Friday 19 October 2012

ஆன்ம வல்லமையை எதிர்த்து: காந்தியும் விமரிசனங்களும் – மைக்கேல் பிளாட்கின்




(தமிழில் காந்திக்காக இயங்கி வரும் தளமான, காந்தி-இன்றில், சில மாதங்களுக்கு என்னுடைய மொழிபெயர்ப்பு கட்டுரை ஒன்று நான்கு பகுதிகளாக வெளியானது.)

மைக்கேல் பிளாட்கின் , அமெரிக்காவில் நியு யார்க் மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார். ப்ரூக்ளின் பல்கலைகழகத்திற்கு அவர் சமர்பித்த ஆய்வு கட்டுரையான resistance to the soul: gandhi and his critics ன் தமிழாக்கம் இது. இக்கட்டுரையில் காந்தியை விமரிசிக்கும் நான்கு முக்கியமான தரப்புகளான இந்துத்துவ தரப்பு, மார்க்சிய தரப்பு, பாகிஸ்தான் முஸ்லீம் தரப்பு மற்றும் தலித் தரப்பினரின் சாராம்சமான குற்றசாட்டுகளை தொகுத்து அளிக்கிறார். குறிப்பாக மார்க்சிய தரப்பின் குரலாக இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கும் ரஜனி பாமி தத் முன்வைக்கும் குற்றசாட்டுகளை விரிவாக முன்வைத்து அதற்கு பதிலளிக்க முயல்கிறார். இந்துத்த்வ குரலாக விளங்கும் சவார்க்கார் முன்வைத்த குற்ற சாட்டுகளுக்கும் பாகிஸ்தானிய முஸ்லீம்களின் குரலாக ஒலிக்கும் சர்வார் ஹுசைனின் குற்றசாட்டுகளும் பரஸ்பரம் நிரப்பி கொள்வது காந்தியின் சமநிலைக்கு எடுத்துக்காட்டு என்று கூறலாம். இறுதியாக அம்பேத்கார் கொள்கை ரீதியாக காந்தியுடன் மாறுபடும் இடங்களை கோடிட்டு காட்டுகிறார். 





------
இந்த இருபதாம் நூற்றாண்டை அதன் இறுதியில் நின்று பின்னோக்கி பார்க்கும் பொழுது, இதுவரை மனித குலம் அறிந்திடாத  மாபெரும் அழிவுகளை சந்தித்த நூற்றாண்டாகவே இது நினைவுக் கூறப்படும் என்று தோன்றுகிறது. மரணங்களும், மாபெரும் அழிவுகளும் நிறைந்த நூற்றாண்டு. இந்த மாபெரும் மானுட அழிவிற்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் மற்றும் அவர்களின் மனிதாபிமானமற்ற அடக்குமுறைகளை எதிர்த்து துணிவோடு போராடியவர்கள் என இரு தரப்புகளை வரலாறு நம்முன் நிறுத்துகிறது. எத்தனையோ மனிதநேயம் கொண்ட மனிதர்களுக்கும், அமைதிவிரும்பிகளுக்கும் இடையே அடக்குமுறைக்கு எதிராக துணிவோடு போராடிய தரப்பை சேர்ந்த ஒரு மனிதர் தனித்து விளங்குகிறார், அவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 

காந்தி தலைசிறந்த தேசிய தலைவர் என்று அறியப்பட்டாலும், முடிவுகளை பற்றி அவர் பெரிய அளவில் கவலைப்படவில்லை, மாறாக அதை சென்றடையும் வழிமுறையே அவருக்கு மிக முக்கியமாகப் பட்டது. காந்தி அகிம்சை முறையில் போராடுவதையும், ஒத்துழயாமையையும் தன்னுடைய வழிமுறையாக கொண்டார். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அவர் கையிலெடுத்த இவ்விரு திட்டங்களும் அவருடைய சத்யாகிரக வழிமுறையை அதன் அடிப்படையாகக் கொண்டது. 

இருபதாம் நூற்றாண்டின் பெரும்பாலான தேசிய இயக்கங்கள் வன்முறையால் அழித்தொழிக்கப் பட்டுக்கொண்டிருந்த காலமது. காந்தி அரசியல் லட்சியங்களை அடைய வன்முறையை  பயன்படுத்துவதை எதிர்த்தார், அதற்கு மாற்று வழிகளை ஆராய்ந்தார். அவருடைய வழிமுறை அன்பு, உண்மை மற்றும் தியாகத்தை முன்வைப்பது. இந்த வழிமுறையின் மூலம் எத்தகைய எதிர்ப்பையும் வென்றிட முடியும் என்று நம்பினார். எதிராளியின் வன்மத்திற்கு எதிராக வன்முறையை கையாளாமல் தன்னையே தரத் தயாராக இருக்கும் போது , அவனுடைய உறுதிக்கு எதிராளி அடி பணிந்தேயாக வேண்டும்.  

காந்தி ஆன்ம பலத்தை பயன்படுத்தி தென்னாப்ரிக்காவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தினார், இந்திய தேசியத்தின் விடுதலையை உறுதி செய்தார், அது மட்டுமின்றி அவர் எதுவாக ஆக விரும்பினாரோ அதுவாகவே தன்னை ஆக்கிக்கொண்டார். காந்தி கையாண்ட வழிமுறைகள் இந்தியாவில் நீடித்திருந்த ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்களை திரட்டுவதில் பெரும்பங்காற்றியது .   அவரை எதிர்த்தவர்கள் உட்பட உலகமே  அவருடைய வழிமுறைகளை பாராட்டியது.  

