எடுத்து வைத்தேன். அதில் ஜானுவின் புகைப்படம் இருந்ததோ என்னவோ? சரியாக நினைவில்லை. அன்று பொருத்தம் பார்க்க பட்டமங்கலம் ஜோசியரிடம் போக வேண்டி இருந்தது. இவையெல்லாம் அப்போது அன்றாடம் நடக்கும் சடங்கு. எல்லாம் சரியாக செல்வதாகவே தோன்றும் ஆனால் கடைசியில் ஏதோ ஒன்று இல்லாமலாக்கி விடும். மனம் பிரம்படிக்கு அஞ்சும் குழந்தையைப்போல் மூலையில் சுருண்டுக்கொண்டுவிடும்.

அவரை நான் அப்படி பார்த்ததில்லை. வழக்கமான உற்சாகம் ஏதுமின்றி ஒரு மாதிரி சங்கடத்துடன் தொய்ந்து அமர்ந்திருந்தார். சாமி என்றே இங்கு அக்கம்பக்கத்தில் அவரை அழைப்பார்கள். நல்ல உயரம், கருத்த நிறம், மூக்கில் தொடங்கி திரிசூலம் போல் முன் வழுக்கையில் மேல் நோக்கி படரும் நாமம். சிரித்த குறும்பு கண்கள், வெளிர் நீலக் கலரில் லேசாக மினுக்கும் சட்டை. வேறு சிலரும் அடிக்கடி வெங்கடாசலம் கடைக்கு வந்துசென்று கொண்டிருந்த போதிலும் என்னவோ அவருடைய உருவம் எனக்கு அப்படியே மனதில் பதிந்திருந்தது.

“உள்ள வாங்க” சற்றே உரக்க அழைத்தேன்.

அந்த சொல்லுக்காக காத்திருந்தது போல் , விருட்டென்று எழுந்து வந்தார். “வணக்கம் சார்”

“உக்காருங்க..”

இரும்பு மடக்கு நாற்காலியை சற்று இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தார். நான் பொதுவாக என் கேபின் அறைக் கதவை சாத்துவதில்லை. பத்துக்கு பத்து அறையின் இடுங்கிய சிறிய பிரிவு தான் என் கேபின், கதவு திறந்திருந்தால் மற்றொருவரும் உட்கார முடியும். லேசாக கதவை காலால் நிமிண்டி தள்ளினார். ‘அந்தரங்க விசாரங்களை’ விவரிக்கும் கேஸ்களின் உடல் மொழியது. இவருக்கு என்ன தேவையாய் இருக்கும்? லேசாக மனம் குறுகுறுக்க தொடங்கியது.

“வெங்கடாசலம் கடைக்கு வந்தேன்..அவரு தான் சொன்னாரு..”

“ஆமா..அங்க உங்கள அடிக்கடி பாத்துருக்கேன்..”

“ஆமாம்..அது சும்மா பொழுது போகலைனா எல்லாம் சேந்துக்குவோம்..எங்களுக்குன்னு ஒரு செட் இருக்கு, என்ன பண்ண சொல்றேள்? ஆத்துல இருக்க முடியறதில்ல” என்று சொன்னபோது மிகுந்த சிரமத்துடன் முகத்தசைகளில் சிரிப்பை கொண்டுவர முயன்றது போல் இருந்தது.

நானும் சிநேகபாவத்துடன் சிரித்துவைத்தேன் “சார் எங்க இருக்கீங்க”

நோயாளிகள் தங்கள் அடையாளங்களை பகிர்ந்துகொள்ள எப்போதுமே தயங்குவார்கள். அதுவும் “அந்த மாதிரி கேஸ்கள்” தங்களை வெளிக்காட்டிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். துருவி விசாரித்தால் பொய் தகவல்களை சொல்லிவிட்டு அகன்றுவிடுவார்கள். .பொது இடங்களில் நம்மை கண்கொண்டு கூட பார்க்க மாட்டார்கள். வேடிக்கை தான். மனிதர்கள் விசித்திரமானவர்கள் தங்கள் அந்தரங்கங்களை பகிர அவர்களுக்கு ஒரு வெளி வேண்டும். ஆனால் அத்தகைய உரையாடல்கள் நினைவுக்கூரப்படுவதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.

எவ்வித யோசனையும் இன்றி அவரே தன்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டது எனது கணக்கை பிழையாக்கியது.

