Friday 23 November 2012

காந்தியும் போப்பும்


காந்தி இன்று தளத்தில் வெளியான மொழியாக்க கட்டுரையின் முழு வடிவம்,,

காந்தி சந்திக்க விரும்பி அவரை சந்திக்க மறுத்தவர்கள் வரலாற்றில் இருவர் மட்டுமே உண்டு. ஒருவர், அந்நாளைய ஆங்கிலேய பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், அவர் காந்தியை எப்படி அணுகினார் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மற்றொருவர் அன்றைய ரோமன் கத்தோலிக்க அமைப்பின் தலைவர், போப் பதினோராம் பயஸ். சுமார் எண்பது வருடங்களுக்கு முன்னர் போப்பை சந்திக்கும் எண்ணத்தில் காந்தி ரோமுக்கு பயணித்தார். துரதிருஷ்டவசமாக, போப் பதினோராம் பயஸ் காந்தியை சந்திக்க இயலவில்லை, மாறாக வாட்டிக்கன் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். ஊடகங்கள், வாட்டிக்கன் தரப்பு அதன் உடை நியதிகளைக் கடுமையாகப் பின்பற்றியதே காரணம் எனக் கடுமையாக விமரிசித்தன.
பீட்டர் கோன்சால்வஸ் எழுதிய இந்தக் கட்டுரை, சற்று ஆழமாக அன்றைய சூழலை ஊடுருவிச் சென்று அவர்கள் சந்திப்பு சாத்தியமற்று போனதற்கான உண்மையான காரணத்தை அறியும் முயற்சி. தன்னுடைய ஆய்வின் ஊடாக, பீட்டர் ஒரு அதிர்ச்சியான கண்டடைதலை முன்வைக்கிறார். காந்தி, போப், இருவருமே அவர்கள் அறியாமலேயே இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய ஒரு அரசியல் சதுரங்க விளையாட்டில் சிக்கிய பகடைக்காய்களாக மாறியிருக்கக்கூடும் என்கிறார். பீட்டர் கோன்சால்வஸ் நவீன காலத்தின் முக்கியமான காந்திய ஆய்வாளர், காந்தி ஆடையை குறியீடாக கொண்டு அரசியல் களத்தில் சாதித்ததை பற்றி அற்புதமான ஒரு நூலை எழுதியுள்ளார், தமிழில் விகடன் பதிப்பக வெளியீடாக ‘காந்தியின் ஆடை பெற்றுத்தந்த சுதந்திரம்’ எனும் பெயரில் வெளிவந்துள்ளது. ஒரு துப்பறியும் சிறுகதைக்குரிய விறுவிறுப்புடன் ஆய்வு தரவுகளை முன்வைத்து அன்றைய சூழலை அற்புதமாகக் கட்டமைக்கும் முக்கியமான கட்டுரை இது. பகுதிகளாக வரவுள்ள கட்டுரையை தமிழில் காந்தி தளத்துக்காக மொழிபெயர்த்து தந்துள்ளார் நண்பர் நரோபா அவர்கள். - ஆசிரியர் குறிப்பு



சர்ச்சில் 
 லண்டனில் இரண்டாவது வட்ட மேஜை மாநாடு முடித்துக்கொண்டு காந்தி தெற்கு இத்தாலியில் உள்ள ப்ரிண்டிசி (Brindisi) துறைமுகத்தில் இந்தியா திரும்ப கப்பலேறுவதாகத்தான் திட்டம். சுவிட்ஸர்லாந்தில் அவருடைய நண்பரான ரோமைன் ரோலாந்தின் விருந்தினராகக் கொஞ்ச காலம் கழிக்க முடிவு செய்தார். பின்னர் ரோமில் ஒரு நாள் தங்கி போப் பதினோராம் பயசை சந்திக்கவும் திட்டமிட்டார். ஆங்கிலேய தூதரக வட்டாரங்கள் வழியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரை சந்திக்க முயற்சித்தார்.

 டிசம்பர் 12, 1931 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ரோமைச் சென்றடைந்த அவருக்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில் போப்புக்கு சனிக்கிழமை போதிய நேரமில்லாததால், காந்தியை அன்று சந்திக்க வாய்ப்பில்லை என்றும், மாற்றாக அன்று மதியம் வாட்டிகன் அருங்காட்சியகத்தை டைரக்டர் ஜெனரல் உடன்வர சுற்றிபார்க்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், பொதுவாகவே ஞாயிறு அன்று போப் எவரையும் சந்திப்பதில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கும் தொனியில் அதில் எழுதப்பட்டிருந்தது. 

 மறுநாள், யுனிவர்சல் நியூஸ் ரீல், காந்தியின் குறைந்த ஆடையின் காரணமாக போப்பின் சந்திப்பு நிகழவில்லை எனும் ரீதியில் தலைப்பு தாங்கி ஒரு செய்திப்படம் வெளியிட்டது. உலகெங்கும் உள்ள செய்தி நிறுவனங்களும் ஏறத்தாழ இதே ரீதியில் செய்தியைத் தாங்கிச் சென்றன. போப் பதினோராம் பயசின் பிம்பம் வெகுவாக சிதைக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும், உலகெங்கிலும் கடுமையான கண்டங்கள் எழுந்தன, குறிப்பாக காந்தியின் ஆதரவாளர்களிடமிருந்து. அரிசோனா, ப்யுநிக்ஸ் மாகாணத்திலிருந்து கடும் சினத்துடன் தன்னை “ கிறித்துவின் மெய்யான பிரதிநிதியான காந்தியின்- சீடர், அவரை பின்தொடர்பவர், அவர் மீது அக்கறை கொண்டவர்” என்று அழைத்துக்கொண்ட ஒரு கத்தோலிகர்  போப்புக்கு அன்றே ஒரு கடிதம் எழுதினார், நாளிதழ்களில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, வெறும்காலில் வந்தார் என்பதற்காக அவரை சந்திக்க மறுத்த போப்பின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து பொங்கித் தீர்த்திருந்தார். ஐரோப்பிய கலாச்சார பின்புலத்தில் பார்த்தோமேயானால், காந்தி போதுமான ஆடைகளை அணியவில்லை என்பது உண்மைதான், அங்கு நிலவும் குளிர்காலத்திற்கு அது நிச்சயம் உதவாது. அவருடலை சுற்றி அணிந்திருந்த நீளமான ஒற்றை வெள்ளை கம்பளி போர்வைதான் அவரை கடும் குளிரிலிருந்து காத்தது. முழங்காலுக்கு கீழ் குளிர் நேரடியாக தாக்கும், காலில் மெலிதான தோல் செருப்புகள் பாதத்தை ஒட்டி இருந்தன. வட்டமேஜை மாநாட்டிற்காக அவர் லண்டனில் தங்கியிருந்த மூன்று மாதங்களிலும் இப்படித்தான் வாழ்ந்திருந்தார், மாநாட்டு அமைப்பினர் ஏற்படுத்தித்தந்த வசதியான குடியிருப்பைத் துறந்து லண்டனின் கிழக்கு மூலையில் வசித்து வந்த ஏழை மக்களுடன் அவர்களிடத்தில் வசித்தார்.    

 வாடிக்கன் உடை விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றியது என்பதும் உண்மைதான். சரியான உடையணிந்து வருவது போப்பைச் சந்திக்க வேண்டுமெனில் பின்பற்றவேண்டிய அத்தியாவசியமான விதிமுறைதான். அன்றைய சூழலில், அப்போதுதான் ‘லதெரன் ஒப்பந்தம்’ கையெழுத்தாகி, போப் பதினோராம் பயஸ் புதிதாக உருவான வாடிக்கன் தேசத்திற்கு ஒரு அரசனை ஒத்த அதிகாரம் கொண்ட  ஒப்பற்ற நிர்வாகியாக  மீண்டும் பதவி ஏற்றிருந்தார். 

 இந்தியர்களாலும், உலகெங்கிலும் உள்ள லட்சகணக்கான மக்களாலும் கொண்டாடப்படும் தலைவராக காந்தி இருந்தாலும், அன்றைய விதிமுறைகளின்படி அவர் வாடிக்கன் பீடத்தோடு சீரான உறவுகொண்ட ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு சாமானிய குடிமகன்தான். அவர் அதிகாரபூர்வ தூதுவரும் இல்லை, வட்ட மேஜை மாநாடில் அவர் பிரதிநித்துவப்படுத்திய இயக்கமான காங்கிரஸ் ஆங்கிலேய காலனியாதிக்க அரசால் அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப் படவில்லை. ஆகவே போப் அவரை வரவேற்க வேண்டும் எனும் நிர்பந்தம் ஏதுமில்லை.  

அதே வருடத்தின் கோடை காலத்தில் ஆங்கிலேய பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ், காந்தி மற்றும் இதர வட்டமேஜை மாநாடு பிரதிநிதிகளை சிறப்பாக வரவேற்று கவனித்ததுடன் ஒப்பிடும்போது போப்பின் ‘சந்திக்க இயலாமை’ மிகவும் மரியாதைக் குறைவான நிகழ்வாகத்தான் தென்படும். வட்டமேஜை மாநாட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த காந்தியிடம் ஒரு நிருபர் அவருடைய ஆடையை பற்றி கேள்வி எழுப்பினார், ஒருவேளை ஆங்கிலேய மன்னர் அவரை பக்கிங்காம் அரண்மனைக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார் என்றால், அவர் அவருடைய வழக்கமான இந்திய ஆடையைத்தான் அணிந்து செல்வாரா? காந்தி சொன்னார், “வேறு எந்த உடையில் சென்றாலும் அது அவரை அவமதிப்பதாக இருக்கும், ஏனெனில் அது செயற்கையாக துருத்தி தெரியும்.” சந்திப்பு முடிந்தவுடன், சூழ்ந்திருந்த நிருபர்கள் அவரிடம் அரசனின் அருகாமையில் இருந்தபோது இத்தனை குறைவான ஆடை அணிந்து வந்தது குறித்து உங்களுக்கு ஏதும் அவமானம் இல்லையா என்றார்கள். அதற்கு அவர் “ நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? மாண்புமிகு அரசரே எங்களிருவருக்கும் சேர்த்து போதுமான ஆடை அணிந்திருந்தார்.” என்றார்.
போப் பதினோராம் பயஸ் 

தான் அணிந்திருந்த அந்த அரையாடைதான் தன் நோக்கத்தை சிறப்பாக வெளியுலகுக்குக் காட்டும் குறியீடு என்பதில் அவருக்கு சிறிதளவும் ஐயமில்லை. அதுவும் இந்தியாவை சீரழித்த காலனியாதிக்க அமைப்பின் உச்சக்கட்ட அதிகாரத்தைக் கொண்ட பேரரசரின் அண்மையில் அந்த ஆடை மூலம் உணர்த்தப்படும் செய்தி மேலும் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதால் இந்த வாய்ப்பை அவர் தவறவிடத் தயாரில்லை. காந்தியின் ஆடையின் பின்புலத்தில் உள்ள குறியீடு பற்றிய பிரக்ஞை எதுவும் பேரரசருக்கு இருந்ததாக தெரியவில்லை. ஆனால், அன்றைய பாராளுமன்ற உறுப்பினரான வின்ஸ்டன் சர்ச்சில்லின் வெளிப்படையான அதிருப்தியையும் பொருட்படுத்தாது மாமன்னர் காந்தியை நன்கு உபசரித்தார் என்றே சொல்ல வேண்டும். இந்திய அரசின் ஆலோசகர் , அப்துல் காதிர் குறிப்பிடுகிறார் “ நானறிந்த வரையில் இத்தகைய உடையணிந்த ஒருவர் இதற்கு முன் அரண்மனையில் அனுமதிக்கப்பட்டதில்லை, அதேபோல் வேறு எவருக்கும் இத்தனை சுதந்திரம் அங்கு சாத்தியமாயிருக்குமா என்பதையும் என்னால் ஊகிக்க முடியவில்லை”.    

இதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் அமெரிக்க ஊடகங்கள் உப்பு சத்தியாகிரகத்திற்கு முக்கியத்துவம் அளித்து முழுமையாக அதை பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்த காரணத்தினால் காந்தி சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்தார். பத்து மாத இடைவேளையில் இருமுறை டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற்றார். முதலில் மார்ச் 31, 1930 ல் ஒருமுறையும் பின்னர் ஜனவரி 5 1931 ல் அந்த ஆண்டுக்கான டைம்ஸ் மனிதராக தேர்ந்தெடுக்கப் பட்டதை ஒட்டியும். ஐரோப்பாவிலும் அவர் பெரும் புகழ் பெற்றவராக இருந்தார். மிலன், ரோம், ப்ரிண்டசி என எங்கு சென்றாலும் மக்கள் திரண்டு நின்று வித்தியாசமாக உடையணிந்து திரியும் புனிதர் காந்தியைக்  காண குழுமியிருந்தனர்.


 இத்தகைய ஒரு வாய்ப்பை போப் ஏன் பயன்படுத்திக்கொள்ள தவற வேண்டும்? அதுவும் காந்தியே அவரைக் காணவேண்டும் என ஆவல் தெரிவித்த பின்னர்? அவருடைய ஆலோசகர்கள் இந்த சந்திப்பு மறுக்கப்படுவதன் மூலம், சர்ச் அமைதியைப் பரப்பும் ஓர் அமைப்பு எனும் பிம்பம் அடிபடும் என்பதை சிந்திக்கவில்லையா என்ன?

பிரெஞ்சு குறிப்புகள்

காந்தி அங்கு வருகை தந்த அன்று காலை , தட்டச்சு செயப்பட்ட தேதியிடாத ஒரு அநாமதேய குறிப்பு ஒன்று துணை செயலர் மான்சிக்னோர் ஆல்பிரெடோ ஓட்டவியாணி மூலம் வருங்கால போப் பனிரெண்டாம் பயஸ் ஆன கார்டினல் யுஜெனியோ பசெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த பிரெஞ்சு குறிப்புடன் டிசம்பர் 12, 1931 என்று தேதியிட்ட  ஒரு அறிமுக கடிதம் ஒன்று ஜெஸ்யூட் பாதிரியான பெட்ரோ போயேட்டோ  இத்தாலிய மொழியில்  எழுதி இணைத்திருந்தார். அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

 ‘ புகழ்மிக்க காந்தி இன்று ரோமுக்கு வரவிருக்கிறார் எனும் செய்தியை நாளிதழ்களில் வாசித்தேன். ஆகவே, இந்தியாவிலிருந்து அண்மையில் இப்படிப்பட்ட ஒரு நபரின் ரோம் வருகையை பற்றியும், அவர் புனிதத் தந்தையை சந்திக்க வாய்ப்பிருப்பதை பற்றியும் வந்துள்ள நம்பகமான தகவல் ஒன்றை ரகசியமாக உங்களுக்கு தெரியப்படுத்துவது முக்கியம் என்று எண்ணுகிறேன்.