காந்தி கொலையுண்டு இத்தனை ஆண்டுகளுக்கு பின்பும் கூட மனித நேயத்திர்காகவும், அவருடைய ஆன்மீக வல்லமைக்காகவும் காந்தியும் அவரது கொள்கைகளும் இன்றும் பலரால் போற்றப்படுகின்றது. சிலர் கடந்த பத்தொன்பது நூற்றாண்டுகளில் உருவான ஆகசிறந்த ஆளுமை என்று அவரை புகழ்கின்ற அதேவேளையில் சிலர் அவருடைய வழிமுறைகளையும் கொள்கைகளையும் கடுமையாக விமரிசித்துள்ளனர். 

ரஜனி பாமி தத் காந்தியின் செயல்பாடுகளையும் அவருடைய வழிமுறைகளையும் இந்தியாவின் முதலாளிகளை பதட்டமான சூழலிலிருந்து பாதுகாக்க செய்யப்பட ஓர் ஏற்பாடு மட்டுமே என்று விமர்சிக்கிறார். கே.சர்வார் ஹுசைன் , காந்தியின் அரசியல் கோட்பாடுகளும், செயல்பாடுகளும் இந்து மதத்தில் தன் வேர்களை கொண்டதால் அது முஸ்லீம்களை தனிமைபடுத்தியது என்கிறார். இந்து தேசியவாதியான சவார்க்கார் காந்தியின் வழிமுறைகள் இந்து தர்மத்திற்கு எதிரானது மட்டுமின்றி இந்துக்களின் அரசியல் எதிர்காலத்தையும் சிதைத்தது என்று குற்றம் சாட்டுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த இந்திய தலைவரான பி.ஆர்.அம்பேத்கார் காந்தியை வர்ண அமைப்பை ஆதரிப்பவர் என்றும், வளர்சிப் போக்கிற்கு எதிரானவர் என்றும் குற்றம் சாட்டுகிறார். 

ரஜனி பாமி தத் 
சத்தியத்தை தேடி அலைந்த ஓர் எளிய மனிதனைப் பற்றி இவர்கள் இத்தனை கடுமையான குற்றசாட்டுகளை சுமத்துகிறார்கள். இந்த கட்டுரை அத்தகைய குற்றசாட்டுகளுக்கு காந்தியின் கொள்கைகள் மற்றும் வரலாற்று உண்மைகளைக் கொண்டு பதிலளிக்க முயல்கிறது. 

ரஜனி பாமி தத் காந்தியத்தை மார்க்சிய கோணத்திலிருந்து அணுகுகிறார். காந்தியின் வழிமுறைகள் உண்மையில் பலரும் நம்புவது போல் அத்தனை புனிதமானது அல்ல என்கிறார். நிதரிசனத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்த எளிய மக்கள் திரளிடமிருந்து  இந்திய நிலகிழார்களையும் முதலாளி வர்க்கத்தையும் பாதுகாக்கவே அவருடைய முறை பயன்பட்டது என்கிறார். நிலகிழார்களின் உள்ளத்தில் பீதி ஏற்படுத்திய அந்த சக்தியை அடக்கி ஒடுக்க உருவான திட்டம் தான் அகிம்சை என்கிறார். அகிம்சை மூலம் மக்கள் சக்தியைத் திரட்டி,   ஆங்கிலேய அரசை பணிய வைத்து சில சலுகைகள் பெறும் முயற்சி மட்டுமே சாத்தியமானது. 

1919 ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் நடைமுறைக்கு வந்த போது இந்திய மக்களிடம் ஒருவித அதிருப்தி வெளிப்பட்டது. முதல் உலகப்போரின் முடிவில் பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் உரிமைகள் மீண்டும் நிலைபெற்றுவிடும் என்றே எண்ணினார்கள். ஆனால் ரௌலட் சட்டமோ போர்கால அடக்குமுறைகளின் நீட்சியாக அதிகாரத்தை நிலைநாட்ட கொண்டுவரப் பட்டது. இந்தியா முழுவதும் பரவலாக இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் அதிருப்தியில் போராடட்ட களத்தில் குதித்தனர். 

தத்தின் கூற்றுப்படி மக்களின் இந்த அதிருப்தியையும் போராட்டத்தையும் வழிக்கு கொண்டுவருவதற்காக ஒத்துழயாமையையும் அகிம்சையையும் பயன்படுத்துவதே காந்தியின் முதன்மை நோக்கமாக இருந்தது. ரௌலட் சட்டத்தையும் அதன் திருத்தங்களையும் முதலில் காந்தியும் காங்கிரசும் அங்கீகரித்து இருந்தனர். பின்னர் வன்முறை வெடித்ததும் காந்தியும் காங்கிரசும் தங்கள் நிலைபாடுகளை மாற்றிக்கொண்டு மக்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்க துவங்கினார்கள். 

காங்கிரசின் உறுப்பினர்களான பெரும்பாலான முதலாளி வர்க்கத்தினர் வெறிகொண்ட மக்கள் கூட்டம் தங்களை நோக்கி திரும்பிவிடுமோ என்று அஞ்சினர். ஆக இந்த சிக்கலை தவிர்க்கவே காந்தி அகிம்சை முறையிலான ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். மத்திய வர்க்கம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் போது எளிய மக்கள் கை ராட்டையில நூற்பது, நெசவு, வரிகொடாமை போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது.

தத்தின் பார்வையில் நிலமற்றவர்கள் நிலமுள்ளவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதை தடுக்கும் திட்டமாகவே காந்தியின் அணுகுமுறை தென்படுகிறது. ரௌலட் சட்டம் சார்ந்து காங்கிரஸ் தன் நிலைப்பாடை மாற்றிக்கொள்ள மற்றுமொரு காரணம், காங்கிரஸ் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கட்டுப்பட்ட ஓர் தன்னாட்சி அமைப்பு எனும் நிலையிலிருந்து மக்களை திரட்டி ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடும் ஓர் நவீன அரசியல் கட்சியாக மாறியிருந்தது. இதர அரசியல் கட்சிகளைப்போல் காங்கிரசும் தன்னை தற்காத்துக்கொள்ள முயன்றது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பெருந்திரள் மக்களின் ஆவேசத்திற்கும் மக்கள் வெகுண்டெழுந்து எவ்வித போராட்டங்களிலும் பங்கெடுக்க கூடாது எனும் பெருமுதலாளிகள் மற்றும் நிலகிழார்களின் கவலைகளுக்கும் இடையில் ஏற்பட்ட சமரச நடவடிக்கை தான் அகிம்சை போராட்டம் என்கிறார் தத். 

