காவிக்கல் சிகப்பு மண் விரவிய மாபெரும் நிலவெளி. முஷ்டி மடக்கி நீண்டிருக்கும் ஒற்றை நடுவிரல் போல் அங்கு ஓர் ஒற்றை பனை மரம். மண் அதிர்கிறது , முள்ளம்பன்றி சிலிர்த்து முட்கள் எழுவது போல் மண்ணிலிருந்து எழுகிறது. மண் விழித்துக் கொண்டுவிட்டது. முட்கள் நிறமற்று இருந்தன, அவை அடர்ந்து பச்சையாகின. பச்சைப்பெருவெளி. பச்சை மா மலைப்போல் மேனி! பவழவாய் கமல செங்கம். பவழ வாய் எங்கே!? வானில் உருண்ட முந்திரிப்பழம் ஒன்று தெரிந்தது, ஆ..அதோ இருக்கிறது பவழ வாய்..முந்திரிப்பழம் பழுத்து சிவந்து வெடித்தது ..விதை மழை பொழிந்தது. விதை வெடித்து ஒன்று எழுந்தது, அது புற்களை தின்றது, உருண்டு திரண்டு ம்மா வென்று அழைத்தது..ஒரு சேர ஆயிரம் குரல், ஒற்றை சுருதியில் ம்மா....அம்மா தாயே பிரகிருதி..இறங்கி வரமாட்டாயா? ..உண்டு செரிக்காத இரண்டு கத்திப் புல் காதுக்கு மேலே முளைத்து வளைந்து கொம்பானது. ..பச்சை மறைந்தது..கொதிக்கும் கரிய திரவம் குதத்தின் வழியாக பீறிட்டது ..கரிய சேற்றுக்குழி, குமிழ்கள் தோன்றி மறைகின்றன அதில். மழி ஓய்ந்த பின்னர் பேரிடி ஓசை. குத்தி கிழிக்கப்படுகிறது மண். கொம்பிழுத்து செல்கிறது. செம்மையும் பச்சையும் கருப்பும். ..ஒரு தண்டு தெரிகிறது, அது வளர்கிறது ..நீள்கிறது ..போகிறது..உச்சியில் ஒற்றைப்பூ பூக்கிறது, அது பழுக்கிறது..சிவக்கிறது..ஒளிர்கிறது..மண் சிலிர்க்கிறது ..நனைகிறது..பச்சை துளிர்க்கிறது.
Tuesday, 11 December 2012
Friday, 23 November 2012
காந்தியும் போப்பும்
காந்தி இன்று தளத்தில் வெளியான மொழியாக்க கட்டுரையின் முழு வடிவம்,,
காந்தி சந்திக்க விரும்பி அவரை சந்திக்க மறுத்தவர்கள் வரலாற்றில் இருவர் மட்டுமே உண்டு. ஒருவர், அந்நாளைய ஆங்கிலேய பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், அவர் காந்தியை எப்படி அணுகினார் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மற்றொருவர் அன்றைய ரோமன் கத்தோலிக்க அமைப்பின் தலைவர், போப் பதினோராம் பயஸ். சுமார் எண்பது வருடங்களுக்கு முன்னர் போப்பை சந்திக்கும் எண்ணத்தில் காந்தி ரோமுக்கு பயணித்தார். துரதிருஷ்டவசமாக, போப் பதினோராம் பயஸ் காந்தியை சந்திக்க இயலவில்லை, மாறாக வாட்டிக்கன் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். ஊடகங்கள், வாட்டிக்கன் தரப்பு அதன் உடை நியதிகளைக் கடுமையாகப் பின்பற்றியதே காரணம் எனக் கடுமையாக விமரிசித்தன.
Sunday, 21 October 2012
சரக சம்ஹிதை
(அண்மைய சொல்வனம் இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை )
ஆற்றங்கரையோரம் பிரம்மாண்டமாக கிளைபரப்பி நிற்கும் ஆலமரத்தடியில் நீள்சடையும் வெண்தாடியும் புரள அமர்ந்திருந்தார் வெள்ளுடை தரித்த அந்த ரிஷி, கூடியிருக்கும் ஆறு சீடர்களும் விடைபெறும் நாளன்று. யுகம் யுகமாக பெருமௌனத்தில் ஆழ்ந்திருந்த கரும்பாறை உயிர்பெற்று உதிர்க்கும் முதல் சொல்லைப்போல் தன் அகத்தின் ஆழத்திலிருந்து வார்த்தையை துழாவி மௌனத்தை துளைத்தார் குருநாதர் ‘ விதைகள், நீங்கள் அறுவரும் ஆறு ஆலம் விதைகள், முளைத்தெழுந்து வனமாகுங்கள், களைத்தோருக்கு நிழல் தாருங்கள், அலைவோருக்கு அடைக்கலம் ஆகுங்கள்,’ .. தலைகுனிந்து விசும்பும் சீடர்களை நோக்கிச் சலனமின்றி பேசினார், ‘இதுவே உங்கள் இறுதி வேள்வி, நீங்கள் அனைவரும் எனக்குச் சமமெனினும் - வான்மழை சமமாக பொழிந்தாலும் நாழியின் ஆழம் பொருத்தே நீர் தங்கும், இது உங்களுக்கான சோதனை, உங்கள் ஆழத்தைக் கண்டுகொள்ள, உங்களை நீங்களே அறிந்துகொள்ள, பிணி நீக்கும் மருந்துவத்திற்குப் பயன்படாத பொருளொன்றை ஒரு யாமத்திற்குள் கொண்டு வாருங்கள். காரியம் சித்தியடையட்டும்’, கண்மூடி மென்முறுவலுடன் காத்திருந்தார் குரு.