“ இங்க தான் கழனிவாச பெருமா கோயிலாண்ட இருக்கேன்..ஆத்துலேயே சைக்கிள் ஃபிட்டிங் செய்வேன்..எவ்வளவு மோசமான கண்டிஷன்ல இருந்தா கூட ஓட வெச்சுருவேன்..”

“ சந்தோஷம்..”

நோயாளியின் தகவல்களை சேகரிக்கும் நாட்குறிப்பை விரித்துவைத்துக்கொண்டு அவரிடம் கேட்டேன்

“சார் பேரு?”

“ரங்காச்சாரி”

“வயசு”

“68”

“சொல்லுங்க சார்..என்ன பிரச்சனை”

மௌனித்து தலை குனிந்து அமர்ந்திருந்தார். காத்திருந்தேன். மெல்ல நிமிர்ந்து உரையாட துவங்கினார்.

“உங்களுக்கு என் பைய்யன் வயசு, அதான் கொஞ்சம் கூச்சமா இருக்கு..யோசனையா இருக்கு ..வெங்கடாசலம் தான்..போடா போய் பாரு, நல்லா பாக்குறார்னு சொன்னான்..சும்மா கேளுடானு சொன்னான் அதான்…”

“இதுல என்ன இருக்கு சார், எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க…”

கேபினில் எனது இருக்கைக்கு பின்னால் மாட்டியிருந்த கோதை நாச்சியார் படத்தை மெல்ல நிமிர்ந்து பார்த்தார். அருகிலேயே ஸ்ரீசூர்ணம் இட்டிருந்த தாத்தாவின் பழைய கருப்பு வெள்ளை படத்தையும் கூர்ந்து நோக்கினார். என் நெற்றியிலும் தடையத்தை தேடுகிறாரோ என்று கூட தோன்றியது. ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்ட உறுதியை நான் அவர் முகத்தில் கண்டுகொண்டேன்.

“உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன”

மீண்டும் ஒரு மௌன இடைவெளிக்கு பின் தொடர்ந்தார்.

“நா சின்ன வயசுல கொஞ்சம் அப்படி இப்படி இருந்தேன்..எப்போவுமே கொஞ்சம் லேடிஸ் விஷயத்துல எல்லாம் வீக்கு தான் …”

உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். பெரியவர் கில்லாடி தான்.

“என் ஆம்படையா பாவம், அவளுக்கு எதுவும் தெரியாது, உடம்பு சரியில்லாம இருக்கா…மொத்தம் ரெண்டு பசங்க….ஒருத்தன் கழனிவாசல் பெருமாள் கோவில்ல பட்டரா இருக்கான்….இன்னொருத்தன் வாத்தியாரா கவருமன்டுல வேல பாக்குறான்..”

நிமிர்ந்திருந்த தலை மீண்டும் தொங்கியது. காலம்போன காலத்தில் இளமை காலத்து ஏக்கங்கள் வந்து மீள்வது இயல்பு தானே. ஆறுதலாக சில சொற்களை சொல்லி அனுப்பிவிட வேண்டும். சற்றே நீண்ட மௌன இடைவெளி. நான் அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன். இதற்கு பிறகு தான் மனிதர் விஷயத்திற்கு வர போகிறார் என்று எனக்கு புரிந்தது. அவராக சொல்லும்வரை காத்திருக்க எனக்கு பொறுமையில்லை. மனம் பரபரக்க தொடங்கியது. இன்னமும் அவருக்கு நம்பிக்கை கைகூடவில்லையோ?

மெதுவாக தளர்ந்து அமர்ந்தவரின் கையை என் இடது உள்ளங்கை மீது வைத்து அழுத்தி கொஞ்சம் நாடகீயமாக “எதுவா இருந்தாலும் சொல்லுங்க சார் ..”என்றேன். நீ சொல்வதை நான் காது கொடுத்து கேட்கிறேன், உன் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன் என்னிடம் நம்பிக்கைக்கொள் என்று எதிர் தரப்பிடம் சொல்லாமல் சொல்லும் வழிமுறை அது என்று ஆசான் சொல்வார்..