விவசாயிகள் காவலர்களை கொலை செய்த சௌரி சௌரா சம்பவத்திற்கு பின் இது அப்பட்டமாக புலப்பட்டது என்கிறார் தத். காந்தி போராட்டத்திற்கு தந்திருந்த தன்னுடைய ஆதரவை திரும்பப் பெற்றார். ஒட்டுமொத்த போராட்டத்தையே முடிவுக்கு கொண்டுவந்த காந்தி, அதன் பின் அவருடைய ஆக்கப்பூர்வ செயல்திட்டத்தில் கவனம் செலுத்தத்தொடங்கினார். மக்கள் போராட்டம் தங்கள் கைமீறி போவதாக உணர்ந்த முதலாளி வர்க்கம்  அவர்களை அமைதி படுத்துவதன் மூலம் மீண்டும் போராட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர் என்பதையே இது குறிக்கிறது என்கிறார் தத்.

இந்த மக்கள் போராட்டத்தை நிறுத்திய காந்தியின் முடிவை தத் விமர்சிக்கிறார். வன்முறை வெடித்ததால் இந்த போராட்டத்தை திரும்பப்பெற வேண்டியதானது என்று காந்தி காரணம் சொன்னாலும், பர்தொளி தீர்மானத்திற்கு பின்புலமாக சில பொருளியல் ஆதாயங்கள் இருப்பதாக தத் நம்புகிறார். மக்கள் ஒருங்கே பெரும் உற்சாகத்தோடு பங்கெடுத்த உச்சக்கட்ட சூழலில் போராட்டத்தை திரும்ப பெறுவதற்கான காரணம் அது முதலாளி வர்கத்தின் விருப்பத்திற்கு மாறாக இருந்ததே என்று இந்த மார்க்சியர் நம்புகிறார்.

அப்பொழுது நிலவிய சூழலில் மக்களிடம் இருந்த உற்சாகமும் சக்தியும் எப்பேர்ப்பட்ட ஏகாதிபத்திய அரசாங்கத்தை விரட்டியடித்து இருக்கும், அத்தோடு நில பிரபுத்துவ முறையும் கூட முடிவுக்கு வந்திருக்கும். இந்த கருத்துக்கு சான்றாக தத் முன்வைப்பது, ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெற்றவுடன் விவசாயிகள் மீண்டும் வரி செலுத்தவும், குத்தகை பணம் செலுத்தவும் அறிவுறுத்தப் பட்டனர். ஆகவே தத்தின் பார்வையில் காரிய கமிட்டியின் பர்தொளி தீர்மானத்திற்கும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதன் உள்ளீடாக உள்ள ஏழு பிரிவுகளில் மூன்று பிரிவு விவசாயிகள் நிலகிழார்களுக்கு செலுத்த வேண்டிய குத்தகையை பற்றி பேசுகிறது. 

தத்தின் இறுதி முடிவு, இது வன்முறையை அடக்குவதற்கான முடிவு அல்ல மாறாக முதலாளி வர்க்க நலனை பேணுவதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதே. மேலும் அகிம்சை என்பது வர்க்க நலனுக்கான ஓர் முகமுடி மட்டுமே. அவர் முன்வைக்கும் பிரச்சனையின் மையப் புள்ளி, அங்கு நிலவிய மக்கள் கூட்டத்தின் வெறிக்கும் வரி மற்றும் குத்தகை செலுத்துவதோ அல்லது செலுத்தாமல் இருப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத போது அது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது என்பதே.

தத் காந்தியை “ தனியுடமையை ஆதரிக்கும் துறவி” என்கிறார், ஏனெனில் “ அவர் அன்பு , மனித நேயம் போன்ற மகத்தான ஆன்மீக கோட்பாடுகளை சாதுர்யமாக முதலாளி வர்க்கத்தை பாதுகாக்க பயன்படுத்துகிறார்”. “இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒவ்வொரு எழுச்சியின் போதும் காந்தி முதலாளிகளின் முகமாகவோ, அல்லது அவர்களின் சாதனமாகவோ சிறுமை அடைந்துவிடுகிறார்”. முதலாளித்துவ தலைமை மக்களை ஈர்த்து தன்னகத்தே வைத்துக்கொள்ள தவறிய சூழலில் காந்தி மக்களை ஈர்த்து வழிநடத்தினார். மக்களை உற்சாகத்தோடு அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுத்தியதன் மூலம் ஆங்கிலேய அரசிடமிருந்து சில சலுகைகளை பெற்றுதந்ததொடு நில்லாமல், மக்கள் திரளை கட்டுக்குள் வைத்து வர்க்க போராட்டத்தை தவிர்த்தார்.

அகிம்சை வழிமுறை என்பது விடுதலைக்கான வழிமுறையல்ல உண்மையில் அது தலைமையை தக்க வைக்கவும், முதலாளிகளின் இடத்தை உறுதிபடுத்தவும் தான் பயன்படுத்தப்பட்டது எனும் தத்தின் பார்வைக்கு வலு சேர்க்கும் மற்றுமொரு சான்று என அவர் கருதுவது 1930 ஆம் ஆண்டில் நடந்த உப்பு சத்யாகிரக போராட்டம். காந்தி இந்த போராட்டத்தை தன்னோடும் , தான் தேர்ந்தெடுத்த சீடர்களோடு மட்டும் நிறுத்திக் கொண்டார். தொழிலாளர்கள் உட்பட அனைத்து  மக்களும்  பொறுமையுடன் ஆக்கப்பூர்வ செயல்திட்டத்தில் பங்கேடுக்குமாறு அவரால் அறிவுறுத்தப்பட்டனர்.