Saturday, 20 October 2012
தரம்பால் எழுதிய ’காந்தியை அறிதல்’
தாரக் நாத் தாஸ், அமெரிக்காவிலிருந்து வெளிவந்த அவருடைய நாளிதழான ‘ப்ரீ இந்துஸ்தான்’ இதழில் 1908 ஆம் ஆண்டில் எழுதிய உணர்ச்சிபூர்வமான கட்டுரைகளுக்கு எதிர்வினையாற்றும் விதமாக லியவ் டால்ஸ்டொய் ‘இந்துவுக்கு எழுதும் ஒரு கடிதம்’ ( a letter to a hindu) எனும் விரிவான பதில் கட்டுரையை எழுதினார். இந்தியாவின் ஆன்ம பலத்தை எடுத்துக்காட்டும் விதமாக பல இந்திய ஆன்மீக இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்ட அந்தக் கடிதத்தைக் கண்ட காந்தி அதை தென்னாஃப்ரிக்காவிலும் இந்தியாவிலும் மறுபிரசுரம் செய்ய டால்ஸ்டொயிடம் அனுமதி வேண்டிக் கடிதம் எழுதுகிறார்.
இரு மிக முக்கியமான சிகரங்கள், ஒருவர் தன் மகத்தான வாழ்வின் இறுதி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருந்தவர், மற்றொருவர் இந்தியாவின் சரித்திரத்தையும் அதன் மூலம் உலக சரித்திரத்தையும் மாற்றி எழுதப் போகிறோம் எனும் பிரக்ஞை ஏதும் இல்லாத மத்திய வயதுக்காரர்
.

Friday, 19 October 2012
அகிம்சையின் வெற்றி
(சொல்வனம் இதழில் வெளியாகிருந்த எனது கட்டுரை)
அகிம்சைக் கொள்கை காலாவதியாகிவிட்ட நம்பிக்கைகளின் போராட்டம். ஏதோ ஒரு வரலாற்று காலகட்டத்தில் வாழ்ந்த இளகிய மனம் கொண்ட இளிச்சவாய் எதிர் தரப்பினருக்கு எதிராக அது வேலை செய்துள்ளதே தவிர, அதை இன்றும் சுமந்துகொண்டு செல்வது அபத்தம். மேலும் அது வீரர்களின் வழியல்ல, உண்மையில் அது ஆண்மையற்ற போராட்ட முறை ஆகவே அதை கொண்டு எந்த பிரச்சனையையும் தீர்த்திட முடியாது
இது போன்ற குரல்கள் தெருமுனை டீ கடை முதல் தொலைக்காட்சி விவாதங்கள் வரை மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இத்தகைய கருத்துகளை முன்வைப்பவர்கள் அதன் பின்புலமாக எந்த ஆதாரங்களையும் சுட்டுவதில்லை.

ஆன்ம வல்லமையை எதிர்த்து: காந்தியும் விமரிசனங்களும் – மைக்கேல் பிளாட்கின்
(தமிழில் காந்திக்காக இயங்கி வரும் தளமான, காந்தி-இன்றில், சில மாதங்களுக்கு என்னுடைய மொழிபெயர்ப்பு கட்டுரை ஒன்று நான்கு பகுதிகளாக வெளியானது.)
மைக்கேல் பிளாட்கின் , அமெரிக்காவில் நியு யார்க் மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார். ப்ரூக்ளின் பல்கலைகழகத்திற்கு அவர் சமர்பித்த ஆய்வு கட்டுரையான resistance to the soul: gandhi and his critics ன் தமிழாக்கம் இது. இக்கட்டுரையில் காந்தியை விமரிசிக்கும் நான்கு முக்கியமான தரப்புகளான இந்துத்துவ தரப்பு, மார்க்சிய தரப்பு, பாகிஸ்தான் முஸ்லீம் தரப்பு மற்றும் தலித் தரப்பினரின் சாராம்சமான குற்றசாட்டுகளை தொகுத்து அளிக்கிறார். குறிப்பாக மார்க்சிய தரப்பின் குரலாக இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கும் ரஜனி பாமி தத் முன்வைக்கும் குற்றசாட்டுகளை விரிவாக முன்வைத்து அதற்கு பதிலளிக்க முயல்கிறார். இந்துத்த்வ குரலாக விளங்கும் சவார்க்கார் முன்வைத்த குற்ற சாட்டுகளுக்கும் பாகிஸ்தானிய முஸ்லீம்களின் குரலாக ஒலிக்கும் சர்வார் ஹுசைனின் குற்றசாட்டுகளும் பரஸ்பரம் நிரப்பி கொள்வது காந்தியின் சமநிலைக்கு எடுத்துக்காட்டு என்று கூறலாம். இறுதியாக அம்பேத்கார் கொள்கை ரீதியாக காந்தியுடன் மாறுபடும் இடங்களை கோடிட்டு காட்டுகிறார்.

Subscribe to:
Posts (Atom)