கொஞ்சம் நிமிர்ந்தார். நாற்காலியின் நுனியில் அமர்ந்து முதுகை வளைத்து ரகசியம் சொல்லும் பாவனையில் “அது என்னன்னா..இப்ப..ஆத்து மாமிய கவனிக்க கொழுந்தியா இங்க வந்திருக்கா….கூட சேர்றதுக்கு வசதி வாய்ப்பு அமஞ்சுருக்கு..ஆனா பாருங்க முன்ன மாதிரி முடியல, அவளா ஆசையோட வர்றா பாவம், அவ புருஷனும் சரி கிடையாது, ஆனா பாருங்கோ அவள என்னால சரியா திருப்திப் படுத்த முடியல….”

ஆள் காட்டி விரலை நேராக நீட்டி மெல்ல கீழே தளர விட்டபடியே சொன்னார் “சட்டுன்னு இப்படி ஆய்டுது”

அருவருப்பாக இருந்தது. பொறாமையாகவும்.

மெல்ல எழுந்து வேட்டி மடிப்பை லேசாக தளர்த்தினார்.

“என்ன?” என்னை சூழ்ந்த பதட்டம் என்னுடைய குரலிலும் தென்பட்டிருக்கலாம்.

மடிப்புக்குள் இருந்து ஏதோ ஒன்றை வெளியே எடுத்தார்.

“ஹன்ட்ரட் பவர்ன்னு மருந்து கடைல கேக்க சொன்னா..”

சிவப்பு நிற மேலோடுக்குள் ஒளிந்துக்கொண்டிருக்கும் ஒற்றை மாத்திரை. மிக சாமர்த்தியமாக மாத்திரையின் அட்டையிலிருந்து வெட்டப் பட்டிருந்தது. பெயரோ, காலாவதி தேதியோ எதுவுமே அதில் இல்லை.

“ஒன்னும் பிரயோசனமில்ல..ஒரு மாத்திர எழுவது ரூவா.. போன வாரம் மட்டும் மூணு மாத்திர போட்டு பாத்துட்டேன்..”

கண்கள் இடுங்கி தயங்கியப்படியே தலை சாய்த்து கேட்டார்

“ அதான் ..இங்க எதாவது பாக்கலாம்னு..”

எரிச்சலாக இருந்தது. பொதுவாக நான் நோயாளிகளிடம் எரிச்சல் கொள்வதில்லை. நோயை பற்றியும் மருந்தைப் பற்றியும் எத்தனை முறை விளக்க வேண்டுமென்றாலும் என்னால் சளைக்காமல் எரிச்சல் கொள்ளாமல் விளக்க முடியும். இத்தகையவர்களும் எனக்கு ஒன்றும் புதிதல்ல. தம்பதிகள் கூட தயங்கி தயங்கித்தான் தங்கள் சிக்கல்களை பகிர்வார்கள். அதுவும் பெரும்பாலும் அவர்களுடைய மௌனங்களை கொண்டு நாமாக ஊகித்து அறிய வேண்டும். ஆனால் எவரும் இப்படி அப்பட்டமாக என்னிடம் கேட்டதில்லை. அதுவும் ஒரு தரங்கெட்ட செயலுக்கு. மனம் முரண்டு பிடிக்க தொடங்கியது.

அதி வேகமான மூச்சோட்டதிற்கு சம்பந்தமில்லாத நிதானத்துடன் தொடங்கினேன்

“அய்யா, அந்த மாத்திரை போட்டும் உங்களுக்கு பலனில்லைனா கஷ்டம் தான்.”

“சார் அப்பிடி எல்லாம் சொல்லாதீங்கோ.”

நெஞ்சு காந்துவதை உணர முடிந்தது. கைகால்கள் வெப்பமடைந்து வியர்க்க தொடங்கியது. நான் எந்நிலையிலும் நிதானத்தை இழக்கக் கூடாது. நானொரு மருத்துவன். விளக்கி சொன்னால் ஒருகால் புரிந்துகொள்ளக் கூடும். “the less previleged elderly need our love and care, our little contribution to make their world healthier and happier” மேசையின் மீது காந்தியின் வாசகங்களை தாங்கி நிற்கும் பன்னாட்டு மருந்து நிறுவன பிரதிநிதி பரிசளித்த அந்த ஃபோட்டோ ஃபிரேமை பார்த்தேன். மனம் சற்று அமைதியை உணர்ந்தது போலிருந்தது.