"கிடைத்துள்ள தகவல் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட விவாதங்களின் (எவ்வித கோரிக்கையும் முன்வைக்காமல் உள்ளதை உள்ளபடி சொன்னது) அளவிற்குதான் முக்கியமானது. இருந்தாலும், அந்த தேசங்களின் மனநிலையை அறிந்துகொள்வதில் தவறேதும் இல்லை என்றே எண்ணுகிறேன்."

அந்த குறிப்பு – காந்தியை பற்றிய சுருக்கமான தகவல்களுடன் தொடங்குகிறது. காந்திக்கும் இந்திய கத்தோலிக்க சமூகத்திற்கும் உள்ள உறவு, ப்ரீ மேசன்ஸ் கூடுகையில் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு, லண்டனில் உள்ள க்வாக்கர்ஸ் அமைப்பினரை சந்தித்தது போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. காந்தியின் அன்றைய நிலை குறித்தும் கேள்விகளை எழுப்பியது.     

"காந்தி எந்த திட்டத்துடன் ரோமுக்கு வருகிறார் என்பதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்: இங்கிலாந்தின் உடன்படிக்கைகளில் கையொப்பமிடும் பிரதிநிதியாகவா? அல்லது மீண்டும் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கவிருக்கும் அழுத்தமான மனிதராகவா? . ஆக்ஸ்போர்டில் மாநாடு தோல்வியடைந்தால் (அது தோல்வியடைந்து விட்டது) மீண்டும் புதிய சட்ட மறுப்பு மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்குவதற்கு வாய்ப்புண்டு என்றார், அதன் விளைவாக அழிவுகளும் உயிர்பலிகளும் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த சூழலில்  லண்டனில் உள்ள இந்திய அலுவலகமும் திரு. போர்ப்சும் (போப் சம்பந்தமான விவகாரங்களை கவனிக்கும் ஆங்கிலேய வெளியுறவு துறை அதிகாரி) தவறாக புரிந்துகொள்ளும்படியாக காந்தியை நாம் நடத்திவிடக் கூடாது."

அந்த குறிப்பின் இரண்டாம் பகுதியில் போப் காந்தியை சந்திப்பதால் ஏற்படும் சாதக பாதகங்கள் அலசப்படுகின்றன. 

ஒருவேளை அனுமதித்து சந்திப்பு நிகழ்ந்தால், காந்தி போப்பின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு கத்தோலிகத்தின் பெருமையை அங்கீகரிப்பதாக புரிந்துக்கொள்ளப்படும். அதேபோல் போப்பும் காந்தியை சுதந்திர இந்தியாவில் கத்தோலிகர்களின் உரிமையை மதிப்பவராக, நம்பகத்தன்மை உடையவராக அன்கீகரித்ததாக அது சித்தரிக்கும். மேலும் “ரோமின் மகத்துவத்தை” காந்தி உணர்வதற்கும் அது ஒரு வாய்ப்பாகும்.

 இதற்கு மாறாக, காந்தி- போப் சந்திப்பு நிகழ்ந்தால், போப் தன்னுடைய குழுவை சேர்ந்தவர்களை பாதுகாக்க தவறிய ஒரு தேசியவாத இயக்கத்திற்கு தன்னுடைய ஆசியையும் ஆதரவையும் வழங்கியதுபோல் ஆகிவிடும். மேலும், காந்தி வட்ட மேஜை மாநாட்டில் கத்தோலிக்க சமூகத்தின் பிரதிநிதியாக வந்த ஏ.டி.பன்னீர்செல்வத்தை (குறிப்பில்- சிறுபான்மையினரை ஒருங்கிணைக்க முயன்றவர் என்று இவரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது) புறக்கனித்திருந்த சூழலில் போப் காந்தியை வரவேற்று ஏற்றுக்கொள்வது தவறாக பொருள் கொள்ளப்படும். பிற்காலத்தில் பன்னீர்செல்வத்தின் மீது காந்தி கொண்ட வெற்றியாகவும் சித்தரிக்கப்படக்கூடும். இந்த செய்தியின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை என்பது ஒரு புறம் இருக்கட்டும், இதை போப் வாசித்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்றுதான் தோன்றுகிறது. போயேட்டோவின் கடிதத்தில் மேலே “ புனித தந்தை ஏற்கனவே இயலாது என்று தன்னுடைய முடிவை அறிவித்துவிட்டார் இந்த தகவல் திரு போர்ப்ஸ் அவர்களுக்கும் தெரியப்படுத்தப் பட்டது” என்று எழுதப்பட்டிருந்தது.

 இந்திய ரோமன் கத்தோலிக்கர்கள்.

 காந்தி ரோமைன் ரோலாந்திடம் தான் போப்பை சந்திக்க விரும்பிய காரணத்தை தெரிவித்தார் “அவரை சந்திக்க வாய்ப்பு கிட்டினால், இந்திய ரோமன் கத்தோலிக்கர்களை எளிதாக எதிர்கொள்ள முடியும்” என்று கருதினார். இந்திய ஜனத்தொகையில் மிக குறைவான அளவு பங்கு வகித்த ஒரு சமூகத்தின் தலைவரை காந்தி ஏன் சந்திக்க வேண்டும் எனும் கேள்வி இயல்பாக எழக்கூடும்.

சுதந்திரத்திற்கு முன்பான இந்தியாவில் கத்தோலிக்கம் மற்றும் ப்ரோடஸ்டென்ட் பிரிவை ஒன்று சேர்த்தும்கூட அவர்களுடைய எண்ணிக்கை 0.85 % அளவுக்கு மட்டும்தான் இருந்தது.   

 ஆங்கிலேய ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியாவில், கத்தோலிக்கர்கள் ஓரளவு மத ரீதியாக சுதந்திரத்தை அனுபவித்து வந்தனர். காந்தி சுயராஜ்ஜியத்திற்கு விடுத்த அறைகூவல் அவர்களுக்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆங்கிலேய அதிகாரம் வெளியேறிய பின்னர் பிறக்கும் சுதந்திர இந்தியாவிலும் தாங்கள் முன்னர் அனுபவித்து வந்த சுதந்திரம் நீடிக்குமா என்பதில் அவர்களுக்கு ஆழ்ந்த சஞ்சலம் இருந்தது. காந்தி வேறு கிறித்தவ மிஷனரி செயல்பாடுகளை ‘அன்னிய செயல்பாடு ‘ என்றும் ‘தேசியவாத உணர்வுகளுக்கு’ எதிரானது என்றும் கருதினார் எனும் சூழலில், அவர் உருவாக்க முனையும் புதிய தேசம் ஓர் இந்து தேசமாக இருக்குமோ எனும் ஐயம் அவர்களுக்கு இருந்தது. அவர்களுடைய இந்த ஐயத்தை அதிகரிக்கும் விதமாக இந்தியாவிற்குள் இந்து நாடு கோரும் குரல்களும் சற்று பலமாக ஒலிக்கத்தொடங்கின. இந்திய கத்தோலிக்கர்கள், ப்ரோடெஸ்டென்ட் கிறித்தவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் தங்கள் மத நம்பிக்கைகளை பின்பற்றும் சுதந்திரம் பறிபோகுமோ என சந்தேகித்தனர்.    

இதன் விளைவாக கத்தோலிக்க பாதிரிமார்கள் காந்தி வழிநடத்திய இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தினர். அரசியல் கட்சிகள் சார்ந்து எந்த நிலைப்பாடுகளும் எடுப்பதில்லை எனும் போப் பதினோராம் பயசின் நிலைப்பாடையே அவர்களும் கைகொண்டனர் “ கத்தோலிக்கத்தை எந்த வித அரசாங்க வழிமுறைகளோடும் தொடர்புப்படுத்துவது என்பது அடிப்படையிலேயே தவறானது மட்டுமின்றி ஆபத்தானதும் கூட.” என்று சொல்லப்பட்டது.

காந்தி மதமாற்றம் குறித்து கொண்டிருந்த பார்வை வேறு கத்தோலிக்கர்களின் கவலையை அதிகரித்தது. மார்ச் 21, 1931 அன்று இந்தியாவிற்கு சுயாட்சி கிட்டிய பிறகு அமெரிக்க மற்றும் இதர வெளிநாட்டு மிஷனரிகள் அங்கு தொடர்வதை பற்றிய அவருடைய எண்ணம் என்ன எனும் கேள்விக்கு, காந்தி “அவர்கள் கல்வி, ஏழைகளுக்கான மருத்துவ சேவை போன்ற மனிதநேய செயல்பாடுகளுடன் நிறுத்திக்கொள்ளாமல் அதை மதமாற்றத்திற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். நான் அவர்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதையே விரும்புகிறேன், ஒவ்வொரு தேசமும் தனது நம்பிக்கையை பிறவற்றிற்கு இணையானதாகவே கருதும். நிச்சயமாக இந்திய மக்கள் பின்பற்றும் மகத்தான மார்க்கங்கள் அவர்களுக்கு போதுமானதாக இருக்கும். ஒரு மார்க்கத்திலிருந்து மற்றொன்றை தழுவ வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இல்லை." என்று பதிலளித்தார்.

இந்திய கதோலிக்க ஊடகம் உடனடியாக எதிர்வினையாற்றியது,  சென்னையைச் சேர்ந்த கத்தோலிக்க தலைவர், "இதற்கு முன்பு வரை கிறித்துவ அறங்கள் மீதும் பெருமதிப்பு கொண்டவராக தம்மை காட்டிக்கொண்ட காந்தியின் சாயம் வெளுத்து, உண்மையான நிறம் இப்போது தான் வெளிப்படுகிறது," என்று விமர்சித்தார். மும்பையிலிருந்து வெளிவந்த எக்சாமினர் பத்திரிக்கை இன்னும் ஒருபடி மேலே சென்றது, காந்தி தன்னுடைய உண்மையான காவி நிறத்தை வெளிப்படுத்திவிட்டார் என்று சொன்னதுடன் நிற்காமல், காந்தி சில கிறித்தவ வரிகளை கையாள்வதைக் கொண்டு அவரை கிறித்தவராக எடைபோட்ட ப்ரோடெஸ்டென்ட்  மனநிலையையும் இடித்துரைத்தது.  ஹெரால்ட் மேலும் ஒருபடி சென்றது, போப் தனிப்பட்ட முறையில் “ காந்தி “மிகுந்த துணிவுள்ள” மனிதராக இருக்கலாம், ஆனால் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏதும் அன்றைய சூழலில் எழவில்லை என்றே கருதுகிறார் என்று எழுதியது. மேலும், ஹெரால்டின் கூற்றுப்படி காந்தி போப்பை சந்திக்க ஆவலாக இருந்ததன் பின்புலத்தில், இந்திய பாதிரிமார்களை சுதந்திரபோராட்ட களத்திற்கு ஆதரவு நல்குமாறு போப்பிடம் கேட்டுக்கொள்ளும் அவா இருந்தது என்றது. இந்திய கத்தோலிக்கர்களையும் போராட்ட களத்தில் ஈடுபடுத்த முடிந்தால், காந்தி சிறுபான்மையினரை காலனியாதிக்க அரசுக்கு எதிராக ஒருங்கிணைப்பதில் மேலும் ஒரு படி முன்னேறி இருப்பார்.    

இந்த தர்க்கம் சரியானதாக இருந்தால் காந்தி வட்ட மேஜை மாநாடில் பங்கேற்ற கத்தோலிக்க பிரதிநிதியான பன்னீர்செல்வத்தை சுமூகமாக அரவணைத்திருக்க வேண்டும், மாறாக கத்தோலிக்கர்களைக் காட்டிலும் சிறுபான்மையினராக இருந்த சீக்கியர்களின் சிறப்பு பாதுகாப்புக்கான கோரிக்கைக்கு செவிசாய்த்த அவர் கிறித்தவர்களின் கோரிக்கையை பட்டும் படாமலே அணுகியதன் மூலம் அவரைப் புண்படுத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த பின்புலத்தில், வட்டமேஜை மாநாட்டில் நடந்தவற்றுக்கு சமரசம் செய்து கொள்ளும் முகமாக போப்பை சந்திக்க விரும்பினாரா காந்தி?   

காந்தியே இந்த விவகாரத்தில் தெளிவின்றி இருந்தது போலத்தான் தெரிகிறது. கத்தோலிக்கர்களை மேலும் திறமையாக எதிர்கொள்ள இந்த சந்திப்பு உதவும் என்று பகிரங்கமாக பேசியிருந்தாலும், இந்திய மக்களின் வெவ்வேறு மதப் பிரிவுகளின் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் சுமூகமாக உறவுகொள்ளும் தனது வழக்கமான வழிமுறையின் ஒருபகுதியாகவும் இதைக் கண்டார். பேச்சினூடாக ரோலாந்திடம், “ இஸ்லாமிய தலைவர்களை நான் எப்படி சந்திக்கிறேனோ அதேபோல் அவர்களுடைய (கத்தோலிக்க) தலைவர்களையும் சந்திக்க வேண்டும்” என்றார்.  
போப் பதினோராம் பயஸ்

கத்தோலிக்க மார்க்கத்தைப் பெயரளவிற்கு மட்டும் பின்பற்றும் போர் வெறி கொண்ட நாடுகளின் தலைமை மையத்தில் ஒரு ஆன்மீக, அறசார்புள்ள ஆளுமை இருப்பதாகத் தோன்றிய காரணத்தால், காந்தி போப்பை சந்திக்க விரும்பியிருப்பாரோ? அம்ப்ரோஜியோ டாமியனோ அச்சில்லி ரத்தி எனும் இயற்பெயருடைய போப் பதினோராம் பயஸ் (1857-1939) அந்த இடத்தை அடைந்து அனைத்தையும் நிர்வகித்தது ஒன்றும் அத்தனை சாதாரண விஷயம் அல்ல.  மிக எளிமையான, தெளிவான, உறுதியான மனிதர் என்று பெயரெடுத்தவர். தன்னுடைய அதிகாரத்தை வெளிக்காட்டிக் கொள்ளும் அவசியமற்றவர், படாடோபத்தில் ஈடுபாடு இல்லாதவர். லோகாயதத்தில் மூழ்கி, அதிகார குவிப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அதையடைய போரை மட்டுமே நம்பி செயல்பட்ட உலக நாடுகளின் மத்தியில், ஆன்மீக அற அடிப்படையில் பொருளாதாரத்தையும் அரசியலையும் மாற்றியமைக்க சர்ச் மிக முக்கிய பங்காற்றியதன் பின்புலத்தில் போப் பதினோராம் பயஸ் மிக முக்கியமான காரணி.   