சுருக்கமாக சொல்வதானால், காந்தி மக்களை முதலாளிகளுக்கு சாதகமான  சமயங்களில் போராட்ட களத்திற்கு அழைத்தார், சூழல் கையை மீறி சென்றால் உடனடியாக போராட்டத்திற்கான ஆதரவை திரும்பப்பெற்றார் என தத் நம்புகிறார். ஆகா காந்தி மக்களை தனக்கு தேவையான விதத்தில் பயன்படுத்திக்கொண்டார் என்பதே தத்தின் குற்றசாட்டு. 1932 ஆம் ஆண்டிலும் இதேதான் நடந்தது, காந்தி போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஹரிஜன சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.  

ஓர் மார்க்சியர் காந்திய கொள்கைகளை மறுதலிப்பது புரிந்துகொள்ளக்கூடியதே. தத்தை போன்ற மார்க்சியர்கள் மக்கள் திரளின் வன்முறை சக்தியைக் கொண்டு சமூகத்தையே புரட்டிப்போட்டு அங்கு மார்க்சிய கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட ஓர் அரசை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர். காந்தி பொதுவாகவே  வன்முறையை எதிர்த்தார், அதுவும் அதைக்கொண்டு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதை முற்றாக நிராகரித்தார். காந்தியை பொருத்தவரை விடுதலைக்கான ஒரே வழி அகிம்சையும் ஒத்துழயாமையும் தான். இந்த முறையில் மட்டுமே  உண்மையான சுவராஜ்ஜியத்தை அடையலாம். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை இந்தியாவிலிருந்து விரட்டியடிப்பது மட்டுமே முக்கியமல்ல, அவருடைய வழிமுறையின் மூலம் ஒவ்வொரு இந்தியனும் தன்னைத்தானே சுயமாக நிர்வகித்துக்கொள்வான்.

1920 களில் காந்தி வகுத்த ஆக்கப்பூர்வ செயல்திட்டத்தின் நோக்கம் அது தான். முதலில் இந்தியர்களிடையே ஒற்றுமையும் அமைதியும் ஏற்படுத்திவிட்டு, வெளிநாட்டு ஆடைகளை துறந்து தாங்களே அவைகளை உற்பத்தி செய்துகொண்ட பிறகு சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தங்களை தாங்களே எப்படி நிர்வகித்துக் கொள்வது என்பதை கற்றுக்கொள்வார்கள் என்று காந்தி எண்ணினார். முடிவாக சொல்வதானால், புறவயமான சுதந்திரத்திற்கு முன் அகவயமான சுதந்திரத்தை அடைந்தாக வேண்டும். காந்திக்கு ஸ்வராஜ் என்பது அரசியல், பொருளாதார, சமூக விடுதலையை காட்டிலும் மேலானது. உண்மையில் அது ஆன்ம விடுதலை மற்றும் ஆன்ம சுத்தியை நோக்கிய தொடர் பயணம். பலரும் வன்முறையை பயன்படுத்திய போது, காந்தி ஏன் அமைதி வழியை பின்பற்றினார் என்பதை இது விளக்குகிறது. “இந்தியா வெறுப்பும் வன்முறையும் இன்றி விடுதலையை பெற்றால், ஆங்கிலேயர்கள் சென்ற பின்னர் இந்தியா தன்னை தானே அப்படி தான் ஆண்டுக்கொள்வாள்..” என்றார் காந்தி. 

தத் கூறியது போல் காந்தி மக்கள் போராட்டத்தை திரும்பப்பெற்றார் என்பது பொய்யல்ல. சௌரி சௌரா நிகழ்விற்கு பின் காந்திக்கு மக்கள் இன்னும் பெரிய அளவிலான ஒத்துழையாமை போராட்டத்திற்கு தயாராகவில்லை என தோன்றியது. ஏனெனில் ஒத்துழயாமையின் முதல் படி சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் குடிமை சமூகம் தான். 

சௌரி சௌராவில் நடந்தது அதுவல்ல. நிராயுதபாணிகளாக போலீஸ் கான்ஸ்டபிள்கள் மக்கள் கூட்டத்தின் பிடியில் சிக்கி கொலையுண்டு மடிந்தனர். காந்திக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது, “ எத்தகைய தூண்டுதலும் இந்த செயலை நியாயப்படுத்த முடியாது” என்றார் அவர். “இந்தியா தன்னை தானே கட்டுபடுத்திக்கொள்ளாமலும் , இத்தகைய குண்டர்களை கட்டுபடுத்தாமலும் இருக்கும் பட்சத்தில் இந்தியா இன்னும் சுயாட்சிக்கு தயாராகவில்லை” என்றார். 