“ஸ்பான்ஜ் இருக்கு அது தன்னில ஊறினா பெருசாகுது இல்லையா..இங்க பஞ்சு மாறி இருக்கும், அதுக்குள்ள ரத்தம் பாயும்போது விரியும். நீங்க சாப்ட மாத்திரை ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நல்லா விரியும், சாதரணமா நிக்குறத விட கூட நேரம் நிக்கும்..அதுலேயே உங்களுக்கு பலனில்ல..வயசாகுது இல்லையா..”

“ அப்படி என்ன வயசாகுது? சார் எனக்கு தெரிஞ்சு அம்மன்கோயில் தெரு நகைக்கடை செட்டிகளெல்லாம் நாட்டு மருந்து சாப்டு சதாபிஷேக சாந்தி பண்ணிக்கிட்டப்புரம் கூட அமர்க்களப் படுத்துராணுக..” அதில் தொனித்த ஏளனம் என்னை சீன்டியது.

அவரை எப்படியாவது அனுப்பிவிட வேண்டும். இனியும் அவர் அங்கிருப்பது எனக்கும் நல்லதில்லை. அவருக்கும். உள்ளிருந்து எழும் கனலின் நிழல் உடலெங்கும் பரவுவது போலிருந்தது. முகமெல்லாம் சிவக்க தொடங்கியிருந்தது. மருத்துவன் ஒருபோதும் தன் கோபத்தை வெளிக்காட்ட கூடாது. கோபம் ஆற்றாமையின் வெளிப்பாடு. பலவீனர்களின் ஆயுதம். நானொரு லட்சிய மருத்துவன் ஆகத் துடிப்பவன் அல்லவா? “ரோகினாம் தம் புத்ரவத் உபாச்சரெத்” நோயாளிகளை சொந்த பிள்ளையை போல் கருணையுடன், அன்புடன் நடத்து. சரகர் சொல்லியிருக்கிறார். எத்தனை மகத்தான வாசகம்? அவனல்லவா மருத்துவன்? நான் இந்த கிழவனிடத்தில் தோல்வியடைந்துவிடக் கூடாது. நான் வணங்கும் சரகனுக்கு இழுக்கு செய்திடக் கூடாது. ஆசானின் நம்பிக்கையை சுக்கு நூறாக தகர்த்துவிடக் கூடாது.

“ இங்க பாருங்க, ஆயுர்வேதத்துல நீங்க நினைக்கிற மாதிரி அப்படி அதிரடியா எல்லாம் எதுவும் செஞ்சிட முடியாது. நாளடைவுல மெது மெதுவாத்தான்..”

“தம்பி ஒரு மாசத்துல ஸ்ரீ வைகுண்டத்துக்கு திரும்பிருவா..கொஞ்சம் எதாவது பாத்து மனசு வைங்க..”

பொங்கிக்கொண்டு வந்தது. முகமும் கைகால்களும் சிவந்து எரிந்தது. நான் அப்படி சொல்லியிருக்க கூடாது. கடவுளே, நான் ஏன் அப்படி சொன்னேன்? ஏன் அத்தனை ஆங்காரம்? அப்படி சொன்னவுடன் ஏன் எனக்கு அத்தனை நிறைவு?

“ நீர் நெனைக்கிற வேகத்துக்கும், நேரத்துக்கும் எதுவும் செய்ய முடியாது..புரியுதா..டி.வி ல லேகியம் விக்கிறானே அவன் கிட்ட கேளுங்க..அஞ்சாயிரம் பத்தாயிரம் பிடுங்கிட்டு விட்டா தான் உம்ம மாதிரி ஆளுங்க எல்லாம் திருந்துவீங்க..செய்ற கோட்டி தனத்துக்கு மருந்து வேறயா?”

“தம்பி நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல..” குரலில் தழுதழுப்பு ஏறியது. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அப்படியே மௌனித்து அமர்ந்திருந்தார்.

பேசாமல் விட்டிருக்க வேண்டும். இத்துடனாவது நிறுத்தியிருக்க வேண்டும். நான் ஏன் அப்படி சொன்னேன்? எத்தனையோ பேர் வருவதும் போவதுமில்லையா? எதையாவது ஒன்றைக் கொடுத்து நாலு நல்லவார்த்தை சொல்லி அனுப்பி தொலைந்திருக்கக் கூடாதா? பொல்லாத நாக்கு சனியன்.