போப் பதினோராம் பயஸ் 


முதல் உலகப்போர் முடிந்த பின்னர் போப்பாக பதவியேற்றுக்கொண்ட பதினோராம் பயஸ், சர்சுக்கும் ஐரோப்பிய தேசங்களுக்கும் இடையில் நிலவிய தேவையற்ற பதட்டங்களையும், உரசல்களையும் தனித்து கிறித்தவ விழுமியங்களான அன்பு மற்றும் ஒத்திசைவை அடிப்படையாகக் கொண்டு பிராந்திய அமைதியை நிலைநாட்ட பெருமுயற்சி மேற்கொண்டார். அவரைப் பொருத்தவரை, ஒட்டுமொத்த மானுட குலமும் ஒருங்கிணைந்து கிறித்துவின் வழிகாட்டுதலின்படி மெய்யான அமைதியைத் தேடி பயணிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. பல சர்வதேச சமரச உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டதன் மூலம் அவர் பல விஷயங்களை உண்மையில் சாதித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். 1929, பிப்ரவரி 11 அன்று இத்தாலிய அரசுடன் லதெரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அவருடைய மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று.

இருப்பினும், அரசுடன் அவருக்கிருந்த சுமூக உறவில் ஒரு வருடத்திற்குள் மெல்ல விரிசல் ஏற்பட்டது. அதுவும் காந்தி அங்குச் சென்றதையொட்டிய காலகட்டத்தில்தான் அந்த விரிசல் அதிகமடைந்து கொண்டிருந்தது. முசோலினி தலைமையிலான ஃபாசிச அரசு சர்வாதிகார அரசாக மாறிக்கொண்டிருந்தது. குடும்ப அமைப்பையும் சிறார்களின் கல்வியையும் ஃபாசிச அமைப்பே நிர்வகிக்க வேண்டும் எனும் பிடிவாதமான கோரிக்கைக்கு வெளிப்படையாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார் போப். பெற்றோர்கள்தான் தங்கள் குழந்தைகள் எவ்வித கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும், ஒருவகையில் அது அவர்களின் உரிமையும்கூட என்று அவர் கருதினார். கடவுள் சாட்சியாக, ஒவ்வொரு மனிதனின் உரிமையையும் மாண்பையும் அவனுடைய பிறப்பு முதல் இறப்பு வரை காக்க வேண்டியது சர்ச்சின் கடமை என்று கருதினார். ஜூன் 29, 1931 அன்று அனைத்து சர்ச்சுகளுக்கும் அனுப்பிய non abbiamo bisogno எனும் சுற்றறிக்கையில் ஃபாசிசத்தைக் கண்டித்து எழுதினார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்தான் கிறித்தவ சமூக நியதிகளை (quadragesmio anno) பற்றி மே 15, 1931 அன்று அவருடைய மிக முக்கியமான சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு மாற்றாக அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டுறவுடன் செயல்பட்டு பயன்பெறும் பொருளியல் கொள்கைகளை முன்வைத்தார். தனியுடமை என்பது தனிமனிதனின் உரிமை என்று கருதினார், அத்தோடு தனி மனிதனும், அவனைச் சுற்றியுள்ள சமூகமும் அதனால் உயர்வு பெறும் என்றும் கருதினார். ஜெர்மானியத் தேசிய-இன வாதத்தையும், நாத்திக கம்யுனிசத்தையும் 1937 ஆம் ஆண்டு வெளியான இரண்டு சுற்றறிக்கைகளில் கடுமையாக விமர்சித்தார்.  

நடைமுறை தளத்தில், அவருடைய எண்ணத்தையொட்டி பல செயல்பாடுகளில் ஆர்வம் காட்டினார். கத்தோலிக்க சமூகத்தின் எழுச்சியைக் கணக்கில் கொண்டு வெவ்வேறு இனங்களின் வளர்ச்சியையும், உண்மையையும் அமைதியையும் நோக்கிய தேடுதலையே தங்கள் ஆன்ம தேடலுக்கான பயணமாக அமைத்துக்கொண்டு அதன் மூலம் சமூக மாற்றங்களை நிகழ்த்திய பலரையும் புனிதராக அங்கீகரித்தார். காலனியாதிக்கத்தை நியாயப்படுத்தும் இனவாத கொள்கைகளை கண்டனம் செய்யும் கத்தோலிக்க பாடத்திட்டத்தை ஆதரித்தார். கத்தோலிக்கர்களை சமூக செயல்பாடுகளில் முனைப்புடன் ஈடுபடுத்த ‘கத்தோலிக்க செயல்பாடு’ எனும் பெயரில் ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். மிஷனரிகள் கிறித்தவ மதத்தைப் பரப்பி அமைதியை நிலைநாட்ட வேண்டியது கடமையுள்ளவர்கள் என்றே கருதினார், அதேசமயம் அது ஐரோப்பிய மயமாக இல்லாமல் பிராந்திய கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்து புதிய வடிவம் பெற வேண்டும் என்றே விரும்பினார். இந்தியாவைப் பொருத்தவரை அவர் அந்த திசையில் பயனித்ததன் சாட்சி, சிரியன்- மலங்கரா பிரிவை ரோமன் கத்தோலிக சர்ச்சின் பிரிவாக அங்கீகரித்து இணைத்துக் கொண்டது என்று கூறலாம்.  

போப் பதினோராம் பயசைப் போல், காந்திக்கும் மானுட குலத்தைப் பற்றிய அதே கவலைகள் இருந்ததால் அவர் போப்பை சந்திக்க விரும்பியிருப்பாரோ? காந்தி ரோமுக்கு பயணப்பட முக்கிய காரணம் அவர் போப்பை சந்திக்க விரும்பியதே என்று கூறியது க்ளாஸ்கோ ஹெரால்ட் பத்திரிக்கை. ரோலாந்து காந்தி ஏன் ரோமுக்கு வரவிரும்புகிறார் என்று வினவினார், அதற்கு பதிலளித்த காந்தி “ நான் போப்பை சந்திக்க வேண்டும். எனக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறியவர் அவர், போப்பும் என்னைக் காண ஒப்புக்கொண்டால் நிச்சயம் நான் அவரை சந்திக்க வேண்டும்..”. ஆக, காந்தி போப்பை சந்திக்க முயற்சி எடுத்துக் கொள்வதற்கு முன்பே அவர்களுக்குள் ஏதோ செய்தி பரிமாறப்பட்டுள்ளது, காந்தி அது விஷயமாக ஏதோ விவாதிக்க விரும்பியிருக்கக் கூடும்.   

போப்புக்கு காந்தி மீது நல்ல மரியாதை இருந்தது என்றே தோன்றுகிறது. காந்தி ரோமுக்கு வருவதற்கு ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்னர் நவம்பர் 27 அன்று வாடிகன் சர்ச்சின் அதிகாரப்பூர்வ நாளிதழான L Osservatore Romano வில் முதற்பக்கத்தில் “காந்தி எப்படி கடவுளை பற்றி பேசுகிறார்?” எனும் தலைப்பில் ஒரு கட்டுரையைப் பதிப்பித்தது, கீழே X என்றொரு கையொப்பம் இடப்பட்டிருந்தது. கொலொம்பியா கிராமபோன் நிறுவனத்திற்கு காந்தியளித்த உரையைக் கொண்டு அவருடைய கருத்துகள் எவ்வாறு காலம்தோறும் உலகெங்கிலும் வற்றாத ஊற்றாகப் பெருக்கெடுக்கும் மெய்ஞானிகளின் போதனையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது என்று விவரித்தது. காந்தி முன்வைத்த கடவுளின் பார்வை அரிஸ்டாட்டில் மற்றும் செயின்ட் தாமஸ் போன்றவர்களின் பார்வையை ஒத்தது என்று அக்கட்டுரை கூறியது. அந்த கட்டுரையின் இறுதியில்,

இன்றைய ஐரோப்பாவின் பதட்டமான சூழல்கள் எல்லாம் வடிந்து, நம்மை விடுவிக்கும் மெய்ம்மை மீது அபாரமான ப்ரேமை கொண்டுள்ள இந்த அசாதாரணமான மனிதன் வழியாக கிறித்துவின் குரல் மீண்டும் தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது போலும்.   - என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

ரோமைன் ரோலாந்தின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள சிறு குறிப்பும் (நேரடியாக இல்லையென்றாலும்) போப்புக்கு காந்தி மீதிருந்த தனி அக்கறையை பறைசாற்றுவதாகவே இருக்கிறது. இத்தாலியின் பிரான்சிஸ்கன் ஆசிரமத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகளை பற்றிய விவகாரம் இது. எளிமையான புனித பிரான்சிஸ் வழிவந்தவர்களான அவர்கள் காந்தியின் ஆன்ம பலத்தால் ஈர்க்கப்பட்டு, தங்களுடைய  தனிப்பட்ட கருத்தை வெளியிட்டார்கள், அது அங்குள்ள மேல்மட்ட பிஷப்புகளால் கண்டனம் செய்யப்பட்டது. ஆனால், போப் அவர்களுக்கு தன்னுடைய ஆதரவையும் பாதுகாப்பையும் உறுதி செய்தார். 

போப் பதினோராம் பயசுக்கும் காந்திக்கும் ஏதாவது ஒன்றில் கருத்து வேறுபாடு இருந்திருக்குமானால், அது மிஷனரிகளின் விவகாரமாகத்தான் இருக்கும். போப், அவருடைய  ஆண்டவர் இயேசு கிறித்துவின் வார்த்தைகளை அப்படியே ஏற்று செயல்படுவது தன்னுடைய தார்மீக கடமை என்றே எண்ணினார், “உலகெங்கும் சென்று அனைத்து ஜீவனுக்கும் இந்த செய்தியை கொண்டு சேருங்கள்”. அவருடைய காலத்தில் மிஷனரிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது. அதிலும் பெரும் பங்கு தெற்காசியாவிற்கும், தென்கிழக்கு ஆசியாவிற்குமே அனுப்பப்பட்டனர். காந்தி, மிஷனரிகளின் மனிதநேய செயல்பாடுகளை பாராட்டினார், அவர்களுடைய மத கோட்பாடுகளை உபதேசம் செய்வதிலும் அவருக்கு எந்த ஆட்சேபணையும் இருந்ததில்லை, ஆனால் அதற்காக இதர மதங்களை இழிந்துரைப்பது அவருக்கு ஏற்புடையதல்ல. அதேபோல் மனிதநேய உதவியை வழங்குவதற்கு மதமாற்றத்தை ஒரு முன் நிபந்தனையாக முன்வைப்பதும் அவருக்கு ஏற்புடையதில்லை.

லதெரன் ஒப்பந்தமும் அதற்கு பின்னும்- 

போப்பிடம் இருந்த எந்த அம்சத்தின் காரணமாக  காந்தி அவரை சந்திக்க விரும்பினார்? காந்தி அங்கு வருவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வரை போப் பதினோராம் பயஸும் அவருடைய முன்னவர்களைப்போல் வாடிக்கனுக்குள் தன்னைத்தானே சிறை செய்துகொண்டார். 1870 -1929 வரையிலான காலகட்டத்தில் தங்கள் அதிகாரம் இத்தாலிய அரசால் பறிக்கப்பட்டதை கண்டித்து வாட்டிக்கன் பிரதேசத்தை விட்டு வெளியேற போப்புகள் மறுத்துவிட்டனர். ரோம் கைப்பற்றப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு புதிய அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் ஒரு சட்டத்தை இயற்றினார்கள், அதன்படி – போப்புக்கு ராஜ அதிகாரம் வழங்கப்பட்டது ஆனால் அவர் இத்தாலியின் பிரஜையாகவே கருதப்பட்டார். போப் ஒன்பதாம் பயஸ் ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்ட இந்த முடிவை ஏற்க மறுத்தார், போப்புடைய அதிகாரம் வெகுவாகக் குறைந்து விடுவதாக கருதினார். மேலும் இத்தகைய உரிமையை வழங்கிய அதே அமைப்பு இதை மீண்டும் திரும்பப்பெறும் அபாயம் உண்டு என்று கருதினார். ஆகவே உலகமுழுக்க பரந்து கிடைக்கும் ரோமன் கத்தோலிக்க அமைப்பின் தலைமையிடமான வாடிக்கன், ஒரு தேசத்து அரசின் முடிவுகளால் பாதிக்கப்படக்கூடாது, முழு சுதந்திரத்துடன் தனித்து இயங்க வேண்டும் என்றே அவர் எண்ணினார். இத்தாலிய அரசு இந்த கோரிக்கையை ஏற்கும் வரை ஆயுதப் படை உள் நுழையாத அப்போஸ்தல அரண்மனையைவிட்டு வெளியே வருவதில்லை என்று உறுதி பூண்டார். அவருடைய இந்த உறுதி அவருக்கு பிறகு போப்பாக பதவி வகித்தவர்களுக்கும் நீடித்தது. காந்தியின் மொழியில் சொல்வதானால்,  இது அவர்களுடைய ஒருவகையான சத்தியாகிரகம் என்று கூடச் சொல்லலாம், சுமார் 59 ஆண்டுகள் நீடித்தது. அதேசமயத்தில், ஐரோப்பாவை சேர்ந்த மற்ற கத்தோலிக பிரதேசங்கள் தொடர்ந்து இத்தாலி மீது இந்த பிரச்சனையை தீர்க்க அறிவுறுத்தி அழுத்தம் கொடுத்தன.   



போப் பதினோராம் பயஸ் 1922 ஆம் ஆண்டு போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதேயாண்டு முசோலினி பிரதம மந்திரியாக உயர்கிறார். இருதரப்புமே இந்த பிரச்னையத் தீர்க்க ஆவலுடன் காத்திருந்தார்கள். நீண்ட காலமாக நிலவிய கசப்புணர்வை நீக்கும் முகமாக செயின்ட் பீட்டர் தேவாலயத்தின் முகப்பிற்கு வந்து ஆசி வழங்கினார் (1870 க்கு பின்னர் மக்கள் அறியாத ஒரு நிகழ்வாகும்). முசோலினியும் அவர் பங்கிற்கு தான் ஒரு கத்தோலிகர் என்பதை பறைசாற்றும் விதமாக சர்ச்சில் வந்து 1927 ல் ஞானஸ்நானம் செய்து கொள்கிறார் அத்துடன் இத்தாலிய தேசத்து அதிகாரப்பூர்வ மதமாக கத்தோலிக்கத்தை அறிவிக்கிறார். இந்த முரண்பாடான கூட்டு சாத்தியமானதற்கு மிக முக்கிய காரணி அன்று இத்தாலி முழுவதும் காணப்பட்ட சோசியலிச அலை. இது மேலும் படர்ந்து  வளராமல் இருக்க அன்றைய ரோமன் கத்தோலிக்க சர்ச்சும், இத்தாலியின் முதலாளி சமூகமும் இத்தாலிய பிரதம மந்திரிக்கு துணை நின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த தொடர் பேச்சுவார்த்தையின் முடிவில் வாடிக்கன் மாகாணத்தின் செயலர், கார்டினல் பியேத்ரோ கஸ்பரி உடன் இணைந்து 1929, பிப்ரவரி 11 அன்று லதெரன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார். வாடிக்கன் சுதந்திர மாகாணமாக அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் இத்தாலிய பேரரசு உருவான 1861 முதல் நீண்ட காலமாக வாடிக்கன் சர்ச்சுக்கும் இத்தாலிய அரசுக்கும் இடையில் இருந்த பகை முடிவுக்கு வந்தது.   