முதலாளிகளின் தரப்பில் பேசுபவராக காந்தி திகழ்ந்தார் எனும் குற்றசாட்டு அபத்தமானது. காந்தி ஒட்டுமொத்த மானுடகுலத்துக்கான பேச்சாளார். அவர் தீண்டத்தாகதவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் ஒருங்கே உதவி புரியவே எண்ணினார். தத்தின் கூற்றுப்படி போராட்டங்களை காந்தி நீர்த்து போக செய்தார் , ஆனால் காந்தியின் செயல்பாடுகள் நமக்கு வேறுவகையான சித்திரத்தை அளிக்கிறது, அவருடைய ஆத்மார்த்தமான ஈடுபாடி பறைசாற்றுகிறது. சம்பாரன் கிராமத்தில் வாழ்ந்த விவசாயிகள் அவர்களுடைய நிலத்தின் மூன்று பங்கில் கட்டாயமாக அவுரி விளைவிதாக வேண்டும் என்பது நிலக்கிழார்களின் சட்டமாக இருந்தது. ஒரு விவசாயி காந்தியை அணுகி சம்பரானுக்கு நேரில் வந்து அங்கு நிகழும் போராட்டத்தை பற்றி ஆய்வு செய்ய கோருகிறார். காந்தியின் விசாரணையின் விளைவாக அதிகாரபூர்வ விசாரணை நடந்தது, அதன் முடிவு  போராட்டக்காரர்களுக்கு சாதகமாக இருந்தது. பணத்தில் ஒரு பகுதி திருப்பியளிக்கப்பட்டது, அதைவிட மிக முக்கியமானது – இந்த முறை தடை செய்யப்பட்டது.  

காந்தி எளியமக்களை பற்றி கவலைப்பட்டார் என்பதற்கு மற்றுமொரு சான்று  அவருடைய அகமதாபாத் செயல்பாடுகள். ஆலைத் தொழிலாளர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் கூலி மிக குறைவாக இருந்ததால் அத்ருப்தியில் இருந்தனர். காந்தி முதலில் இருதரப்பினரையும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வலியுறுத்தினார், ஆனால் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. காந்தி தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்துகிறார், மேலும் அதை எப்படி வெற்றிகரமாக ஆக்குவது என்பதை பற்றி பல ஆலோசனைகள் வழங்கினார். போராட்டத்தின் முடிவில் ஓர் தீர்வு எட்டப்பட்டது தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். 

காந்தி ஏதேனும் போராட்டங்களுக்கு தன்னுடைய ஆதரவை திரும்பப்பெற்றார் என்றால் அதற்கு காரணம் அப்போராட்டத்தில் தன் தேசத்தவரால் ஏதேனும் வன்முறை கிளர்ந்திருக்க வேண்டும். காந்தி அவருடைய செயல்பாடை பற்றி தெளிவாகவே பேசினார், “ அரசாங்கத்தின் திட்டமிட்ட வன்முறைக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை எனும் போது மக்களின் கட்டற்ற வன்முறைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை”. அகிம்சை ரீதியிலான ஒத்துழையாமை என்பது சுயராஜ்ஜியத்தை அடைவதற்கான போராட்டம் மட்டுமல்ல, அது தீமையை எதிர்க்கும் வழி\முறை. ஆங்கிலேயர்கள், இந்தியர்கள் என வன்முறையில் ஈடுபடுபவர்களை அவர் வகைபிரிக்கவில்லை. அவரை பொருத்தவரை வன்முறையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் தீயவர்களே.   

மார்க்சியர் காந்தியை எதிர்ப்பதும் விமரிசிப்பதும் இயல்பானதே. அதேப்போல் பாகிஸ்தானிய முஸ்லீமான சர்வார் ஹசனும் காந்தியையும் அவருடைய கொள்கைகளையும் விமரிசிப்பதில் ஆச்சரியமில்லை. முஸ்லீம்களை காந்தி ஈர்க்க முடியவில்லை என்பது காந்தியின் மிக முக்கியமான தோல்வி என்கிறார் அவர். இதற்கு காரணம் இந்திய முஸ்லீம்களின் தேவை என்ன என்பதை புரிந்துக்கொள்ள அவரால் இயலவில்லை என்பதே என்கிறார் சர்வார். 

1919 ஆம் ஆண்டில் செவேராஸ் உடன்படிக்கை பற்றி இந்திய முஸ்லீம்களுக்கு தெரிந்த போது இது தெளிவாக தெரிந்தது என்கிறார் சர்வார். ஒட்டோமான் அரசாங்கத்தை கலைக்கும் ஆங்கிலேய அரசாங்கத்தின் தீர்மானம் இந்திய முஸ்லீம்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது. காந்தி வேறுவழியின்றி இந்த பிரச்சனையை மட்டும் கையில் எடுத்தார், ஏனெனில் இந்துக்களின் பிரச்ச்சமையை பேசவும் அது அவருக்கு ஓர் வாய்ப்பளித்தது. காந்தி இருதரப்பு அத்ருப்திகளையும் ஒருங்கிணைத்து காங்கிரஸ் மிகப்பெரிய ஓர் ஒத்துழையாமை போராட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என விரும்பினார். ஜின்னா போன்ற முஸ்லீம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், ஏனெனில் அவரை பொறுத்த வரை காந்தியின் “ ஆன்ம பலம்” என்பது கனிகள் காய்க்காத மரம் போன்றதே. மிக மெதுவாக செயல்படும் காந்திய வழிமுறை இந்து மதத்தை தன் அடித்தளமாக கொண்டுள்ளதால் , நாளடைவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் உள்ள பிளவு அதிகரித்துக்கொண்டே போகும். விடுதலை போராட்டத்திற்காக மக்கள் ஆதரவு வேண்டுமென்றால் அதை விரைவாக பெற்றாக வேண்டும் என ஜின்னா போன்ற முஸ்லீம்கள் கருதினார்கள். ஹசன் முன்வைத்த மிக பிரபலமான குற்றசாட்டு, காந்தி இந்து மதத்தையும் அதன் பண்பாட்டையும் இந்திய விடுதலைக்காக பயன்படுத்தினார் என்பதே. காந்தியின் மொழியிலும் அவரை சுதந்திர போராட்ட களத்தில் செலுத்தியதும் பகவத் கீதை போன்ற இந்து நூல்களே. இந்திய விடுதலையை அவர் ராம ராஜ்ஜியம் என்றார், அதற்கான போராட்டத்தை தர்ம யுத்தம் என்றார். இத்தகைய அடையாளங்களும், மேலும் காந்தி ஓர் இந்து எனும் உண்மையும் முஸ்லீம்களை நெருங்க விடாமல் செய்தது.  