ஒரு நமுட்டு சிரிப்புடன் “ ஒரேயொரு மருந்து தான் இருக்கு, க்ரந்தத்துலையே சொல்லிருக்காங்க..”நக்ர ரேதசோ வ்ருஷ்யானாம்” நல்ல முதலயோட சுக்கிலம், போய் எடுத்துட்டு வாங்க மருந்து செஞ்சு தரேன்..உங்களால முடியாதது இல்ல..போங்க.. ” என் குரலில் அத்தனை எள்ளல் தொனித்து நானே கேட்டதில்லை. நான் அத்தனை கொடூரமானவனா?

மெளனமாக மெல்ல எழுந்து நடந்தார். எதையோ சாதித்துவிட்ட திருப்தி. உடல் வியர்த்து குளிர்ந்து இருந்தது.

வாயிலை கடக்கும் போது என்னை நோக்கி திரும்பாமலேயே “இதெல்லாம் உங்களுக்கு புரியாது தம்பி..நீதி நியாயம் மயிறு மட்டைனுட்டு..” முனகலுடன் வெளியேறி சென்றார்.

தினமும் கண்கள் வெங்கடாசலம் கடையில் அவரை தேடும். ஆனால் நான் அதற்கு பிறகு ரங்காச்சாரியை பார்க்கவில்லை. நான்கைந்து நாட்களுக்கு பிறகு ஒருநாள் வெங்கடாசலம் கடை மூடி இருந்ததை பார்த்தேன். ஏன் என்று கேட்க வேண்டும் என்று எண்ணினேன். இரண்டொரு நாளில் வயசாளிகள் பழைய படி கூடுவதை கவனித்தேன். ரங்காச்சாரி அங்கு இல்லை. அவர்களுக்குள் பேசிக்கொள்வதும் சிரித்துகொள்வதும் கூட இல்லை.

தபால் ஆபீசுக்கு செல்வது போல் அந்த கடையை கடந்து சென்றேன். வெங்கடாசலத்திடம் பேனா ஓசி கேட்கும் சாக்கில் ரங்காச்சாரியை பற்றி விசாரித்தேன். ஏதோ மாத்திரை வாங்கி தின்று, ரத்த வாந்தி எடுத்து இறந்துவிட்டதாக சொன்னார்.

வானத்தை நோக்கி எம்பிக் குதிக்க முயன்று கூரையில் அடிவாங்கி சுருண்டு விழுந்துவிட்டதுப் போல் சுரீரென்று இருந்தது. ஏன், இப்போதும் கூட அந்த வலி பிடரியிலிருந்து பின்மண்டை வழியாக ஏறி அழுத்துவது போலிருக்கிறது.

மின்விசிறி சுழலத் தொடங்கி மெழுகுவர்த்தி அணைந்த போது தான் கவனித்தேன் வியர்வை பெருகி வழிந்து தொப்பலாக நனைந்திருந்ததை. பிரம்பு நாற்காலி அழுத்தி பின்புறம் எல்லாம் வலித்தது. இரவு விளக்கு எரிந்துக்கொண்டிருக்கிறது. மணி மூன்றோ நான்கோ தெரியவில்லை. ஜானு இன்னும் உறங்கிக்கொண்டுதான் இருந்தாள். அவளருகே சென்று எழுப்பலாமா என்று பார்த்தேன். என்னென்னவோ அவளிடம் சொல்லவேண்டும் எனக்கு. எல்லாம் இயல்பாகிவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கும் அவளிடம் நான் சொல்ல என்ன இருக்கிறது? விலகி சென்று படுத்தேன். ஒருக்களித்து படுத்திருந்த ஜானுவின் கண்கள் ஒரு நொடி என்னை நோக்கி திறந்து மூடியது போலிருந்தது.

மெல்ல ஒரு குழந்தை என்னை நோக்கி தத்தி தத்தி இருளில் நடந்து வருகிறது. கைநீட்டி சிரிக்கிறது. எழுந்து அள்ளி அரவணைக்க முயல்கிறேன். தாவி ஏறி தன் புஜங்களைக் இறுக்கி கழுத்தை நெரிக்கிறது. வலி கழுத்திலிருந்து பின்னிறங்கி பிடுங்கி எடுக்கிறது. பிடித்து தரையில் வீசி எறிந்தேன். குழந்தையின் வாயிலிருந்து குருதி குபுக் என்று கொப்பளித்து வழிந்தோடுகிறது. இதயமே நொறுங்கிவிடுவது போல் அலறுகிறேன்.

No comments:

Post a Comment