லதெரன் ஒப்பந்தம் உண்மையில் இருதரப்பிற்கும் ‘வசதிக்காக செய்துகொண்ட திருமணம்’ போலத்தான். சுதந்திர வாடிக்கன் பிரதேசத்து தலைவராக போப் அங்கீகரிக்கப்பட்டார், இத்தாலிய கிறித்தவ சமுதாயத்தை மீள் கட்டமைப்பு செய்வதற்கு இந்த நிலை மிகவும் முக்கியம் என்று அவர் கருதினார். இத்தாலி உட்பட அனேக நாடுகளுடன் இணக்கமான உறவை நீட்டிக்க முதல்முறையாக அவருக்கு வாய்ப்பு கிட்டியது. தன்னுடைய ஆட்சிக்கு சர்ச் ஒரு தூணாக செயல்படும் என்று கருதினார் முசோலினி. உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச அளவிலும் இது மிகுந்த பயனளிக்கக்கூடியது என்பதே ஒப்பந்தத்தைப் பற்றி அவர் கொண்டிருந்த எண்ணம். சர்ச்சுடன் இணக்கமாக செயல்பட முடிவெடுத்த முதல் இத்தாலிய தலைவர் எனும் பெருமை தன்னையே சேரும் என்று அவர் கருதினார்.  

போப்பின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கும் விதமாகவே முசோலினி செயல்படத் தொடங்கினார். இத்தாலிய அரசின் சர்வாதிகார தலைமையாக தன்னை நிறுவிக்கொள்ளும் முனைப்பில் இருந்த முசோலினி, எளிய மக்கள் இயக்கமாகத் திகழ்ந்த ‘கத்தோலிக்கச் செயல்பாடு’ இயக்கத்தை அரசியல் இயக்கமாகக் கருதி முடக்க முனைந்தார். காவல்துறை மூலம் அமைப்பைக் கலைக்கவும், பொதுக்கூட்டங்களைத் தடை செய்யவும் ஆணையிட்டார். ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாண்டுகளில் அதற்கு முந்தைய ஏழாண்டுகளாக ஃபாசிசத்திற்கும் வாடிக்கனுக்கும் இல்லாத உராய்வு அதிகமானது என்றே சொல்ல வேண்டும்.

காந்தியின் வருகைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் 1931 ஆம்  வருடத்தின் வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு முற்றிற்று. போப் பதினோராம் பயஸ் சர்ச் மற்றும் கத்தோலிக செயல்பாடு இயக்கத்தினரின் மீது அரசு செலுத்திய அடக்குமுறை மற்றும் வன்முறையைக் கண்டித்து சுற்றறிக்கை அனுப்பினார். அவருக்கு தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனும் உணர்வே எஞ்சியது. “ இதற்கு முன் காட்டப்பட்ட சலுகைகளும் மரியாதையும் உண்மையில் மதத்தின்பால் இருந்த தீவிர நாட்டம் மற்றும் நம்பிக்கையின் காரணமாகவா அல்லது சர்வாதிகாரத்தை நோக்கிய திட்டமிட்ட செயல்பாடுகளா எனும் ஐயம் எழுகிறது.’ என்றார்.

முசோலினியின் ஆட்சி முறையும் அவரை வெகுவாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அடக்குமுறை, வன்முறை, கொடுமை, குடும்ப வாழ்வை சிதைத்தல், குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக ஃபாசிச கல்வியைப் புகட்டுதல் போன்றவற்றைத் தவிர்த்து, ஊடகவியலாளராக தன்னுடைய அரசியல் வாழ்வைத் தொடங்கிய முசோலினி தொடர்ந்து சுவரொட்டிகள், நாளிதழ்கள், வானொலி, திரை படம் என அனைத்து ஊடகங்களையும் திரித்து தனக்கு சாதகமாக, “தன்னையொரு எங்கும் நிறைந்த எதையும் செய்யக்கூடிய ஒப்பற்ற இத்தாலிய தலைவராக” சித்தரித்துக்கொண்டார். ஊடகம் எவ்வாறு ஃபாசிசத்தின் ஊதுகுழலாக மாறியது என்பதை போப் விளக்கினார்.   

முசோலினி 
"சத்தியத்தின் மீதும் நீதியின் மீதும் மிகப்பெரிய அளவில் திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுகிறது. ஃபாசிசத்தின் அதிகாரப்பூர்வ இதழ் மட்டுமே செய்தியை தாங்கி வருகிறது, அதுவோ தொடர்ந்து அவதூறுகளையும், பொய்களையும்,  நாள்தோறும் புதிய கற்பனைக் கதைகளையும்,  கண்டுபிடிப்புகளையும், அவர்களுக்கு ஆணையிடப்பட்ட வண்ணமே தாங்கி வருகிறது. அதிகாரபூர்வமற்ற தகவல் என்று சொல்லியே செய்திகளை வலுவாக மக்கள் மனதில் புகுத்துகிறது’

முசோலினியின் பேராசை வளர்ந்துக்கொண்டே சென்றது. அதன் வளர்ச்சிக்கு ஈடாக முசோலினியையும் அவருடைய ஃபாசிசத்தையும் எதிர்த்தவர்களின் மீதான அடக்குமுறையும் அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது. ஆங்கிலேய பேரரசிடம் இருந்து தன்னை விலக்கிக்கொண்ட முசோலினி ஹிட்லருடன் இணைய முடிவெடுத்தபோது அவருடைய பேராசை இத்தாலிய எல்லைக்கு அப்பால் விரிவது புலப்பட்டது.     

அன்றைய அடக்குமுறை மற்றும் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து போப்பால் செயலாற்ற முடியாத கையறு நிலையில் தான் இருந்தார். லதெரன் ஒப்பந்தத்தின் 24 ஆம் விதி சர்ச் அரசியல் விவகாரங்களில் சார்பு நிலை எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தியது. அன்றைய சர்வாதிகாரத்தை எதிர்த்து முடிந்தவரை இருக்கும் அதிகாரத்தையாவது தக்க வைத்துக் கொண்டாக வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருந்தது. போப்புக்கு முன்னிருந்த வாய்ப்புகள் மிகக் குறைவானவையே, ஆகவே மிகுந்த கவனத்துடன் அவர் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டியது அவசியமானது.

காந்திக்கு, போப்பை சந்திக்க கோரும்போது அன்றைய சிக்கலான சூழல் பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது. ரோமுக்கு செல்வதற்கு முன்னர், ரோலாந்திடம் அப்பாவியாக “ போப் என்னைச் சந்திக்க ஒப்பினால் அவரை சந்திப்பேன். முசோலினியைப் பொருத்தவரை, அவர் என்னை காண ஆர்வமாக இல்லை என்றே தோன்றுகிறது, ஆனால் அவர் விரும்பினால் எவ்வித தயக்கமின்றி சென்று சந்திப்பேன். ஆனால் அது தனிமையில் இருக்காது”  என்றார் காந்தி.
ஆங்கிலேய பேரரசு

சுமார் மூன்றரை நூற்றாண்டுகளாக ஆங்கிலேய பேரரசு சார்பாக வாடிக்கன் மாகாணத்தில் அதிகாரப்பூர்வ பிரதிநிதி இல்லாத சூழலில், சீர்கெட்டிருந்த உறவைப் புதுப்பித்து மேம்படுத்தும் நோக்கில் டிசம்பர் 1914ல் சில நடவடிக்கைகளில்  ஈடுபடத் தொடங்கியது இங்கிலாந்து அரசு. போர்கால நடவடிக்கை என்றே அது பார்க்கப்பட்டது, ஏனெனில் வாடிக்கனின் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் ஜெர்மானிய மற்றும் ஆஸ்திரிய குறுக்கீடு அதிகமாக இருந்துவிடுமோ என்று ஆங்கிலேய அரசாங்கம் ஐயப்பட்டது. சர் ஹென்றி ஹோவர்ட் எனும் ஆங்கிலேய கத்தோலிக்கர் இதற்காக முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1923 ல் சட்டபூர்வமாக இந்த தூதுக்குழு அங்கீகரிக்கப்பட்டது, ஆங்கிலேய வெளியுறவு துறையின் ஒரு பகுதியாக 1926 முதல் இது அறியப்படுகிறது.





ஆங்கிலேய பேரரசுடனான உறவு மீண்டும் துளிர்த்தது கத்தோலிக அமைப்பின் வளர்ச்சிக்கு உதவியது. ஆங்கிலேய ஆதிக்க பகுதிகளில் கத்தோலிக சர்ச்சுகள் எழுந்தன. இந்தியாவிலும் இலங்கையிலும் மொத்தம் மூன்று மில்லியன் கத்தோலிக்கர்கள் இருந்தார்கள். பிஷப்புகள் உட்பட திருச்சபையின் தொண்டூழியர்களில் 25 சதவிகிதம் அப்பிராந்தியத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். மீதம் 75 சதவிகிதம் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களாக இருந்தனர். கத்தோலிக மிஷனரிகளின் வேலைபளு அதிகரித்துக் கொண்டே சென்றது. இதர மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்களுக்கும் அவர்கள் பணியாற்றினார்கள். 

1930 ஆம் ஆண்டிற்கான வாடிக்கன் ஆவணங்களில் அந்த ஆண்டின் கல்வி செயல்பாடுகளை பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அதில் 3800 தொடக்கப்பள்ளிகளும், 164 உயர்நிலை பள்ளிகளும், 33 கலை கல்லூரிகளும், 32 கிறித்தவ ஆயர் பயிற்சி மையங்களும் அன்றைய தேதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்று தெரிகிறது. இந்திய வாழ் கத்தோலிக்கர்கள் காந்தியின் தலைமையில் நடைபெறும் சுதந்திர போராட்டத்தை ஐயத்துடன் அணுகினர். அதுவரை ஆங்கிலேய ஆட்சியில் அவர்களுக்கு கிடைத்த பாதுகாப்பும் சலுகைகளும் பறிபோகும் என்று அஞ்சினர். ஆகவே, வெளிப்படையாக எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றாலும், புனித போப்பாண்டவர் வட்டமேஜை மாநாடு நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். ஆனாலும் அவருக்கு இருந்த பொதுவான மனநிலை என்பது “ ஆங்கிலேய பேரரசு மற்றும் அதன் ஆளுகையின் கீழுள்ள இந்திய அரசாங்கத்தில் நிலவும் பிரச்சனைகளில் ஆங்கிலேய பேரரசுக்கு ஆதரவாக” இருப்பதாகவே இருந்தது எனக் கூறலாம். 

போப் வட்டமேஜை மாநாட்டு நிகழ்வுகளில் ஆர்வம் காட்டினார்  என்பதற்கு ஒரு நிச்சயமான சான்றாக, அனைத்திந்திய கத்தோலிக கூட்டமைப்பின் தலைவரும், வட்டமேஜை மாநாட்டின் பிரதிநிதியுமான திரு.பன்னீர்செல்வத்திற்கு வாடிக்கனில் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பைக் குறிப்பிடலாம். முதல் வட்டமேஜை மாநாடு முடிந்த தருவாயில் 7 ஃபிப்ரவரி 1931 அன்று சந்திப்பு நிகழ்ந்தது. அதன்பின்னர் ஆறுமாதம் கழித்தே இரண்டாம் கட்ட மாநாடு நடந்தது. ஆங்கிலேய பொறுப்பதிகாரி திரு.ஃபோர்ப்ஸ் அவர்களும் அப்போது உடனிருந்தார். 

பன்னீர்செல்வம் போப்பைச் சந்தித்து பத்து மாதங்கள் கழிந்தபின்னர் காந்தி ரோமுக்கு வந்தார். சர் ஜான் சைமன் அவர்களுக்கு அந்த பயணத்தை குறித்த குறிப்புகளை திரு.ஃபோர்ப்ஸ் இவ்வாறு எழுதி அனுப்பினார்..

"திரு.காந்தி டிசம்பர் 12 ரோமை அடைந்தார். மாண்புமிகு பேரரசரின் தூதுக்குழுவின் துணைகொண்டு போப்பை சந்திக்க அனுமதி வேண்டியிருந்தார். போப்புக்கு வேறு பல வேலைகள் இருந்ததால் அவரால் காந்தியை வரவேற்று உபசரிக்க முடியவில்லை. காந்தியிடம் இது எடுத்துக்கூறப்பட்டது. ஆனால், திருப்தியடையாத காந்தி வெவ்வேறு மாற்று வழிகளின் மூலம் போப்பைச் சந்திக்க பல முறை முயன்றார், ஆனால் அவை எவையுமே பலனளிக்கவில்லை."

ஃபோர்ப்ஸ் எழுதிய இந்த குறிப்பில், போப் எடுத்த முடிவில் அவருடைய பங்கு என்ன என்பதை பற்றிய தகவல் ஏதுமில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.வாடிக்கனின் ரகசிய ஆவணக் காப்பகத்தில் கிடைக்கப் பெற்ற ஃபிரெஞ்சு குறிப்புகள் ஆங்கிலேய அரசாங்கத்தின் உணர்வுகளை போப்பிடம் கொண்டு சென்றதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு என்பதையே சுட்டுகிறது. “காந்திக்கு நாம் அளிக்கும் வரவேற்பு ரோமில் உள்ள திரு.ஃபோர்ப்ஸ் மற்றும் லண்டனில் உள்ள இந்திய அலுவலகத்தால் தவறாக புரிந்துகொள்ளப்படக் கூடாது” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. வாடிக்கன் பிரதேச செயலரின் அன்றாட குறிப்பு புத்தகத்தில் உள்ள குறிப்பு ஒன்று “ஆங்கிலேய பொறுப்பதிகாரி அவர்களுக்கு வாய்மொழியாக புனிதத் தந்தையின் முடிவை தெரியப்படுத்தியாகிவிட்டது” என்று இதை ஊர்ஜிதப்படுத்துகிறது.   

ஃபோர்ப்ஸ் அவர்களுக்கு பின்னர் இரண்டாவதாக அந்த பதவியில் வந்தமர்ந்த சர் ராபர்ட் கிளைவ், சர் ஜான் சைமனுக்கு அனுப்பிய ஆண்டறிக்கையில் இத்தகவலை உறுதிப்படுத்துகிறார்.