மேற்குலகை பின்பற்றாமல் ஓர் சுதந்திர இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே காந்தியின் கனவாக இருந்தது என்கிறார் ஹசன். இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்கும் வாய்ப்பு குறைந்தது. முஸ்லீம்களை பொருத்த மட்டில் அவர்களுடைய மத நம்பிக்கைகளுக்கு இடமளிக்கும் ஓர் மதசார்பற்ற அமைப்பையே அவர்கள் விரும்பினார்கள். இந்து முஸ்லீம் உறவை மேம்படுத்த காந்தி மேலும் முயன்றிருக்க வேண்டும் என்கிறார் ஹசன். அவருடைய பார்வையில் காந்தியின் செயல்கள் முஸ்லீம்களை திருப்தி படுத்துவதில் தோல்வியடைந்தது, உருப்படியான எதுவுமே முஸ்லீம்களுக்கு வழங்க முன்வரவில்லை என்கிறார்.

காந்தியால் முஸ்லீம்களின் ஆதரவை பெற இயலவில்லை என்பதற்கு அவர் மட்டும் காரணமில்லை. அதற்கு முஸ்லீம்களும் ஓர் காரணமே. ஜின்னா இந்திய தேசிய காங்கிரசில் இணைவதை முஸ்லீம்கள் ஏற்கவில்லை எனும் உண்மை நமக்கு உணர்த்துவது யாதெனில் இந்து முஸ்லீம் பிளவுக்கு காரணம் காந்தியின் செயல்பாடுகள் மட்டுமல்ல என்பதைத்தான். காந்தியின் நோக்கமும் அவருடைய செயல்பாடும் அவர் முஸ்லீம்களை வெறுமே திருப்தி படுத்த முயலவில்லை மாறாக ஒருங்கிணைந்த இந்தியாவிற்காக உண்மையில் பாடுபட்டார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

சவார்க்கார் 

காந்தி முஸ்லீம்களை சமமாக நடத்தினார். இதை நாம் முன்னர் தென்னாப்ரிக்காவிலும் பின்னர் இந்தியாவிலும் காண முடிகிறது. அவருடைய மூன்று அம்ச செயல் திட்டத்தில் மிக முக்கியமானது இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்பதே. பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்தின் மீது மரியாதைக்கொள்ள வேண்டும் என அவர் நம்பினார். இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியாவில் இயல்பாகவே சகோதரர்களாகத்தான் இருக்க வேண்டும், அவர்களுக்குள் பூசல்வருவதே தனக்கு ஆச்சரியமளிக்கிறது என்றார். அவருடைய சுதந்திர இந்தியா சகோதரத்துவத்தை பேணும தேசமாக இருக்க வேண்டும் என்றே கனவு கண்டார். இந்துக்கள் முஸ்லீம்கள் அல்லது வெற்று மதத்தினர், என மதப்பாகுபாடோ இனப்பாகுபாடோ இல்லாத தேசமாக இந்தியா இருக்க வேண்டும் என விரும்பினார். இந்திய தேசியத்தின் பிரிவினை அவரை ஆழமாக காயப்படுத்திய போதும் கூட அவர் இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என விரும்பினார். காந்தி சுதந்திர போராட்டத்தை இந்துமதத்தின் தர்ம யுத்தம் என்று குறிப்பிட்டதை தவறாக அணுகுகிறார் ஹசன். காந்தி அவருக்கு  நன்றாக புரிந்த இந்துமதத்தின் மொழியில் அவருடைய கருத்தை தெரிவித்தார் என்பதே உண்மை. முஸ்லீம்கள் அவருடைய அகிம்சை, சத்யாகிரகம் மற்றும் ஒருங்கிணைந்த இந்தியா போன்ற கருத்துக்களை எதிர்த்த போது காந்தி அவர்களுடைய கருத்துக்களை எதிர்த்துள்ளார்.  அவர் முஸ்லீம் தேசியவாதிகளை மற்றும் எதிர்க்கவில்லை, உண்மையில் அவருடைய கனவிற்கு எதிராக நின்ற இந்து தேசியவாதிகளையும் அவர் எதிர்த்தார்.

காந்தியின் செயல்பாடுகள் பல இந்துக்களுக்கு இந்து மதத்திற்கு எதிரானதாக தோன்றியது. இந்து தேசியவாதியான சவார்க்கரை பொருத்த வரை காந்தி இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு எதிரானவர். காந்தியின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ் இந்துத்துவர்களின் நோக்கங்களை சிதைத்து விடும் என்று சவார்க்கர் நம்பினார். ஏனெனில் தொடர்ந்து  காந்தி முஸ்லீம்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தார். கிலாபத்  போராட்டத்தை கையிலெடுத்த காரணத்தால் காந்தி சுயராஜ்ஜியத்திற்கு போராடுவதிளிருந்து பின்னகர்ந்தார். இந்தியாவிலிருந்த சில முஸ்லீம் தலைவர்கள் ஆப்கானிஸ்தானின் அமீர் நுய்லாகானை இந்தியா மீது படையெடுத்து வர கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தனர். காந்திக்கு இந்த விஷயம் தெரிந்தே இருந்தது, ஆயினும் கூட அத்தகைய படையெடுப்பை ஆதரித்தவர்களிடம் காந்தி தொடர்பை துண்டித்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து முஸ்லீம்களை திருப்தி படுத்த முயன்ற காந்தியின் செயல்பாடுகள் இந்துக்களால் விரும்பப்படவில்லை என்கிறார் சவார்க்கார்.