பேரரசின் பொறுப்பதிகாரி (இவான் கிர்க்பாட்ரிக்) தனிப்பட்ட முறையில் எழுதிய ஒரு கடிதத்தில் “ இந்தியாவைப் பொருத்தவரை வாடிக்கன் ஆங்கிலேய ஆதரவு தரப்பு நிலைப்பாடையே எடுத்து வருகிறது, காரணம் அவர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் காந்தியின் எதிர் தரப்பினரிடமிருந்துதான்” என்று எழுதுகிறார். "இந்தப் பார்வையின் உண்மைத்தன்மையை அப்போஸ்தலத்தின் இந்திய பிரதிநிதி  கீர்கேல் (டச்சுக்காரர்) அவர்களுடனான சென்ற கோடை மற்றும் வசந்தகால உரையாடல்களின் வாயிலாக உறுதிப்படுத்திக்கொண்டேன். கீர்கேல் இந்திய அரசாங்கத்தை பற்றி மிக உயர்வாக பேசினார், வெவ்வேறு மிஷனரிகளை பாகுபாடின்றி நடத்துவாக கருதினார்".

சர்ச் பேரரசின் துணையுடன் தங்களது உறுப்பினர்களைப் பாதுகாக்க விழைந்தது, தடையின்றி கல்வி மற்றும் சமூகநல பணிகளில் ஈடுபட ஆங்கிலேய பேரரசின் உதவி அதற்கு தேவைப்பட்டது. பேரரசு சர்ச்சை பயன்படுத்தி அதன் காலனியாதிக்க நடவடிக்கைகளுக்கு, எதிர்ப்புகள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள முயன்றது. சர் ராபர்ட் மேலும் தொடர்ந்தார் ..

"பிராந்திய நபர்களை பேராயர்களாக நியமிப்பது தொடர்பாக நீடித்த விவாதம் ஓரளவு திருப்திகரமாக முடிவுற்றது. பிராந்திய நபர்களை நியமிப்பதற்கு முன்னர் புனித போப் அவர்களுக்கு ஏதும் அரசியல் எதிர்ப்பு எழுந்ததா என்பதை ரகசியமாக விசாரித்து தெரிந்து கொள்வார் எனும் உறுதியை கார்டினல் எனக்கு எழுத்தில் அளித்தார். மிஷனரிகளின் தலைமை அமைப்பிற்கு இதுகுறித்து அறிவுருத்துவதாகவும், புனித போப்புடனும் கலந்தாலோசிப்பதாகவும் உறுதியளித்தார்".

இதற்கு போப்பும் மிஷனரி தலைமை அமைப்பும் என்ன எதிர்வினையாற்றியது என்பது இந்த ஆய்வுக்கு அப்பாற்பட்டது. நமக்கு கிடைத்த தகவல்களை கொண்டு தொகுத்து நோக்கினால், இந்தியாவை பொருத்தவரை ஆங்கிலேய- வாடிக்கன் நிலைபாடுகள் ஒன்றையொன்று சார்ந்து இருந்தது. ஆகவே காந்தியும், அங்கு நடக்கும் சுதந்திர போராட்டமும் அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. புனித போப் ஆங்கிலேய பேரரசுடனான நீண்டகால உறவை கணக்கில் கொண்டு அதை அவசியமற்று குலைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஏனெனில் ஆங்கிலேய பேரரசின் கீழுள்ள பல டொமினியன்கள், காலனியாதிக்க தேசங்களில் கணிசமான எண்ணிக்கையில் கத்தோலிக்கர்கள் வாழ்ந்து வந்தார்கள். கத்தோலிக்கர்கள் அல்லாது பல்லாயிரக்கணக்கான இந்திய மக்களை சென்றடைந்துக் கொண்டிருக்கும் இந்திய மிஷனரிகளின் நிலையையும் அவசியமின்றி குலைக்கக் கூடாது.

காந்தி போப்பை சந்திக்க காட்டிய முனைப்பின் பின்புலத்தில், சுயராஜ்ஜியம் இந்திய கத்தோலிக அமைப்பை நிலைகுலைத்துவிடும் என்பது போன்ற அன்றைய புரிதல் பிழைகளை களைய வேண்டும் எனும் அவா இருந்திருக்கக்கூடும் என்பதை நம்மால் ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது. ஆனால், அதற்கு அவர் காட்டிய தீவிரத்தில் போப்புடனான சந்திப்பின்போதே இத்தாலிய ட்யுஸ் முசோலினியை சந்திப்பது சரியா தவறா என்று கணிக்கத் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது. 

ரோமைன் ரோலாந்தின் எச்சரிக்கை

‘பீட்டரின் கப்பல்’ (ஒரு கிறித்தவ குறியீட்டு சொல்) கடக்க வேண்டிய ஆபத்தான நீர் சுழிவுகளை கவனத்தில் கொண்டாக வேண்டும். போப்பின் ஆட்கள் துன்புறுவதற்கு மூலக் காரணமாக விளங்கும் நபரைச் சந்தித்தபின் போப் பதினோராம் பயசையும் சந்திக்க வேண்டும் என காந்தி எந்த அடிப்படையில் முடிவெடுத்தார் என்பது புரியாத புதிர்தான். ரோலாந்து தன்னால் இயன்றவரை காந்தியிடம் முசோலினியை சந்திப்பதால் நேரும் தீவினைகளை எடுத்துக் கூறினார், ஆனால் காந்தி அவைகளுக்கு செவி சாய்க்கவில்லை. ரோலாந்தின் எச்சரிக்கைகளைக் காட்டிலும் அவர் அகிம்சை மீதிருந்த உறுதிப்பாடு  மற்றும் சத்தியத்தை அடிப்படையாக கொண்ட உள்ளுணர்வையே நம்பினார். அவருடைய இந்த ஆர்வமே அவருக்கு எதிராய் திரும்பியது என்று ரோலாந்து கருதினார்:

"ஃபாசிச இத்தாலியில் அவருக்கு காத்திருக்கும் ஆபத்துகளை விளக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன், நிச்சயமாக வன்முறையை சொல்லவில்லை, ஆனால் தாகூருக்கு நிகழ்ந்தது போல் அவரையும் தங்களுடைய நோக்கத்திற்கு ஆதரவாக சித்தரித்துக் கொள்ள சில மறைமுக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்..ஃபாசிசத்தின் உண்மையான முகத்தை அவருக்கு நான் காட்டினேன். ஃபாசிச இத்தாலிக்கு எதிராக குரல் கொடுத்த ஆயிரக்கணக்கான இத்தாலியர்கள் பொய் சொல்வதற்கோ அல்லது அமைதி காப்பதற்கோ கட்டாயப்படுத்தப்பட்டு தங்கள் தார்மீகத்தை இழந்து துன்புறும் சித்திரத்தை அவருக்குக் காட்ட முயன்றேன். மேலும் காந்தியின் வருகை, அடக்குமுறையாளர்கள் அவர்கள் மீது மேலும் அடக்குமுறையைக் கையாளும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினேன்.  காந்தி எது செய்தாலும் ஃபாசிசத்தின் ஊதுகுழலாக செயல்படும் ஊடகம் அவருடைய வருகையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும், அவர்களின் கூற்றுக்கு இத்தாலியில் எவ்வித மறுப்பும் தெரிவிக்க வாய்ப்பு இல்லை."

                                                ரோமைன் ரோலாந்துடன் காந்தி 

இந்தியாவில் இருந்த போதே, ‘இந்தியாவுடன் வர்த்தக தொடர்புகள் கொண்ட நாகரீகமான மனிதர்’ என்று காந்தி கருதிய  கவுன்சல் ஸ்கார்பா எனும் நபரிடமிருந்து இத்தாலிக்கு வரச்சொல்லி அழைப்பு வந்தது என்று ரோலாந்திடம் தெரிவித்தார் காந்தி. இருந்தாலும் காந்திக்கு அவர் மீது சில ஐயங்கள் எழாமல் இல்லை.

‘இதுவரை எனக்கு இத்தாலி பற்றிய நினைவே இல்லை. ஆனால் ஸ்கார்பா மறக்கவில்லை, இதோ அவருடைய அண்மைய கடிதம். இத்தாலிய எல்லையிலிருந்து எனக்கு இரண்டு முதல் வகுப்பு பெட்டிகளை ஏற்பாடு செய்வதாக கூறியிருக்கிறார்..எனக்கு மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதே உகந்தது, எனினும் அது குறித்து நான் ஏதும் சர்ச்சையை எழுப்பலாகாது. நான் இத்தாலிய எல்லையை வந்தடையும் தேதியைத் தெரிவிக்க சொல்கிறார் ஸ்கார்பா. மேலும் நான் மிக குறுகிய காலமே அங்கு தங்குவதாக விசனப்படுகிறார். இது அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பல்ல, தன்னுடைய தனிப்பட்ட அழைப்பு என்கிறார். ஆனால் இத்தாலிய அரசு இதன் பின்புலத்தில் இருக்கிறது, ஸ்கார்பா வெறும் கருவிதான்."

இத்தனை சந்தேகங்களுக்கிடையே, அரசாங்கத்தின் சார்பில் அல்லாமல் தனிப்பட்ட முறையில்தான் அழைக்கிறேன் எனும் ஸ்கார்பாவின் வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரோலாந்திடம் காந்தி கூறுவது உண்மையில் வியப்பளிக்கிறது. இத்தாலியில் உள்ள பல நண்பர்கள் காந்தியை அழைத்திருந்தாலும்கூட, ஸ்கார்பாவின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அவர் அங்கு ஒரு நாள் மட்டுமே செலவிடத் திட்டமிட்டிருந்தார். ஸ்கார்பாவின் அழைப்புக்கு இணங்கி, தான் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவேன் எனும் ஒரு நிபந்தனையுடன் இத்தாலிய பண்பாட்டு கழகத்தில் பேச ஒப்புக்கொண்டார். ரோலாந்து மேலும் குழம்பினார். காந்தி என்ன பேசவிருக்கிறார் என்பதல்ல அங்கு பிரச்சனை, அது எவ்வாறு ஊடகங்களில் வெளிவரும் என்பதே அவருக்கு பெரும் கவலையாக இருந்தது. அவரைப் பொருத்தவரை பண்பாட்டு கழகம் என்பது  “மாபெரும் அறிவுஜீவிகளால் நிரம்பியது, ஆனால் அவர்களுக்கு மனசாட்சி என்பதே இல்லை. மேலும் அவர்கள் ஆபத்தானவர்கள், ஏனெனில் அவர்கள் பொய் பேசுபவர்கள்”. காந்தி அவராகவே அவசியமற்ற ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார் என்பதை உணர்ந்த ரோலாந்து, காந்தியிடம் தொடர்ந்து தன் பார்வைகளை வலியுறுத்தினார்..

ரோலாந்து: வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் நீங்கள் பேசுவதை குறிப்பெடுக்க அனுமதி வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நீங்கள் சொல்வது திரிக்கப்படாமால் முழுமையாக வெளிவருமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

காந்தி- இத்தகைய ஏற்பாடுகளை செய்தாக வேண்டும் எனும் நிபந்தனைகளை விதிப்பது என்னுடைய இயல்புக்கு மாறானது.

ரோலாந்து- நீங்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள். வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் உட்பட உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அனைவருமே ஃபாசிஸ்டுகளாக இருப்பார்கள்.

காந்தி- நானறிவேன். ஆனால் அவர்களுடைய வியூகங்களை எனக்கு ஒரு பொருட்டல்ல..என்னை எதுவும் தடுக்க முடியாது. எனக்கு தோன்றுவதை நான் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையே என்னுடைய நிபந்தனையாக முன்வைப்பேன்.. அதுவும் அது சம்பந்தமில்லாத ஏதோ வேறு விஷயங்களை பற்றி இருக்காது, இதுதான் சரி என்றெனக்குப்படுகிறது, நான் வேறு மாதிரி நடந்துக்கொள்ள முடியாது...

ரோலாந்து- நீங்கள் பேசுவதை யாரும் தடுத்திட மாட்டார்கள் என்றே நம்புகிறேன், ஆனால் செய்தித்தாள்களில் அவை திரித்து சொல்லப்படும் என்றே அஞ்சுகிறேன்..

காந்தி- நான் சொன்னதை அவர்கள் அப்படியே வெளியிடமாட்டார்கள் அல்லது திரித்து வெளியிடுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். இங்கிலாந்திலும் அப்படித்தான் நடந்தது.பாரிசில் நான் பேசியதும் திரிக்கப்பட்டது. ஆனால் யங் இந்தியாவில் நான் என்ன பேசுகிறேனோ அதன் முழு வடிவம் வெளியாகும்..

ரோலாந்து- மற்றொரு ஆபத்தும் இருக்கிறது. நீங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றுவீர்கள், அது இத்தாலிய மொழியில் மொழியாக்கம் செய்யப்படும். நீங்கள் சொன்ன அர்த்தத்தில் பொருள் கொள்ளப்படாமல் போகலாம்..யார் அதை சரி பார்ப்பார்கள்? ஆகவே தட்டச்சு செய்யப்பட பிரதியொன்றை கோருங்கள்..

காந்தி- அங்கு உரையாற்றுவது என்னுடைய கடமையென்று எண்ணுகிறேன், ஆகவே கடவுளை நம்பி என் போக்கிற்கு பேசப்போகிறேன்..அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் என்னால் ஈடுபட முடியாது..

ரோலாந்து- மீராவும் தேசாயும் நீங்கள் உரையாற்றும் சமயங்களில் உங்களுடனேயே இருக்க வேண்டும்..

காந்தி- ரகசிய சந்திப்புகள் எதுவும் இருக்காது. ரோமுக்கு நான் எந்த நோக்கத்துடன் செல்கிறேன் என்பதே முக்கியம். சில நேரங்களில், நம் செயல்களுக்கு உடனடி பலன் என எதுவும் இருக்காது, ஆனால் நீண்டகால பலன் ஏதேனும் இருக்கக் கூடும். இந்த பயணத்தின் உடனடி விளைவு என்பது ஊடகம் என்னுடைய கருத்துக்களை திரித்து வெளியிடும். ஆனால் ஒரு நல்ல செயல் நிச்சயம் நீண்டகாலம் சென்றாலும்கூட நல்ல விளைவை ஏற்படுத்தும். ஆகவே நான் துணிந்து செயல்பட வேண்டும் என்று நம்புகிறேன், நான் எந்தவித உட்சலனத்திற்கும் அடிபணிய மாட்டேன் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். ஓரளவிற்கு மேல் நம்மால் வருங்காலத்தை கணிக்க முடியாது. நாம் ஏதேனும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.

சந்தேகம் இருந்தாலும் கூட மற்றவரை திறந்த மனதுடன் அணுகுதல், ஆபத்தின் அருகாமையில் கூட எச்சரிக்கையாக இருக்க மாட்டேன் எனும் பிடிவாதம், ஒரு நல்ல முடிவின் விளைவு நீண்டகாலம் பிடித்தாலும் நல்ல விளைவையே ஏற்படுத்தும் எனும் அவரது கர்ம நம்பிக்கை, எதிரியாக இருக்கக்கூடும் என்றறிந்த பின்னரும்கூட கடவுளை முழுவதுமாக நம்புவதால் எதிரியையும் நம்பும் அவரது மனப்பாங்கு – என இவையனைத்துமே காந்திக்கும் அவரை சார்ந்திருந்த இந்திய மக்களுக்கும் மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தும் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. ரோலாந்தின் எச்சரிக்கை எத்தனை துல்லியமானது என்பதையும் இத்தாலிய உள் விவகாரங்களை அவரைக் காட்டிலும் நன்கறிந்த மூத்த நண்பரின் ஆலோசனைகளைப் புறக்கணித்து தானே உண்மையை அனுபவப்பூர்வமாக அறிந்துணர வேண்டும் எனும் காந்தியின் மாறுபட்ட பரிசோதனையின் துணிவையும் வரலாறு நிரூபிக்கும் காலம் அன்று வெகு தூரத்தில் இல்லை.      

காந்தி அவருடைய முடிவில் பிடிவாதத்துடன் உறுதியாக இருந்ததை அடுத்து, ரோலாந்து அவருடைய நம்பிக்கைக்குரிய நண்பரான ஜெனெரல் மோரிஸ் என்பருக்கு ரோமில் காந்தியை அவருடன் தங்க வைத்துக்கொள்ளுமாறு தந்தி அனுப்பினார். முப்பது மணி நேரத்திற்கு பின்னர் அவரிடமிருந்து ரோலாந்திற்கு பதில் வந்தது.
காந்தி- முசோலினி சந்திப்பு

டிசம்பர் 12 காலை 8.30 மணிக்கு காந்தி ரோமை வந்தடைந்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். இத்தாலிய விமானப்படையின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகித்த ஜெனரல் மோரிசின் இல்லமிருந்த மொண்ட் மரியோவில் தங்கினார் காந்தி. அங்கு வந்தவுடன் தன்னுடைய நாட்குறிப்பில், “போப் என்னை வரவேற்க இயலாது எனும் செய்தியைத் தாங்கி வந்த ஒரு கடிதம் கிடைத்தது” என்று எழுதுகிறார் காந்தி.

அன்று மதியம் வாடிக்கன் அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்தார், மாலை ஆறுமணிக்கு முசோலினியை அவருடைய அரண்மனையில் (palazo venezia) சந்தித்தார். ஸ்கார்பாதான் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். காந்தியுடன் ஜெனெரல் மோரிஸ், மீராபென் மற்றும் மகாதேவ் தேசாய் ஆகியோர் முசோலினியை சந்திக்க சென்றனர்.


முசோலினி அறையின் குறுக்கே நடந்து காந்தியைச் சந்திக்க வந்தார், அவருக்கும் மீராவிற்கும் அமர இருக்கை அளித்தார். ஆனால் முதிர்ந்த ஜெனரலையும் தேசாயையும் அவர் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் காந்தி ஜெனரல் மோரிஸ் நோக்கி கை காண்பிக்க, முசோலினி சடாரென்று அவரைப் பொருட்படுத்தாததுபோல் “எனக்குத் தெரியும் ..எனக்குத் தெரியும்” என்று அடுத்த விஷயத்திற்கு தாவினார். 

மீரா பென் அந்த சந்திப்பு குறித்தான நினைவுகளை பகிர்கிறார்..

"காந்தியை நோக்கித் திரும்பிய முசோலினி கச்சிதமான ஆங்கிலத்தில் அவருடன் பேசத் தொடங்கினார், இந்தியாவை பற்றி பல கேள்விகளை அவரிடம் தொடர்ந்து கேட்டார். பத்து நிமிடங்கள் கழிந்த பின்னர் எங்களுடனான சந்திப்பு முடிவுக்கு வந்தது என்பதை உணர்த்தும்முகமாக அவருடைய இருக்கையிலிருந்து எழுந்து நின்றார், அறையின் வாயில்வரை எங்களுடனேயே வந்தார்".

தேசாய் அவர்களுக்கிடையிலான உரையாடலை முழுமையாக பதிவு செய்திருக்கிறார்..

மு- உங்களுக்கு இத்தாலி பிடித்திருக்கிறதா?

கா- உங்களின் இந்த அழகிய தேசம் எனக்கு பிடித்திருக்கிறது..

மு- நீங்கள் போப்பை சந்தித்தீர்களா?

கா- என்னை சந்திக்க அவர் நேரம் ஒதுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஞாயிறன்று யாரையும் சந்திப்பதில்லை என்று அறிகிறேன். இன்று காலை அவருக்கு வேறு பணிகள் காத்திருந்தன போலும்.

மு- வட்டமேஜை மாநாடு முடிந்துவிட்டதா?

கா- ஆம், எனினும் இன்னும் சிலப்பணிகள் எஞ்சியிருக்கின்றன. இப்போதைய சூழலில், அது தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காரிய கமிட்டியொன்று உருவாக்கப்பட்டுள்ளது, அதன் பணி தொடரும் என்றே எண்ணுகிறேன்.

மு- அதனால் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் பயன் விளைந்துள்ளதா?

கா- இல்லை, ஆனால் இதன்மூலம் பெரிதாக எதுவும் நடந்துவிடும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

மு- இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது?

கா- இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது..ஒவ்வொரு நாளும் சுரண்டப்படுகிறார்கள்..வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் பெரும் பங்கு ராணுவப் பராமரிப்பிற்கே செலவிடப்படுகிறது.. 

மு- உங்கள் அடுத்த திட்டம் என்ன?

கா- நான் மீண்டும் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் வரலாம்..

மு- இந்து- இஸ்லாமிய பிரச்சனையை எப்படி கையாளப் போகிறீர்கள்

கா- தொடர் முயற்சிகளின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.என்று நம்புகிறேன்..உண்மையான இஸ்லாத்தின் பிரதிநிதியாக திகழும் பல தலைவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள்.. அவர்கள் காங்கிரசுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

மு- உங்களால் பிளவை சரி செய்து இணைப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

கா- எனக்கு அதில் இம்மியளவும் சந்தேகமில்லை.

மு- நீங்கள் இந்தியாவிற்கு பூரண சுதந்திரத்தைக் கோருகிரீர்களா?

கா- ஆம், அதேசமயம் இங்கிலாந்துக்கு சமானமான இடத்தில் நின்றுகொண்டு அவர்களுடன் சேர்ந்து இயங்குவதை நான் விலக்கவில்லை. இன்று இங்கிலாந்து இந்தியாவை சுரண்டுகிறது, அந்த சுரண்டல் நின்றவுடன் நாங்கள் பிரித்தானியாவுடன் சேர்ந்து செயல்படுவதில் எங்களுக்கு தடையேதும் இல்லை.

மு- உங்கள் தேசத்திற்கு ஜனநாயக அமைப்பு வேண்டும் என்று எண்ணுகிறீர்களா.?

கா- ஆம், நிச்சயமாக. எங்களுக்கு ஜனநாயக அமைப்புதான் வேண்டும்.

மு- ஒரேயொரு நபர் அனைத்தையும் நிர்மாணிக்கும் ஆட்சிமுறையை பற்றி எப்போதாவது சிந்தித்ததுண்டா?

கா- இல்லை. ஒரு நல்ல ஆட்சியமைப்பு வெவ்வேறு தரப்புகளை சரியாக பிரதிநிதப்படுத்தவேண்டும்

மு- இந்தியாவில் கம்யுனிசம் வெற்றியடைய முடியும் என்று எண்ணுகிறீர்களா?

கா- இல்லை. நான் அப்படி எண்ணவில்லை.

மு- இங்கிலாந்தில் எத்தனை மாதங்களாக தங்கியிருந்தீர்கள்?

பாபு இரண்டு மாதம் என்றார், மீரா பென் மூன்று மாதம் என்று அதைத் திருத்தினார். முசோலினியின் கவனம் அவரை நோக்கி திரும்பியது..

மு- ஐரோப்பாவின் நிலவரத்தைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

கா- நான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த கேள்வியை நீங்கள் எழுப்பிவிட்டீர்கள். ஐரோப்பா இதே பாதையில் பயணித்தால் நன்மை பயக்காது. இதற்கு ஒரே மாற்று அதன் ஒட்டுமொத்த பொருளியல் பார்வையையும் அடியோடு மாற்ற வேண்டும், ஒட்டுமொத்தமாக அதன் வாழ்வும் வாழ்க்கை விழுமியங்களும் மாற வேண்டும். அது எழுப்பியிருக்கும் இந்த உயர்ந்த கோபுரம் எத்தனை முயன்றாலும் அதிக நாள் நீடித்து நிலைக்காது.  

மு- கிழக்கும் மேற்கும் சந்திக்கவே முடியாதா?

கா- ஏன் முடியாது? மேற்கத்திய நாடுகள் கிழக்கைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன, அது நிறுத்தப்பட்ட மறு நிமிடம், ஒருங்கிணைந்து செயல்பட அதன் கதவுகள் திறக்கப்படும்.

அதுவே தனது பார்வையும் என்றார் முசோலினி. இத்தாலி மற்றும் ரோம் காந்தியைக் கவர்ந்திருக்கும் என்று நம்புவதாக முசோலினி காந்தியிடம் தெரிவித்தார். 

கா- ஆம், இத்தாலி ஒரு அழகிய தேசம், ரோம் ஒரு அற்புதமான நகரம். எனது பயன்பாட்டிற்காக முதல்வகுப்பு ரயில்பெட்டியை ஏற்பாடு செய்து தந்தமைக்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மு- தயவு செய்து அது குறித்து நீங்கள் எதுவும் எண்ணவேண்டாம்..

காந்தி உள்ளே நுழைந்த சமயத்தில் முசோலினி புருவத்தை மேலுயர்த்தி நோக்கியதும் காந்தி மீண்டும் கிளம்பிய தருணத்தில் முசோலினி இருக்கையை விட்டு எழுந்து நின்றதும் ஜெனரல் மோரிசுக்கு அசாதாரணமான சமிக்ஞை எனப் பட்டது. முசொலினிக்கு காந்தியை சந்திப்பதில் தனிப்பட்ட முறையில் ஆர்வம் இருந்தது என்றே தோன்றுகிறது. மீரா பென் உடனிருந்ததால் முசோலினியுடனான உரையாடல் அதிக நேரம் தொடரவில்லை என்பதே காந்தியின் அபிப்பிராயமாக இருந்தது. காரணம் மீரா பென் ஆங்கிலேய அரசின் உளவாளி என்று முசோலினி சந்தேகித்திருக்கக்கூடும் என்று காந்தி எண்ணினார். இந்தச் சந்திப்பை பற்றி மகாதேவிடம் கொஞ்ச காலத்திற்குப் பின்னர் நினைவு கூர்ந்த காந்தி “ அவருடைய கண்கள் பூனையை ஒத்திருந்தன. கவனித்தீர்களா?” “சைத்தானின் கண்களை ஒத்திருந்தன,” என்றார் மகாதேவ். காந்தி அவருடைய இந்த மதிப்பீட்டிற்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.   

முசோலினியை பற்றி காந்தி கொண்டிருந்த கருத்து என்னவெனில் “பொதுவாக அவர் ஒன்றும் மனிதநேயமிக்கவராகத் தென்படவில்லை. ஆனால் அவர் என்னிடத்தில் நன்றாகவே நடந்துகொண்டார் என்பதையும் சொல்லத்தான் வேண்டும். போப் என்னைச் சந்திக்க இயலாமல் போனது என்பதை அவரிடம் தெரிவித்தபோது, அவர் முகத்தில் ஒரு விதமான குறும்புத்தனமான திருப்தியைக் காண முடிந்தது”.  

முசோலினியின் ரகசிய திட்டம்

அந்த ஆண்டின் டிசம்பர் பனிரெண்டு இரவை அவரால் அத்தனை எளிதில் மறக்க முடியாது. ஃபாசிஸ்டுகளின் கவனிப்பில் மிலனிலிருந்து ரோமுக்குப் பயணமானது, பின்னர் முசோலினியை சந்தித்தது, காந்தியின் நினைவுகள் மீண்டும் ஃபாசிசத்தின் இயங்குமுறை குறித்து ரோலாந்து கொடுத்த எச்சரிக்கைகளை நோக்கிச் செலுத்தியிருக்கும். காந்தி தன் பங்கிற்கு சில அனுபவங்களைப் பெற்றிருந்தார். ஆனால் முசோலினியை நோக்கி நியாயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ அவருடைய டைரியில் கூட எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை.

நேர்மாறாக ரோமைன் ரோலாந்து நுணுக்கமாக அனைத்து தகவல்களையும் பதிவு செய்தார். இரண்டுமாதங்கள் கழிந்த பின்னர் ஃபிப்ரவரி 4, 1932 அன்று ஜெனரல் மோரிசின் நெருங்கிய நண்பர் டிமிட்ரியோ ஹெல்பிஜ் தற்செயலாக ரோலாந்தை சந்தித்தார். அவர் மூலம் அங்கு நடந்தவற்றை முழுமையாக கேட்டறிந்தார்.   

முதலில், ரோலாந்து ஜெனரல் மோரிசுக்கு காந்தியை அழைத்துக்கொள்ளச் சொல்லி அனுப்பிய தந்தி இத்தாலிய அரசின் உளவுத்துறையால் இடைமறிக்கப்பட்டு, பின்னர் ஒரு இத்தாலிய உளவு அதிகாரி மூலம் ஜெனரலிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. இதன் காரணமாகவே ரோலாந்திற்கு பதிலனுப்ப அவருக்கு முப்பது மணிநேரம் பிடித்தது. ஆகவே காந்தி சுவிட்சர்லாந்திலிருந்து மிலனுக்கு வரும் தகவல் அரசாங்கத்திற்கு முழுமையாகவே தெரிந்திருந்தது. ஹெல்பிஜ் சொன்னவற்றை ரோலாந்து தன்னுடைய நாட்குறிப்பில் பதிவு செய்தார்:

"காந்தி அவருடைய மூன்றாம் வகுப்பு பெட்டியில், இரவில் மிலனை வந்தடைகிறார். ஸ்டேஷன் மாஸ்டர் அவரை வரவேற்று உபசரிக்கிறார், அவர் இத்தாலியில் தங்கியிருக்கும் காலத்தில் இத்தாலிய அரசின் விருந்தினராகவே நடத்தப்படுவார் என்று தெரிவிக்கிறார். அவருக்காக ஒரு முதல் வகுப்பு பெட்டியும் மூன்றாம் வகுப்பு பெட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எதை வேண்டுமானாலும் அவர் தேர்ந்தெடுக்கலாம் என்று சொன்னப்பின்னர், காந்தி முதல் வகுப்பு பெட்டியைத் தேர்ந்தெடுத்தார் “ஏனெனில் அவர் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை” என்று கருதினார். அவருக்கு ஒதுக்கப்பட்ட பெட்டி அற்புதமாக இருந்ததோடு மட்டுமின்றி அந்த ஒட்டுமொத்த ரயிலே சிறப்பு ரயில்தான். வழக்கமான எக்ஸ்ப்ரஸ் வண்டிகளைக் காட்டிலும் இருபது நிமிடம் முன்னரே ரோமை சென்றடைந்தது.  