இந்த விமரிசனம் நாம் ஏற்கனவே விவாதித்த காந்தியின் கனவான ஒருங்கிணைந்த இந்தியாவிற்கு வலுவூட்டுவதாகவே இருக்கிறது. அவருக்கு முஸ்லீம்கள் மீதோ அவர்களின் நம்பிக்கைகளின் மீஹோ எவ்வித வெறுப்பும் இருந்ததில்லை. தன்னைப் போல அனைவரையும் சகோதர மனப்பான்மையுடன் அணுகும் ஓர் முஸ்லீம் இந்திய தலைவராக வந்திருந்தால் காந்தி நிச்சயம் அதை எதிர்த்திருக்க மாட்டார். காந்தி ஒரு முறை சொன்னார் “ இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள் தானே, இப்பொழுது இஸ்லாமை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்”. முஸ்லீம்களை தங்கள் சகோதரர்களாக ஏற்க முடியாத இந்துக்களின் குறுகிய மனப்பான்மையை விமரிசித்தார், அந்த விமரிசினத்திளிருந்தே காந்தியை சவர்க்கார் அணுகுகிறார்.

இதுவரையில் காந்தியை விமரிசித்த மூன்று தரப்புகளின் விசனங்கள் புரிந்துக்கொல்லக் கூடியதே ஆனால் தாழ்த்தப்பட்ட தரப்பினர் அவர் மீது தொடுக்கும் விமரிசனங்கள் உண்மையில் ஆச்ச்சர்யமளிக்கின்றன. அம்பேத்காரை பொருத்தவரை காந்தி சாதி மற்றும் வர்ண அமைப்புகளுக்கு கொடி பிடிப்பவராகவே தென்பட்டார். காந்தி சாதி அமைப்பை இந்து மதத்தின் முதுகெலும்பு என கருதினார். அவர் உதவி புரிய முயன்ற தீண்டத்தகாதவர்களின் வாழ்வில் ஏற்பட்ட அத்தனை சிக்கல்களுக்கும் காரணமான சாத்திய நம்பிக்கைக்கு எதிராக அவர் எதுவுமே செய்யவில்லை.
அம்பேத்கார் அவருடைய விமரிசனத்திற்கு ஆதரவாக காந்தியின் சில கருத்துகளை கையில் எடுத்தார், “ சாதி கலப்பு திருமணங்கள் நடந்து தான் தேசம ஒற்றுமையாக திகழ வேண்டும் என அவசியமில்லை, சமபந்தி போஜனமும் அமைதியை ஏற்படுத்திவிடாது. மேற்குலக பாணியில் ஓர் சமூகத்தை அமைத்துக்கொள்ள விரும்பி நம் சாத்திய அமைப்பை முற்றாக துறப்பது விரும்பத்தாகத விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்”. அம்பேத்காரை பொருத்தவரை காந்தியின் எண்ணங்களில் ஜனநாயக தன்மை இல்லை, ஏனெனில் பாகுபாடுகளை திட்டவட்டமாக சட்டவிரோதமாக கருதும் மேற்கு நாடுகளின் சமூக அமைப்பை அவர் எதிர்க்கிறார்.

அம்பேத்கார் 
காந்தியின் கொள்கைகளை பழமையானது, கட்டுப்பெட்டிதனமானது, நடைமுறைக்கு ஒவ்வாதது என விமரிசிக்கிறார். காந்தியின் இயந்திர எதிர்ப்பையும், அவரது சர்க்கா மீதான காதலையும் அம்பேத்கார் புரந்தள்ளுகிறார். காந்தியின் கொள்கைகள் தாழ்த்தப்பட்ட மக்களை கைத்தூக்கி விடாது மாறாக அவர்களுடைய சமூக, பொருளாதார சிக்கல்களில் இருந்து இத்தகைய நவீன தொழில்நுட்பங்களும், இயந்திரங்களும் அவர்களை மீட்டு வளர்ச்சி பாதையில் கொண்டு சேர்க்கும் என அவர் நம்பினார். எளிய மனிதனுக்கு காந்தியின் கொள்கைகள் எவ்விதத்திலும் உதவாது என்பது அம்பேத்கார் காந்தியின் மீது சொல்லும் முக்கியமான குற்றசாட்டு. பண்பாடே  ஒரு மனிதனை கைதூக்கி விடும், பண்பாடு  வளர்ந்து மானுடத்தை விடுதலை செய்யும். மனிதனையும் மிருகத்தையும் பிரிக்கும் ஒரே அம்சம் பண்பாடே. மக்களுக்கு ஒய்வு நேரம் இல்லையென்றால் பண்பாடு அவர்களை சென்று சேராது. மக்கள் கடினமாக உழைப்பது குறைந்தால் தான் அவர்களுக்கு ஒய்வு கிடைக்கும். இயந்திரங்கள் எளிய  மனிதர்களின் வேலைபளுவை குறைத்து அவர்களுக்கு கூடுதல் ஓய்வை அளிக்க வல்லது. அந்த ஒய்வு நேரத்தை கொண்டு அவன் தன்னை உயர்த்திக்கொள்ளலாம்.

காந்தி சாதி அமைப்பை இந்து மதத்தின் ஓர் களங்கம் என்றே கருதினார். சாதி அமைப்பு சில ஆக்கப்பூர்வ பங்களிப்புகளையும் ஆற்றியுள்ளது என்று அவர் கூறியதன் பின்னணியில் அவருடைய சத்திய வேட்கை மட்டுமே இருக்கிறது. அதாவது சாதி அமைப்பின் சாதக பாதக அம்சங்கள் என இரண்டையுமே கணக்கில் கொள்ள வேண்டும் என அவர் கருதினார். காந்தி எப்போதும் தீண்டத்தகாதவர்களின் நண்பனாகவே இருந்து வந்தார், அவர்களின் நிலையை கண்டு வருந்தினார். அவர் தீண்டத்தகாதவர்களை தன் ஆசிரமத்திற்குள் அனுமதித்து தீண்டாமைக்கு எதிராக போராடினார். அப்படி அவர் செயலாற்றியதற்கு பல இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், பலர் நிதியுதவியை நிறுத்தினர், ஆனால் அவர் அதை கைவிடவில்லை. “நம்மைவிட ஒருவர் தாழ்ந்தவர் என நம்புவது மிகப்பெரிய பாவம், அந்த பாவமே நம்மை களங்கப்படுத்துகிறது இவர்களின் தொடுகை அல்ல..சாதி அமைப்பு என்பது இந்து மதத்தின் ஓர் களங்கம் தான் அதை நாம் முடிவுக்கு கொண்டுவந்தாக வேண்டும்” என்றார் அவர்.