மோரிசும் ஹெல்பிஜும் வழக்கமான ரயில் நேரத்தை கணக்கில் கொண்டு அங்கு சற்று தாமதமாகத்தான் சென்று சேர்ந்தார்கள். இதைப் பயன்படுத்தி ஃபாசிச நரிகள் அதைக் கணக்கில் கொண்டு காந்தியை அவர்களிடமிருந்து பிரித்து அழைத்து சென்றுவிடலாம் எனும் திட்டத்தில் இருந்தார்கள். காந்தி ரயிலைவிட்டு இறங்கும்போது அவரை இரண்டு பெண்கள் வரவேற்றார்கள், அவர்கள் காந்தியை காரில் யாரோ ஒருவரின் வீட்டிற்கு விருந்தினராக அழைத்துச் செல்ல வந்திருப்பதாக அவரிடம் தெரிவித்தார்கள். அந்த நபர் ஒரு பெருமுதலாளி, ஒரு ஃபாசிஸ்ட், அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கும் இந்திய இத்தாலிய தூதரக அதிகாரி ஸ்கார்பாவின் நெருங்கிய நண்பர்.
அவரை அழைத்துச் செல்ல வரவேண்டியவர் நெடுநேரமாகியும் வராத சூழலில், வேறு எவராக இருந்தாலும் நிச்சயம் ஒப்புக்கொண்டு சென்றிருப்பார், ஆனால் இந்தக் கிழவர் என்னை நம்பினார். பிடிவாதமாக அவர்கள் சொல்வதைக் கேட்காமல் தன் பெட்டியின் மூலைக்குச் சென்று அமர்ந்தார். அவர் ரோமில் ரோமைன் ரோலாந்தின் நண்பர் ஜெனரல் மோரிசுடன் தங்க வேண்டும், அவர் வரும்வரை அந்த பெட்டியை விட்டு இறங்க மாட்டேன் என்றார். ரயில்வே நிர்வாகத்திற்குப் பெரும் தர்மசங்கடத்தை இது ஏற்படுத்தியது. வேறு ஃபிளாட்பாரத்திற்கு ரயிலை அவர்களால் கொண்டு நிறுத்தி அடுத்தடுத்த வண்டிகளுக்கு இடம் விட முடியவில்லை.  

                          மைக்கேலேன்ஜெலோ வரைந்த லாஸ்ட் ஜட்ஜ்மென்ட் 


ஒருபாடாக மோரிசும் அவருடைய நண்பரும் வந்து சேர்ந்தார்கள். மோரிஸ் அவருடைய காரில் மீராவையும் காந்தியையும் அவர்களுடன் வந்த ஆங்கிலேய காவலதிகாரியையும் ஏற்றிக்கொண்டு கிளம்பினார். ஹெல்பிஜ் மற்ற இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இன்னொரு காரில் புறப்பட்டார். அவரால் மோரிசின் காரைப் பின்தொடர முடியவில்லை, அந்த அளவிற்கு அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி இத்தாலிய காவலர்களால் விரிவாகிக்கொண்டே போனது, மொண்ட் மரியோவிற்கு அருகேதான் அவர்களை தாண்டி மோரிசின் காரை ஹெல்பிஜ் நெருங்க முடிந்தது. மோரிசின் காருக்குப் பின்னால் ஐந்தாறு கார்கள் மலைச் சாலையில் வரிசையாக ஏறிக் கொண்டிருப்பதை கவனித்த ஹெல்பிஜ், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நண்பரின் இல்லத்தைப் பாதுகாப்பது முக்கியம் என கருதி அதுவரை விட்ட வேகத்தை பிடித்து மோரிசின் காருக்கு பின்னால் மற்றவர்களை முந்திக்கொண்டு வந்துவிட்டார். மோரிசின் கார் உள்ளே வளைந்த பிறகு ஹில்பிஜ் தன்னுடைய காரை வளைத்து திருப்பி பாதையை மரித்தார். பின்னாடியிருந்து கூக்குரல்கள் எழுந்தன, ஆனால் ஹில்பிஜ் பொருட்படுத்தவில்லை. சில காவலர்கள் கத்திக்கொண்டே அவரை நோக்கி ஓடி வந்தனர். அப்போது வண்டியை நகர்த்த முடிவு செய்கிறார், ஆனால் அதற்குள் மோரிசுக்கு முன்னேறிச் செல்லப் போதுமான கால அவகாசம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். அவர்கள் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தார்கள், அதற்குள் காவலர்கள் உள்ளே நுழைந்துவிட்டிருந்தார்கள், ஒருவர் தொலைபேசியருகேயும் மற்றொருவர் விருந்தினர் அறையின் வாயிலிலும் நின்றனர், காந்தி உதிர்க்கும் ஒரு சொல்கூட தவறவிடாதபடி ஏற்பாடுகள் இருந்தன.

காந்தி அங்கு நிலவிய கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்காமல் இல்லை. ஒருகட்டத்தில் அவர் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்த ஹெல்பிஜ் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று “இப்போது எல்லாவற்றையும் கூறுங்கள்” என்றார். வாயைத் திறந்த ஹெல்பிஜ், காந்திக்கு பின் நின்றுக்கொண்டிருந்த மோரிசின் மனைவி காட்டிய சைகைகளை கவனித்தார், அவரால் எதுவும் அந்த நேரத்தில் விளக்க இயலவில்லை என்றே சொல்ல வேண்டும். அப்படியே பேச்சை திசை திருப்பி அவர்கள்முன் பரந்து விரிந்திருந்த ஆகாயத்தைச் சுட்டிக்காட்டி “இதோ இந்த அழகான வானத்தை பாருங்கள், நம்மை ஆகர்ஷிக்கும் இயற்கையின் பரந்து விரிந்த வடிவம், இது நமக்குரியதே. இன்னும் இது நமக்குரியதே..இதுவும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டால் அதை விட பெரிய சோகம் ஏதும் கிடையாது..” என்றார் அவர்.

ஏற்கனவே காந்தி தன்னுடைய அழைப்பை நிராகரித்து ஜெனரலின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்கு சென்றதை எண்ணி முசோலினி சற்றே ஏமாற்றமடைந்திருந்தார். ஆகவே அனைவரும் வாயை இறுக மூடிக்கொண்டிருந்தனர், யாரும் அவரை மென்மேலும் எரிச்சல்படுத்த விரும்பவில்லை. காந்தி அங்கிருந்த சமயத்தில் அவருக்கு எதுவுமே சொல்லப்படவில்லை, அவரும் எதையுமே கேட்கவில்லை.

காந்தி ரோமுக்கு வந்ததற்கு முக்கிய காரணம் போப்பைச் சந்திக்கத்தான் எனினும் மதியம் அருங்காட்சியகங்களின் இயக்குனர் கமாண்டர் பர்டோலோமீயோ நோகரா அவர்களால் வாட்டிகன் அருங்காட்சியகம் சுற்றிக்காட்டப்பட்டது. பின்னர் காந்திக்கும் அவருடன் வந்த இந்தியர்களுக்கும் முசோலினியின் ரோமின் சாதனைகள் என கருதப்படும் பள்ளிக்கூடங்கள், உடற்பயிற்சிகூடம், பிரசவ கூடங்கள், ஏழைகளுக்கான இலவச இல்லங்கள் ஆகியவை ஸ்கார்பாவின் ஏற்பாட்டில் சுற்றிக்காட்டப்பட்டு விளக்கப்படுகிறது.   பின்னர் அங்கிருந்து காண்டேசா கர்நேவாளி இல்லத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார், ரோலாந்தின் பார்வையில் “பெண்ணிய ஆடம்பரம் மற்றும் படாடோப பகட்டின் கடைந்தெடுத்த வடிவம்” என்றே அவரைக் கருதினார். அங்கு ஜியோர்நெல் இத்தாலியாவின் “ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைக்கூட தெரியாத’ இயக்குனரும், முசோலினியின் நெருங்கிய நண்பருமான  விர்ஜினியோ காய்டா வசித்தார். காந்தி அன்று மாலை ஆறு மணிக்கு முசோலினியை சந்திக்கிறார். பதிமூன்றாம் தேதி அவர் ரோமிலிருந்து ப்ரிண்டிசிக்கு புறப்பட்டார் பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்கு மறுநாள் கப்பலேறினார்.

ஜியோர்நெல் இத்தாலியா

ரோமைன் ரோலாந்து காந்தியின் வார்த்தைகள் ரோமில் திரிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். ஆனால் அதைவிட மோசமான நிகழ்வு அங்கே நடந்தேறியது. ஜியோர்நெல் இத்தாலியா எனும் செய்தித்தாள் காந்தியுடனான ஒரு நேர்காணலை வெளியிட்டது. அதில் காந்தி புறப்படுவதற்கு முன்னர் அதன் ஆசிரியர் விர்ஜினியோ காய்டாவிற்கு காந்தி பிரத்யேகமான நேர்காணல் அளித்தார் என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன்னர்,” ஆனமட்டும் அரசுடன் உரசலை தவிர்க்கிறேன்” என்று சர் சாமுவேல் ஹோருக்கு காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். அந்த நேர்காணல் உண்மையில் சர் சாமுவேலுக்கு பயங்கர அதிர்ச்சியை அளித்தது. உடனடியாக அவருக்கு தந்தி அனுப்பி, இவையெல்லாம் உண்மையில் நீங்கள் சொன்னதுதானா என்று கேட்டார்


1.       வட்டமேஜை மாநாடு இந்திய தேசம் மற்றும் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு இடையிலான உறவை உறுதியாக சிதைத்துவிட்டது.

2.       இப்போது இந்தியாவிற்கு திரும்புவதற்கு முக்கியகாரணம், இந்தியாவை அடைந்தவுடன் மீண்டும் இங்கிலாந்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கத்தான்.

3.       இப்போதைய சூழலில் செய்யப்படும் ஒத்துழையாமை ஆங்கிலேயர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கும் என்பதால் மிக முக்கியமானது.

4.        நாங்கள் வரி செலுத்த மாட்டோம், நாங்கள் இங்கிலாந்திற்காக எவ்வகையிலும் பணியாற்ற மாட்டோம். ஆங்கிலேய அதிகார வர்க்கம், அவர்களின் அரசியல் மற்றும் அமைப்புகளை முற்றிலுமாக தனிமைப்படுத்துவோம், அனைத்து ஆங்கிலேய நுகர்வுப் பொருட்களையும் புறக்கணிப்போம்.

டிசம்பர் 17 அன்று சைத் துறைமுகத்தை அடைந்த காந்தி அங்கிருந்து உடனடியாக, ‘ஜியோர்நெல் இத்தாலியா’ நேர்காணலே முற்றிலும் தவறானது என்று தகவல் அனுப்பினார். அவர் ரோமில் எந்த பத்திரிக்கையாளருக்கும் பேட்டியளிக்கவே இல்லை. அவர் இந்தியாவை சென்றடைந்தவுடனே நிச்சயம் எந்த நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுபடப்போவதில்லை என ஆங்கிலேயர்களுக்கு உறுதியளித்தார். மேலும் அப்படி ஏதேனும் நேரடி போராட்டம் தொடங்க வேண்டிய துர்பாக்கியமான சூழல் ஏற்பட்டால், உறுதியாக அதுகுறித்த தகவல்களை முன்னரே அதிகாரிகளிடம் தெரிவிப்பேன் என்றார்.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஏற்கனவே இதனால் பல இழப்புகள் ஏற்பட்டுவிட்டன. ஐரோப்பிய எதிர் ஃபாசிஸ்டுகள் முசோலினியை காந்தி சந்தித்ததையும் அவர்களுடைய சதிகளில் ஏமாறியதை எண்ணியும் வருந்தினர். காந்தியின் மனப்பாங்கை பற்றி ஒரு பத்திரிக்கை “வெகுளி” என்று எழுதியது.

ஆங்கிலேய அரசாங்கத்தில் சிலருக்கு இந்திய தேசிய காங்கிரசுடனான சமாதான உடன்படிக்கை ஒரு தவறான செயல் என்ற நம்பிக்கையே இருந்தது. அவர்களுக்கு ஏதுவாக இந்த விவகாரம் கிடைத்ததால், அதைக்கொண்டு காங்கிரஸ் மற்றும் காந்தி மீதான பிடியை இறுக்க நினைத்தனர். இந்தியாவிற்கு எதிராக ஆங்கிலேயர்களிடத்தில் இருந்த கொந்தளிப்பைக் கண்டு காந்திமீது மரியாதைக் கொண்டிருந்த சர் சாமுவேல் ஹோர் கூட மகிழ்ச்சியடைந்தார் என்றே சொல்ல வேண்டும். “ஏற்கனவே காங்கிரசை முடக்க அவரிடம் பல்வேறு திட்டங்கள் இருந்தன; இப்போது அவைகளைத் தொடங்குவதற்கு அவர் அனுமதியளித்தார், அதாவது காங்கிரசை முடக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்”

காந்தி கப்பலில் இந்தியா வந்தடைவதற்கு முன்னரே, ஐக்கிய மாகாணத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அனைத்து அரசியல் மற்றும் பொது செயல்பாடுகளை முடக்கும் வகையில் அவை இருந்தன. பிள்ளைகளின் தவறுகளுக்கு பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் பொறுப்பேற்று தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றுகூட அது சொன்னது. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நேரு அவருடைய சுயசரிதையில் இவ்வாறு எழுதுகிறார்..

"அந்த நேர்காணல் உண்மையில் யாரும் எதிர்பாராதது. அத்தகைய ஒரு நேர்காணலை அவர் ரோமில் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. நுணுக்கமாக ஆராய்ந்தபோது அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பல வாக்கியங்களும் சொற்களும் அவர் பொதுவாக பயன்படுத்தாதவை, ஆகவே அவருடைய மறுப்பு வெளிவருவதற்கு முன்னரே செய்திதாளில் உள்ளது போன்ற ஒரு நேர்காணலை அவர் வழங்கியிருக்க மாட்டார் என்பதை உணர்ந்து கொண்டோம். அவர் சொல்ல வந்த கருத்தை மிகவும் திரித்து வெளியிட்டார்கள் என்றே எண்ணினோம். அதன் பின்னர் அவருடைய அதிகாரபூர்வ மறுப்பு வந்தது, ரோமில் எவருக்கும் எந்த நேர்காணலும் அளிக்கவில்லை என்றார். யாரோ அவரை ஏமாற்றிவிட்டார்கள் என்பது தெளிவானது. ஆனால், ஆச்சரியமாக இப்போது ஆங்கிலேய ஊடகங்களோ பொதுமக்களோ அவரை நம்பத் தயாராக இல்லை, அவரை பொய்யர் என்றே கருதினர்!"

இந்தியா வந்தவுடன் காந்தி வைஸ்ராயை சந்திக்க அனுமதி கோரினார். ஆனால் அவர் ஒத்துழையாமை மற்றும் சட்ட மறுப்பு போராட்டத்திற்கு அனுமதி கோரி சந்திக்க வருகிறார் எனும் அச்சத்தில் வைஸ்ராய் சந்திக்க மறுத்துவிட்டார். காந்தி தொடர்ந்து தன்னுடைய நிலைப்பாட்டை விளக்க வாய்ப்பளிக்குமாறு கோரினார், ஆனால் அவை எதுவுமே பலனளிக்கவில்லை. அதற்குப் பின்னர் ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து எத்தனையோ முறை அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டன. ஜனவரி நான்கன்று காந்தி பாம்பே மணிபவனில் கைது செய்யப்பட்டு அங்கிருந்து 190 கி.மீக்களுக்கு அப்பாலுள்ள எரவாடா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அன்று மேலும் நான்கு புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன, இந்திய அரசாங்கமும் காங்கிரசும் தடைசெய்யப்பட்டன.   

ஸ்விட்சர்லாந்தில் காந்தியின் நண்பர் ரோமைன் ரோலாந்து நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பற்றி பேசினார். காந்தி நிச்சயம் வெகுளியல்ல என்றே அவர் கருதினார். இதைக் காட்டிலும் கடுமையான சோதனை காலங்களிலும் காந்தி அமைதியாக பட்டும்படாமல் இருந்து அதிலிருந்து மீண்டு வந்ததை அவரறிவார். ஆனால் காந்தியில் இந்த முடிவு அவர் சக்தி இழந்து தவிக்கும் எந்த மக்களுக்காக போராடுகிறாரோ அம்மக்களுக்கு விரும்பத்தகாத எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதினார். “நான் மதிக்கும் நபர்களின் சுதந்திரத்தை நான் அதீதமாகவே மதிக்கிறேன். அனைத்து உண்மைகளையும் அவர் முன் பரப்பிய பின்னர் அவரையே முடிவெடுத்துக்கொள்ள அனுமதித்தேன். ஆனால் நான் அவருக்கான முடிவை எடுத்திருக்க வேண்டும்” என்று வருந்தி புலம்பினார்.

எதிர்பாராத சந்திப்பு

ஒட்டுமொத்தமாக நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து நோக்குகையில், காந்தி வில்லேநியுவின் புனிதர் ரோமைன் ரோலாந்துடனான சந்திப்பை வெகுவாக போற்றினார் என்றே தோன்றுகிறது. இந்தியாவிலிருந்து அத்தனை சிரமங்களுக்கு இடையிலும் அவரைக் காண்பதற்கு என்றே அவர் பயணித்திருந்தால் கூட அது பயனுள்ளதாகவே இருந்திருக்கும். வட்டமேஜை மாநாட்டின் புண்ணியத்தில் சந்திப்பு சாத்தியமானது. ரோமை பொருத்தவரை “ரோமை என் வழித்தடத்தில் எதிர்பாராவிதமாக எதிர்கொள்ள நேர்ந்தது, தொன்மையான இந்த பிரம்மாண்ட நகரின் சில பகுதிகளை என்னால் ரசிக்க முடித்து, மேலும் இத்தாலியின் கேள்விக்கு அப்பாற்ப்பட்ட சர்வாதிகாரியான முசோலினியையும் சந்திக்க நேர்ந்தது” என்றார். முசோலினியை சந்திக்க விரும்பி தானே விழைந்து எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை, ஆனால் அதே நேரம் ஒரு ஃபாசிச சூழலில் துணிவுடன் அவர் முன்னிலையில் பேசும் வாய்ப்பு தன்னை நோக்கி வந்தபோது அதை தயக்கமின்றி பயன்படுத்திக்கொண்டேன் என்றார். போப்பை சந்திக்க முடியாது போனதை அவர் எப்படி எடுத்துக்கொண்டார்? இதையும் அவர் சமநிலையுடன்தான் எதிர்கொண்டார் என்று தோன்றுகிறது. விருப்பு வெறுப்பு மற்றும் பற்றுதல் இன்றி வாழ அவர் தன்னை நீண்டகாலமாகவே பழக்கிக் கொண்டிருந்தார். ஆகவே அவரால் தோல்வியையும் வெற்றியையும் ஒரே சமநிலையுடன் எதிர்கொள்ள முடித்து. ரோமைன் ரோலாந்து விடுத்த எச்சரிக்கைகளுக்கு அவராற்றிய எதிர்வினையில் அவருடைய மனவுறுதி நமக்கு புலப்படுகிறது.  

"எனது வாழ்வில் நான் வந்தடைந்திருக்கும் ஒவ்வொரு முடிவும் எனது கல்வியில் மிகச்சிறிய பங்களிப்பாற்றிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வந்தடைந்தது அல்ல. என்னுடைய வழிமுறை எக்காலத்திற்கும் பொருந்துவது. எனது ஒவ்வொரு முடிவும் எனது தனிப்பட்ட அனுபவங்களின் பின்புலத்தில் தோன்றியது. இதில் பிழைகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை உறுதியாக ஏற்கிறேன். சில குறிப்பிட்ட நம்பிக்கைகளை தங்களுடைய அனுபவம் எனும் காரணத்தால் அதிலிருந்து விலக முடியாமல் தவிக்கும் மனப்பிறழ்வுக் கொண்டவர்கள் சிலரை நானறிவேன். அத்தகைய மனப்பிறழ்வு கொண்டவர்களுக்கும் எனக்குமிடையில் மிக மெல்லிய இடைவெளியே உள்ளது. இருப்பினும்கூட, எனக்கு வேறுவழியில்லை, நான் அவைகளை நம்பியே ஆக வேண்டும். கடந்த காலத்தில் ரிஷிகள் உள்ளுணர்வு சார்ந்து தங்கள் அனுபவங்களை பதிவு செய்துள்ளனர், அனைவரும் இப்போது அவற்றை உண்மை என்றே நம்புகின்றனர், வரலாற்று சோதனையை கடந்து இன்றும் அவைகள் நிற்கின்றன. நானும் என்னுடையவைகளை அடிப்படை அற்றவைகள் அல்ல என்று அப்படித்தான் எண்ண விழைகிறேன்."

சத்தியத்தின் வலிமையில் நம்பிக்கை கொண்டு, காந்தி மனிதர்களை அவர்களின் இயல்பிலேயே ஏற்றுக்கொண்டார். அவர்களை அவர் மதிப்பிட்டதன் வழியாகவோ அல்லது அவர் விரும்பியபடியோ இருந்தால் மட்டுமே ஏற்பேன் எனும் பிடிவாதப் போக்கு ஏதும் அவரிடத்தே இல்லை. மனிதர்களை அவர் நம்பினார், அவர்களுடைய நல்லியல்புகளை நோக்கி தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தார். அவருடைய பக்கத்தில் அந்த உறவை ஆத்மார்த்தமாகப் பேண முயற்சித்தார். சில நேரங்களில் அவருடைய நம்பிக்கை தோற்றுள்ளது, ஆனால் அதன்பொருட்டு அவர் ஒருபோதும் தன் சமநிலையை இழந்துவிடவில்லை, கடவுளே சத்தியம், சத்தியமே கடவுள் என அவர் நம்பியதால் உள்ளார்ந்த அமைதியுடன் அவர் அனைத்தையும் அணுக முடிந்தது.

நல்லன நிலவ வேண்டும் எனில் , அவரவர் சத்தியம் என்று உணர்வதை வாழ்க்கையாக கொண்டாக வேண்டும். “நமது இன்றைய தேவையெல்லாம்,அகிம்சை மற்றும் நன்னம்பிக்கையின் திருவுருவமாக ஒரு மனிதர் தோன்ற வேண்டும்”.

டிசம்பர் 12, 1931 அன்று காந்தி அப்படிப்பட்ட ஆளுமை ஒருவரை சந்தித்தார். வாடிகன் அருங்காட்சியகத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. உலகின் தலை சிறந்த ஓவியர்களின் தலை சிறந்த படைப்புகளை கண்டு ரசித்த பின்னர் அவர் 1492 முதல் போப்புகள் தேர்ந்தெடுக்கப்படும் சிஸ்டின் தேவாலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்களும், ராஃபேலின் கைவண்ணமும் மிளிரும் தேவாலயம். வண்ணங்களும், வெவ்வேறு குறியீடுகளும், பல மரபார்ந்த வழிபாடுகளும் நிறைந்த அந்த தேவாலயத்தில், மைக்கேல் என்ஜெலோவின் புகழ் பெற்ற லாஸ்ட் ஜட்ஜ்மென்ட் ஓவியம் பின்புறத்தில் இருக்க காந்தியின் கவனம் உயர்ந்த பீடத்தின் மீதிருந்த சாதாரண மரச்சிலுவை மீது விழுந்தது. ஒரு சாமானிய பயணி பெரும்பாலும் மைக்கேல் என்ஜெலோவின் ஓவியத்தில் உள்ள சிதிலமடைந்த உடல்களில் சிக்கித்தவிக்கும் ஆன்மாவின் மீது தான் தன் கவனத்தை குவித்திருப்பான். ஆனால் காந்தி சுற்றிப்பார்க்க வந்தவரும் இல்லை, சாமானியரும் இல்லை. சிலுவைக்கு முன்பு வந்து அப்படியே உறைந்து நின்றார். கரங்களிலும், கால்களிலும் ஆணியடிக்கப்பட்டு சிலுவையில் குற்றுயிராக தொங்கிக்கொண்டிருக்கும் அரையாடை அணிந்த கிறித்துவை தியானித்தார். அந்த பிம்பத்தை சுற்றி சுற்றி வந்து வெவ்வேறு கோணங்களில் பார்த்தார். இடம்வலமாக பிரதக்ஷிணம் செய்தார். அவருடைய கண்கள் பனித்திருந்ததை மீரா கவனித்தார். தேவாலயத்திலிருந்து வெளியேறும்போது தேசாயிடம் “ கண்ணீரைத் தடுக்க இயலவில்லை” என தாழ்ந்த குரலில் கூறினார்.    

போப் அவரை சந்திக்க மறுத்தார். முசோலினியின் விவகாரமான விருந்தோம்பல் போன்றவைகளுக்கு அப்பால் அவருக்கு மிகப்பிடித்த வரிகளை எழுதிய அந்த சிலுவைக்காரரை சந்தித்தார் காந்தி. சில நாட்களுக்குப் பின்னர் இந்தியாவிற்கு கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த போது அந்த நினைவுகளை எழுதினார்.

"வாட்டிகனில் சிலுவையில் அறையப்பட்ட கிறித்துவின் பிம்பத்திற்கு முன்னர் தலைகுனிந்து வணங்கும் பாக்கியம் கிட்டியதற்காக நான் என்ன செய்தாலும் தகும். அந்த வாழும் சோகத்திலிருந்து அத்தனை சுலபமாக என்னை தனியே பிய்த்து பிரித்துக்கொள்ள முடியவில்லை. வேறு வழியே இல்லை, தனிமனிதர்களை போல் தேசமும் சிலுவையின் வலியை உணராமல் மீட்சியை அடைய முடியாது என்பதை அந்த நொடியில் உணர்ந்து கொண்டேன். பிறரைத் துன்புறுத்துவதில் இல்லை மகிழ்ச்சி, மாறாக வலிய துன்பங்களை சுமப்பதிலேயே மகிழ்ச்சிப் பிறக்கிறது. ஆகவே நான் மனமுடைந்து ஊர் திரும்பவில்லை, மாறாக எனது நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது."

அவர் சென்று வந்த கலாப்பூர்வமான இடங்களை பற்றி ஒரு அன்பர் அவரிடம் வினவினார், அதற்கு வாட்டிகன் அருங்காட்சியகத்தை பற்றி இவ்வாறு சொன்னார்

"அங்கிருந்த சில ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அங்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தங்குவதற்கு எனக்கு வாய்ப்பு கிட்டினால், தினமும் அங்குள்ள சிற்பங்களையும் ஓவியங்களையும் நுணுக்கமாக ஆராய்வேன். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சிற்பத்தை நான் அங்கு கண்டேன். நான் முன்னரே எழுதியிருக்கிறேன், அதுதான் என்னை அதிகமாக ஈர்த்தது."

அந்த சிலுவை அவரிடம் உரையாடியிருக்க வேண்டும், தவிர்க்க முடியாத சுதந்திர போராட்டத்தில் இயன்றவரை பெருந்தன்மையுடன் அவர் நடந்துகொள்ள வேண்டும் என்பது அவருடைய புனித கடமை என்பதை நினைவுறுத்தியது போலும். மும்பையை வந்தடைந்தவர், அங்கு ஆசாத் மைதானில் கூடிய மகத்தான கூட்டத்திற்கு முன்னர் உரையாற்றினார். சிலுவை குறிக்கும் தியாகத்தை சுமந்துசெல்ல மக்களை தயார் படுத்தும் விதத்தில் அவருடைய உரை அமைந்தது என்றே கூற வேண்டும்..

"நமது போராட்டம் அன்பை அடிப்படையாக கொண்டது. நாம் அரசாங்கத்தையே எதிர்த்து போராடுவதாக இருந்தாலும், நமது ஆயுதம் அன்பாகத்தான் இருக்க வேண்டுமே தவிர வெறுப்பிற்கு இடமில்லை.. இது துயரத்தைத் தாங்குவதற்கான போராட்டம்..நம்முயிரைக் கொடுக்கும் போராட்டம் இது, உயிரை எடுப்பதல்ல..சென்ற ஆண்டு நாம் லத்தியடிகளைத் தாங்கினோம்..இந்த ஆண்டு நாம் துப்பாக்கி தோட்டாக்களை தாங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும். நாம் மரண பயத்தை வென்றாக வேண்டும், ஒருவேளை நாம் மரணத்தை தழுவ வேண்டி இருந்தால் நாம் ஒரு நண்பனை ஏற்பதுபோல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் உயிரைக் கொடுக்க தயாராக இருக்கும் அதே வேளையில், ஆங்கிலேயர்களின் ஒற்றை முடிகூட அதனால் துன்புறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ..அகிம்சை எந்த கல் நெஞ்சையும் உருக்கும் என்று நான் நம்புகிறேன்.."

காந்தியின் வாட்டிகன் பயணம் அவர் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. ஆனால் அந்த எதிர்பாராத அம்சம் அவருக்கு அபார நம்பிக்கையை ஊட்டியது. அவருக்கு “ வாழும் கிறித்து என்பது வாழும் சிலுவைதான், அதில்லையென்றால் வாழ்க்கை ஒரு நடைபிணம்தான்”  என்ற தீர்மானம் தந்தது.




(குறிப்பு- கட்டுரைக்கு கோன்சால்வ்ஸ் ஏகப்பட்ட தரவுகளை அடிக்குறிப்புகளாக இணைத்துள்ளார். அவைகளை மூலக்கட்டுரையில் வாசித்து தெரிந்துகொள்ளலாம்)

-நரோபா

No comments:

Post a Comment