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை நடத்துவது போல் இந்துக்கள் தீண்டத்தகாதவர்களை நடத்துகிறார்கள் என்று சக இந்துக்களை காந்தி கடுமையாக விமரிசித்தார். அவர் பார்வையில் ஆங்கிலேயர்களின் நடத்தை தவறெனில் இந்துக்களின் நடத்தையும் தவறே. நம் ரத்த சகோதரர்களாக அவர்களை நடத்த வேண்டும், உணமையில் அவர்கள் சகோதரர்கள் தான்..நம்மை நாமே இந்த கீழான நிலையிலிருந்து விடிவித்துக்கொண்டால் தான் உண்மையான ஸ்வராஜை அடைய முடியும்”.

மேற்குலக பாணியில் பின்பற்றி அமையும் சமூகமோ, சாதி கலப்பு திருமனன்களோ, சமபந்தி போஜனங்களோ அமைதியையும் சகோதரத்துவத்தையும் மீட்டிட முடியாது என்பதே நிதரிசனமான உண்மை. இந்துக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாமல் இவை அனைத்தும் பயனில்லாதது என்று கருதினார் அவர். சட்டங்கள் மூலம் ஒருவர் மனதில் உள்ள பாகுபாடை களைந்துவிட விட முடியாது, மாறாக அவருடைய மன உறுதியே அதை செய்ய முடியும். மேற்குலக நாகரீகத்தை அடிப்படையாக கொண்ட சமூக அமைப்பு இந்தியர்களை நாகரீகப்படுத்தும் எனும் அம்பேத்காரின் நம்பிக்கை காந்திக்கு ஏற்புடையதாக இல்லை.

காந்தியை பொருத்தவரை நாகரீகத்திற்கு இணையாக கருதப்பட வேண்டியது, நன்னடத்தை. மேற்குலக நாகரீகம் பொருளியல் இச்சைகளால் செலுத்தப்பட்டது, தீவிர நுகர்வும் போட்டியும் நிறைந்து இருந்தது. இந்த அம்சங்களை இந்தியா உள்வாங்கிகொண்டால் அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இந்தியர்களுக்குமே பாதிப்பை ஏற்படுத்தும். அம்பேத்கார் எண்ணுவது போல் தொழில்மயமாதல் நடந்தேறினால் அது தீண்டத்தாகதவர்களையே அதிகம் பாதிக்கும் என கருதினார். இயந்திரங்களின் அறிமுகத்தால் பலர் வேலை இழக்க நேரிடும், அதனால் பசி, பட்டினி, ஏழ்மை போன்றவை அதிகமாக கூடும் என்று எண்ணினார்.  

சிலர் பயனடைந்தாலும், பலர் அதனால் பாதிப்புக்கு உள்ளாவர்கள். இயந்திரங்களின் பயன்பாட்டை தவிர்ப்பதால் வளர்ச்சி நேராமல் இருந்திடாது என காந்தி கருதினார், ஏனெனில் உண்மையான வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மக்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தியர்கள் அனைவரும் வளர்ச்சி அடைவது மட்டுமே காந்தியின் பார்வையில் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். அனைத்து இந்தியர்களின் தேவையையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரே இயந்திரம் கை ராட்டையாகவே இருக்க முடியும். அதை கொண்டு மக்கள் தங்களுக்காக உழைத்து தன்னிறைவு அடையலாம் என்று எண்ணினார்

காந்தி மகத்தான சிந்தனைகளை சுமந்து திரிந்த சாதாரண மனிதர். அவரை விமரிசிப்பவர்கள் அவரையும் அவரது எண்ணங்களையும் தவறாக புரிந்துக் கொண்டனர் என்பதே அவர்களுடைய விமரிசனங்களுக்கு காரணம். காந்தி மிகப்பெரிய கனவுகளை காண்பவர், இவர்கள் அவருடைய கனவை தமதாக்கி கொள்ள முடியாதவர்கள், தொலை நோக்கு பார்வை குறைந்தவர்கள் ஆகவே இந்த விமரிசனங்கள். 

காந்தியின் மகத்தான கனவு சுதந்திர இந்தியாவில் நிறைவேறவில்லை என்பதில் எவ்வித ரகசியமும் இல்லை. அப்படியென்றால் அவருடைய வழிமுறை தோற்றுவிட்டது என்று பொருளா? காந்தியை பொருத்த வரை “ அன்பையும் சத்தியத்தையும் அடிப்படையாக கொண்ட வழிமுறை ஒரு போதும் தோற்காது. எத்னும் தோற்றது என்றால் அது “நான் தான்” என்று ஒரு முறை அவரே ஒப்புக்கொண்டார். வாழ்க்கை முழுவது சத்தியத்தை தேடி திரிந்த ஓர் மனிதர் பிற அனைவரையும் போல சில தவறுகளுக்காக விமரிசிக்கப் படுகிறார். அந்த விமரிசனங்கள் உண்மையாகவே இருப்பினும் கூட அதனால் காந்தி இந்தியாவிற்கும் மானுட குலத்திற்கும் ஆற்றிய மகத்தான பங்களிப்பு இல்லாமல் ஆகிவிடுமா என்ன ? 

-நரோபா




No comments:

Post a Comment